சமூக பொறுப்பு திட்டத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அளித்த 10,000 முக்ககவசத்தை சுகாதாரத்துறையிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்படைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது. அதற்காக 28-ம் தேதியே அனைத்து இளைஞர்களும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது அதிகமாக இளைஞர்களை தாக்குகிறது. எனவே இளைஞர்கள் தாங்களாகவே பதிவு செய்து தடுப்பூசி எடுத்துக் கொண்டு முன் உதாரணமாக திகழ வேண்டும். புதுவையில் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில மாநிலங்களில் மருத்துவமனைகள் மற்றும் மயானங்களுக்கு வெளியே வரிசைகள் இருப்பதை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை இனி எந்த மாநிலங்களுக்கும் ஏற்படக்கூடாது. அதனால் சில நடைமுறைகளை முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய உள்ளது.
படுக்கை, ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர், மருந்துகள், மாஸ்க் உள்ளிட்ட எல்லாம் வேண்டிய அளவு இருக்கிறது. எதுவும் தட்டுப்பாடு இல்லை. ஆனால் சிலர் தட்டுப்பாடு இருப்பதாக அறிக்கை கொடுக்கிறார்கள். தயவு செய்து பொதுமக்களுக்கு அச்சத்தை தவிர்த்து, தைரியத்தை ஊட்டுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். புதுவை மட்டுமல்லாது காரைக்கால், மாஹே, ஏனாமில் கூட காணொளி காட்சி மூலம் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை முறைப்படுத்துமாறு சிலர் கேட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தனியார் மருத்துவமனைகளுக்கான மருந்தை அரசே கொடுத்து விடுகிறது. தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் கூட அவர்களை அரசு பாதுகாக்கிறது. எனவே யாரும் அச்சப்பட வேண்டாம்.
மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் சூழ்நிலையை பார்த்து வரும் சனி, ஞாயிறுகளில் ஊரடங்கை அறிவிப்பது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது அதிகம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம். இதன் மூலம் அதிக நோயாளிகளை கண்டுபிடிக்கிறோம். பொதுத் தொண்டு நிறுவனங்களும் உதவி செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பாண்லேவில் 1 ரூபாய்க்கு முகக்கவசம் விற்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
Also Read: புதுச்சேரி: `வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு’ - புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த ஆளுநர் தமிழிசை
தற்போது புதுவையில் 95% பேர் முகக்கவசம் அணிய ஆரம்பித்துவிட்டனர். 5% பேர் முகக்கவசம் அணியவில்லை. அவர்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் கொரோனா தொற்று நம்மை விட்டு விலக வேண்டும் என வேண்டிக் கொள்வோம். அனைவரும் இணைந்துதான் கொரோனாவை வெற்றிக் கொள்ள முடியும். எனவே, அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யுங்கள். மேலும் அரசியல் கட்சியினர் வாக்கு எண்ணிக்கையை எச்சரிக்கையாக எதிர்க்கொள்ள வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/youths-are-most-affected-by-corona-second-wave-in-puducherry-said-by-governor-tamizhisai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக