Ad

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

“தியாகராஜன் குமாரராஜா ஒரு முரட்டுத்தனமான புத்திசாலி!”

நுணுக்கமும், மனிதாபிமானமும், சமூகம் மீதான அக்கறையும், மிகையில்லாத நடிப்பும் கொண்டு வரும் ஒரு சில இயக்குநர்களில் ‘சூது கவ்வும்’ நலன் குமரசாமிக்கு நிச்சயம் ஓர் இடம் இருக்கிறது. போன வாரம் முழுவதும் நலனின் ‘காதலும் கடந்து போகும்’ பட வெளியீட்டின் ஐந்தாண்டு நிறைவை சோஷியல் மீடியா கொண்டாடியது. அது எதையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல், எப்போதும் பார்க்கிற அதே நலன். அவரிடம் கொஞ்சம் காபி... அதிகம் பேச்சு என நடந்தது இந்தச் சந்திப்பு.

``உங்கள் படங்களின் தனித்தன்மையான பகடி எங்கே இருந்து வருது?’’

“நிறைய பேர்கிட்ட இருந்து எடுத்து உருவாக்குறதுதான். எவ்வளவோ சொல்லலாம்... `காதலிக்க நேரமில்லை’, `பலே பாண்டியா,’ `ரத்தக்கண்ணீர்’; சந்திரபாபு, பாக்கியராஜ், மணிவண்ணன், பாண்டியராஜன், கிரேசி மோகன் இப்படி எவ்வளவு பேர் மேலே நாம நிற்கிறோம்னு நமக்கே தெரியாது. 2000-ல் இன்டர்நெட் வந்த உடனே டோரன்ட் வருது. ப்ளீஸ் நோட், திருடிப் பார்த்ததில்லை. உடனே டவுன்லோடு பண்ணி லெப்ட், ரைட் படங்கள் பார்க்கிறோம். சில படங்கள் நம்மை அசத்துது. சில டைரக்டர்ஸ் மாட்டுறாங்க.. புதுத் தொனி தென்படுது. கொஞ்சம் அடாப்ட் பண்ணி செய்து பார்க்கிறோம். நம்ம சரக்கு அவங்க சரக்கு எல்லாம் கலந்து ஒண்ணு வருது. அது தனித்தன்மையாகிடுது. நான் தப்பிச்சது எங்கேன்னா, டோரன்ட் மற்றும் அயல் சினிமாக்களை ரொம்ப லேட்டா பார்க்க ஆரம்பிச்சேன். அதனால் போதுமான அளவு நாட்டுச்சரக்கு உள்ளே இறங்கிடுச்சு. இல்லேன்னா என் படங்கள் ரொம்ப அந்நியமா ஒட்டாமல் போயிருக்கும்.”

`` உங்கள் படங்களில் அபத்தம் எப்படிக் கைகூடி வருது..?’’

“சீரியஸானவங்க எப்போதும் இந்த உலகத்தைச் சுமந்துகிட்டுத் திரியுறாங்க. மத்தவங்களைப் பார்த்தால் இவர்களுக்குக் கடுப்பு வரும்... இல்லேன்னா ஏளனமா இருக்கும். அவங்க மத்தவங்கன்னு நினைக்கிறது யாரைன்னா கவலையில்லாமல் திரியுற மக்களை... அதை நாம் ஏத்துக்க முடியாதுல்ல, அதுக்கு ஒரு எதிர் யுக்தியாதான் அபத்தம் இருக்கும். ஏன்னா அபத்தம்ங்கறது சீரியஸ் அணுகுமுறையை ஒரு நக்கல் நையாண்டி சேர்த்து காலி பண்ணிடுது. கூடவே `இப்ப என்ன பண்ணுவே’ அப்படிங்கிற திமிரும் அதுல இருக்கு. அது எனக்கு உகந்த பாணியா இருக்கு. இப்படியாக என்னுடைய தேவை களுக்கு ஏற்ப ரசனை உருவாகுது.”

``புத்தக வாசிப்பு சினிமாவுக்குத் தேவையாய் இருக்கா?’’

“ஒரு பாடிபில்டர் ஜிம்முக்குப் போற மாதிரிதான், திரைக்கதை எழுத்தாளர் புத்தகங்கள் வாசிப்பது. தன் மனதில் பல புதிய உலகங்களை உருவாக்குவதற்கான பயிற்சியை வாசிப்பு மூலமாகப் பெறலாம். ஏன்னா வாசிக்கும்போது உங்க மனசு அந்த டீட்டெய்லை எடுத்து உலகங்களை உருவாக்குது. மனசுக்கு அந்தப் பயிற்சி முக்கியம். ஒரு கதை உருவாகும்போது ரிவர்ஸில் அதே விஷயம் நடக்குது. மனம் முதல்ல உலகத்தைக் கற்பனையில் உருவாக்குது. அதை உணர்ந்து நீங்கள் எழுதறீங்க. ஜிம்முக்குப் போற மாதிரின்னு அதனாலதான் சொல்றேன். அதே நேரத்தில் அதைப் பயிற்சின்னு நினைத்துப் படிக்க வேண்டியதில்லை. அனுபவித்துப் படிக்கணும். அதுதான் நல்லது.”

``சுவாரஸ்யமா யோசிக்க வைக்கிற படம் செய்ய முடியும்னு நிரூபிச்சிட்டு ஏன் நீண்ட இடைவெளிகள்?’’

“90 மார்க் வாங்கின கதை வந்தாதான் படம் பண்ணுவேன்னு அடம்பிடிக்கிறது. அந்த அதி அற்புதமான 90 மார்க் கதைங்குறது, மைண்ட் பிளாக்குன்னு லேட்டாதான் புரிஞ்சது. அது ‘சூது கவ்வும்’ வாங்கிக் கொடுத்த பெயரும் புகழும் ஏற்படுத்தின பயம். தொழில்னு வந்திட்டால் 70 மார்க் படமே குட்தான். 70 மார்க்கிற்குக் குறையாமல் படம் பண்ணிக்கிட்டே இருக்கணும். சிலது 90 மார்க் ஆயிடலாம். அது நம்ம கையிலே இல்லைங்கிறது புரிய தாமதம் ஆச்சு. அதிகப்படியான யோசனைதான் என் எதிரி. இனிமே சீரான இடைவெளியில் படம் செய்ய முயற்சி பண்றேன்.”

``தியாகராஜன் குமாரராஜா ஸ்கிரிப்ட்ல வேலை செய்த அனுபவம்...’’

“ஸ்கிரிப்டில் வேலை பார்த்ததில் பெரிய வித்தியாசம் இல்லை. அவர் லைன் சொல்லி எழுதிட்டேன். அது விஷயமே இல்லை. ஆனால் தலைவன் தியாகராஜன் குமாரராஜாவே ஒரு ஸ்கிரிப்ட்தான். அதைத் தெரிஞ்சுகிட்டதுதான் சுவாரஸ்யம். அவரு இங்கே நமக்கு சரியா யாரும் போட்டி இல்லைன்னு, உண்மையிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ்னு அறியப்படுகிற கொஞ்சம் பேர் இருக்காங்கல்ல, அவங்களோட போட்டிக்கு இறங்கிட்டாரு. அதாவது `முரட்டுத்தனமான புத்திசாலித்தனம்’னு ‘சூது கவ்வும்’ல ஒரு டயலாக் வரும்ல அந்த மாதிரி... அதைப் பார்த்துத்தான், ஓ... இப்படியும் விளையாடலாமான்னு தோணுச்சு. என்னைப் பொறுத்தவரை அந்த இன்டர்நேஷனல் குவாலிட்டி ரொம்ப தூரத்துல இருக்குன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்படி இல்லைன்னு அவரைப் பார்த்த உடனே புரிஞ்சுச்சு. இன்னொரு முக்கியமான விஷயம்... என் படங்கள் தாமதம் ஆகுறதுக்கு இந்த மாதிரி ஆளுங்களோட நட்பும் ஒரு காரணம்.”

``வடிவேலுக்குப் படம் செய்ய முயன்றீர்கள்...’’

“ஆமாங்க. அவருக்கு போன் பண்ணி `செம கதை ஒண்ணு மாட்டியிருக்கு. முடிச்சிட்டு வர்றேன்’னு பில்டப்லாம் குடுத்துட்டு, அப்புறம் போன் பண்ணி `அந்தக் கதையை முடிக்க முடியலை, இப்போ ஒரு கொரியன் ரீமேக் பண்றேன். மன்னிச்சிடுங்க... கதை முடிச்சதும் வர்றேன்’னு சொல்லிட்டேன்.”

``கதை முடிஞ்சதா?’’


“கதை முடிஞ்சது. இப்ப வடிவேல் சார் வேண்டாமுன்னு தோணுது. ஏன்னா இந்த சூது கவ்வும்ல விஜய் சேதுபதி வருவார்ல, அந்த மாதிரி ஒரு ரோல்... வடிவேலு சாரை இதுக்கு கன்வின்ஸ் பண்ண முடியுமான்னு தெரியலை. வடிவேலு சாருக்கு அவர் மீட்டர்லேயே ஒண்ணு பண்ணணும். பார்ப்போம்...”

``விஜய் சேதுபதி கூடவே தொடர்ந்து படம் பண்றீங்க...’’

“நான் பண்ற படம் நல்லாருக்கும்னு இந்த உலகத்திலேயே முழுமையாக நம்பறவர் அவர் மட்டும்தான். நான்கூட கிடையாது. அதனால் நான் பண்ற படங்களில் அவர் தொடர்ந்து நடிக்கிறது இயற்கையா அமையுது.”

``சினிமா உங்களுக்கு எப்படி ரிலேட் ஆகுது?’’

“கடந்த மூணு வருஷமாத்தான் சினிமாவே எனக்கு சினிமாவா தெரிய ஆரம்பிச்சிருக்கு. முன்னாடி அது வெறும் கதையோட சுவாரஸ்யத்தை மட்டும் முன்னிறுத்தி இருந்துச்சு. அப்புறம் நாளாக நாளாக, ஒரு மெச்சூரிட்டி வரும்ல, அப்படித்தான் சினிமாவோட நேர்த்தியே இப்ப கண்ணுக்குத் தெரியுது. கொஞ்சம் கொஞ்சமா நான் பண்ற படங்களில் அது வெளிப்படணும்னு வேண்டிக்கிறேன். மொழியே தெரியாம, புரியாம ஒரு பாட்டை ரசிக்கிறோம்ல, அந்த மாதிரி சினிமாவில் கதையே இல்லாம ரசிக்கக்கூடிய ஒரு இடம் இருக்கு. அது சினிமாவுக்கு மட்டுமேயான இடம்.”

``யாரெல்லாம் ஆச்சரியப்படுத்துறாங்க?’’

“சஞ்சய் லீலா பன்சாலி பிடிக்கும். அட்லீ ரொம்ப ஆச்சரியப்படுத்துறாரு. அதுவும் ‘வெறித்தனம்’ பாட்டு வேற லெவலில் இருந்துச்சு.



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-nalan-kumarasamy-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக