Ad

திங்கள், 26 ஏப்ரல், 2021

புத்தம் புது காலை : இப்போது ஒன்று... காத்திருந்தால் இரண்டு... மார்ஷ்மெல்லோ டெஸ்ட்டும், நம் மனமும்!

மார்ஷ்மெல்லோ... முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரைப்பாகு மற்றும் ஜெலாடின் சேர்ந்த நம்ம ஊர் பஞ்சு மிட்டாய் போன்ற ஒரு மிருதுவான இனிப்புப் பண்டம். மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு மார்ஷ்மெல்லோ என்றால் கொள்ளைப் பிரியம்.

அப்படி நமக்குப் பிரியமான உணவை உண்பதில் உள்ள பொறுமைக்கும் அறிவாற்றலுக்குமிடையே உள்ள தொடர்பை விளக்க, இந்த மார்ஷ்மெல்லோக்களைக் கொண்டு, அமெரிக்கக் குழந்தைகளிடையே ஒரு சோதனையைச் செய்துள்ளார் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மனவியல் நிபுணரான பேராசிரியர் வால்ட்டர் மிஷல்.

பேராசிரியர் மிஷல் தனது பரிசோதனைக்குத் தேர்ந்தெடுத்தது நான்கிலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட 32 குழந்தைகளை… பதினாறு ஆண் குழந்தைகள், பதினாறு பெண் குழந்தைகள் என்று சரிசமமாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். ஒவ்வொரு குழந்தையையும், ஒரு தனி அறையில், ஒரு மேஜைக்கு முன் அமரச்செய்து, அவர்கள் முன்னே ஒரு மார்ஷ்மெல்லோவை கைக்கு எட்டும்படி வைத்துவிட்டார். "நான் திரும்பி வருவதற்குள் இதை நீ தொடாமல் இருந்தால் உனக்கு இதுவும், இதோடு சேர்த்து இன்னொன்றும் என இரண்டு மார்ஷ்மெல்லோவை பரிசாகத் தருவேன்!" என்றபடி அறையை விட்டு வெளியேறி இருக்கிறார்.

மார்ஷ்மெல்லோ டெஸ்ட்

எதிர்பார்த்தது போல, சில குழந்தைகள் பேராசிரியர் கதவை மூடி வெளியேறியவுடன் உடனடியாகப் பாய்ந்து மார்ஷ்மெல்லோவை தின்றுவிட்டன. சில குழந்தைகள் கொஞ்சம் காத்திருந்து பிறகு ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் தின்கின்றன. ஆனால், சில குழந்தைகள் மட்டுமே ஆடிப்பாடி தமது கவனத்தை திசை திருப்பி கடைசிவரை மார்ஷ்மெல்லோவைத் தொடாமல் இரண்டாவது மார்ஷ்மெல்லோவை வென்றனவாம். இதில் ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் இரண்டு குழந்தைகளும் இருந்தன என்றும் அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

"இப்போதே ஒரு பரிசு… காத்திருந்தால் இரண்டு பரிசுகள்" என்று 1972-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த எளிய பரிசோதனைக்குப் பிறகு, இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களை 40 வருடங்களாகத் தொடர்ந்து கவனித்து, பிறகு வெளியிடப்பட்ட பரிசோதனை தொடர்ச்சியின் முடிவுகள், பெரும் ஆச்சரியத்தைத் தந்தன.

இரண்டாவது மார்ஷ்மெல்லோவை காத்திருந்து பெற்றுக் கொண்ட குழந்தைகள் வளர்ந்தபோது, அவர்களிடையே கற்கும் திறன் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் அவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றதோடு, அவர்களிடையே உடற்பருமன், பற்சிதைவு போன்ற உபாதைகள் குறைவாகவும் இருந்திருக்கிறது. மேலும், மது, புகை போன்ற போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாதல் குறைவாகவும், அனைத்திற்கும் மேலாக வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகமாக இருந்ததாகவும் மிஷலின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்க 'தி மார்ஷ்மெல்லோ டெஸ்ட்' உலகப் பிரசித்தி பெற்றது.

மார்ஷ்மெல்லோ டெஸ்ட்

இவர்கள் இப்படி, செயல்பட்டதை, ‘காக்னிட்டிவ் கன்ட்ரோல்’ (Cognitive Control) என்று அழைக்கும் மனவியல் மருத்துவர்கள் அதை எளிமையாக விளக்குகின்றனர். பொதுவாக நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயலிலும், அந்த செயலை உணர்ந்து, அதன் விளைவுகளைப் புரிந்து பிறகு அதைச் செய்வது ஒன்று… பிடித்தமான செயலை, விளைவுகளைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் திருப்தியாக செய்வது மற்றொன்று.

மார்ஷ்மெல்லோ பரிசோதனையில், இந்தக் குழந்தைகள் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அலுத்துக் கொள்ளாமல் செய்வதைத் திருப்தியாய் செய்தன. அதனால் இவர்களுக்குக் கிடைத்த பரிசுகள் இரண்டு, பலன்கள் பல மடங்கு என்பது விளங்குகிறது என்கிறார்கள்.

ஆக, இது குழந்தைகளுக்கான டெஸ்ட் மட்டுமல்ல… இதேபோல நமக்குப் பிடித்த ஒரு மார்ஷ்மெல்லோவைத் தேர்ந்தெடுத்து நமக்கும் ஒரு டெஸ்ட் வைத்துக்கொள்வோம். நமக்கும் இந்த Delay in Gratification… அதாவது ‘பொறுமையை காத்தல்’ என்ற குணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வோம்.

ஏனென்றால், உங்களது ஆசையைக் கட்டுப்படுத்தி, உங்களது பொறுமையை சிறிது நீடித்தால், ஷாப்பிங்கின் போது உங்களது பணத்தை நீங்கள் சேமிக்கலாம்… உங்களது ஆசையைக் கட்டுப்படுத்தி, உங்களது பொறுமையை சிறிது நீடித்தால், சினிமா, கிரிக்கெட், சமூக வலைதளங்களில்

தூக்கத்தை தியாகம் செய்வதைத் தவிர்க்கலாம். உங்களது ஆசையைக் கட்டுப்படுத்தி, உங்களது பொறுமையை சிறிது நீடித்தால், விடியற்காலையில் எழுந்து, இன்னும் இரண்டு உடற்பயிற்சிகளை கூடச் செய்யலாம்... என இன்னும் பலவற்றையும் இந்த மார்ஷ்மெல்லோ டெஸ்ட் புரிய வைக்கிறது.

ஆம்… ஆசைக்கும், பொறுமைக்கும் இடையேயுள்ள ஒரு சிறு இழையில் தான், திருப்தி எனும் மந்திரமும், அதனூடே அழகிய வாழ்க்கையும் உள்ளது!



source https://www.vikatan.com/news/healthy/study-of-marshmallo-experiment-on-human-psychology

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக