Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

ஆதார்: விண்ணப்பம் முதல் ஆன்லைனில் மாற்றங்கள் செய்வது வரை... A to Z வழிகாட்டுதல்கள்!

2008-ல் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் அடையாள அட்டையை வழங்க அப்போதைய காங்கிரஸ் அரசு முடிவெடுத்தது. இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், அடுத்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, `ஆதார் அட்டை'யைக் கட்டாயமாக்கும் முயற்சியில் முனைப்பு காட்டியது. எதிர்க்கட்சிகள் விமர்சனம், நீதிமன்றத் தலையீடு என, ஆதார் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. கூடவே, `உங்க மொபைல் எண்ணை ஆதாருடன் இணைச்சுட்டீங்களா?', `உங்க பான் கார்டை ஆதாருடன் இணைக்க காலக்கெடு முடிவடையப் போகிறது', `உங்க வங்கிக் கணக்கில் ஆதாரை இணைப்பது கட்டாயம்' என புதுப்புது அதிரடி அறிவிப்புகளால் மக்கள் குழப்பத்தில் தவித்தனர்.

Aadhaar Card

ஒருவழியாக தற்போது ஆதார் அட்டை, இந்திய குடிமக்களின் தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறிவிட்டது. ரேஷன் கடை முதல் சிம் கார்டு வாங்குவது வரை எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டைதான் முதன்மை ஆவணமாகக் கேட்கப்படுகிறது. லாக்டெளனில் சலூன் கடைகளில் முடி வெட்டுவதற்குக்கூட ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. எங்கும் எதிலும் `ஆதார்' மயமாகிவிட்ட நிலையில், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையைப் பெறுவதிலும், அதில் மாற்றங்கள் செய்வதிலும் பலருக்கும் இன்னும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்கு முழுமையாக வழிகாட்டுகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

ஆதார் என்றால் என்ன?

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் அடையாள அட்டையாகக் கருதப்படுகிறது ஆதார் அட்டை. அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும், பல்வேறு ஆவணங்களைப் பெறுவதற்கும், பல்வேறு ஆவணங்களுக்கு மாற்றாகவும் ஆதார் அட்டை பயன்படுகிறது. பெயர், பிறந்த தேதி, செல்போன் எண் (கட்டாயமில்லை), மின்னஞ்சல் முகவரி (கட்டாயமில்லை) உள்ளிட்ட டெமோகிராஃபிக் தகவல்களும், புகைப்படம், கருவிழி, கைரேகை உள்ளிட்ட உடற்கூறு தகவல்களும் பெறப்பட்டு தயாரிக்கப்படும் இந்த அட்டையால், ஒருவர் பெயரை மற்றொருவர் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படும். இதனால், அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளர்களுக்குச் சென்று சேர்வது உறுதிப்படுத்தப்படுவதுடன், உரிய பயனாளர்களை எளிதில் அடையாளம் காணவும் முடியும். எனவே, மிகவும் நம்பத்தகுந்த, பாதுகாப்பான நடைமுறைகளுடன் கூடிய அடையாள அட்டையாக கருதப்படுவதால், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பெற வேண்டிய முக்கியமான அடையாள அட்டையாக ஆதார் இது கருதப்படுகிறது. இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் அட்டை 12 இலக்க எண்களைக் கொண்டது. குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்த வழிவகை செய்யும் ஆதார் அட்டையானது, ஒருவரின் வாழ்நாள் முழுக்க செல்லுபடியாகும்.

ஆதார் அட்டை

ஆதார் எதற்கெல்லாம் தேவைப்படுகிறது?

சமையல் எரிவாயு இணைப்பு பெற,

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க,

வங்கிக் கணக்கு தொடங்க,

தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற,

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க,

வாக்காளர் அடையாள அட்டை பெற,

குடும்ப அட்டை பெற,

ஓட்டுநர் உரிமம் பெற உட்பட அரசின் நலத்திட்டங்கள் / மானியங்கள் / சேவைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்!

ஆதார் அட்டையைப் பெறுவதற்கு ஒருவர் தனது சாதி, மதம், தாய் மொழி உள்ளிட்ட தகவல்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. மூன்றாம் பாலினத்தினர், இந்த அட்டையில் தங்களை ஆண் என்றோ, பெண் என்றோ குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் உட்பட அரசால் அனுமதிக்கப்பட்ட 32 வகையான அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றும், பென்ஷன் கார்டு, திருமணப் பதிவுச்சான்றிதழ் உள்ளிட்ட உறவுமுறை சான்றிதழ்களில் (Proof of Relationship) ஏதேனும் ஒன்றும், முகவரிச் சான்றும் கட்டாயமாகத் தேவை.

ஆதார் கார்டு

ஆதார் பதிவு செய்வதற்குத் தேவையான எல்லா வகையான ஆவணங்கள் குறித்த விவரங்கள் அறிய: https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf - என்ற லிங்கை க்ளிங் செய்யவும்.

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

- ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவுமில்லை. அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையம் (Aadhaar Enrolment Center) அல்லது அரசின் இ-சேவை மையத்துக்குச் சென்று, அங்கு அளிக்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

- பின்னர், விண்ணப்பதாரரின் டெமோகிராஃபிக் மற்றும் உடற்கூறு தகவல்கள் சேகரிக்கப்படும். கூடவே, அடையாள ஆவணங்கள், குடியிருப்பு உள்ளிட்ட இன்ன பிற சில ஆவணங்களின் அசல் மற்றும் நகல்கள் பரிசீலிக்கப்பட்டு சரிபார்க்கப்படும். பிறகு, 14 இலக்க எண்களுடன் (enrollment number) கூடிய ரசீது வழங்கப்படும். பின்னர், மூன்று மாதங்களுக்குள் தபால் மூலம் ஆதார் அட்டை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆதார் அட்டை

ஆதார் பதிவுக்கு செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், உங்கள் ஆதார் விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக, இந்த இரண்டு தகவல்களும் வழங்குமாறு பரிந்துரைப்படுகிறது.

ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு, மூன்று மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், உங்கள் ஆதார் அட்டை குறித்த தகவல்களை அறிய, https://resident.uidai.gov.in/check-aadhaar - இந்த ஆதார் இணையதளப் பகுதிக்குச் செல்லவும். அதில், உங்களுக்கு வழங்கப்பட்ட 14 இலக்க ரசீது எண்ணைக் குறிப்பிட்டு, அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் செக்யூரிட்டி கோடு எண்களைப் பதிவிட்டு, `செக் ஸ்டேட்டஸ்' பட்டனைக் க்ளிக் செய்து, உங்களின் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸ் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

விழிச்சவால் கொண்டவர்கள் உட்பட கண் நோய் உள்ளவர்கள் மற்றும் விரல் ரேகையைப் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு, பிரத்யேக மென்பொருள் உதவியுடன் உடற்கூறு தகவல்கள் பெறப்படும்.

ஆதார் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாமா?

uidai.gov.in - என்ற ஆதார் இணையதளப் பகுதிக்குள் சென்று, `My Aaadhar - Get Aaadhar - Download Aadhaar' பக்கத்தில், ஆதார் எண் (UID), பதிவு ஐடி (EID), விர்ச்சுவல் ஐடி (VID) ஆகியவற்றில் எது உங்களிடம் உள்ளதோ அதை உள்ளீடு செய்யவும். பின்னர், அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் செக்யூரிட்டி கோடு எண்களைப் பதிவிட்டு, `Send OTP' பட்டனை க்ளிக் செய்தால், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி எனப்படும் கடவுக்குறியீட்டு எண்கள் வரும். அதைக் குறிப்பிட்டு, `VERIFY AND DOWNLOAD’ என்பதை க்ளிக் செய்து, மின்னணு ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம். பதிவு செய்து மூன்று மாதங்களுக்குள் தபாலில் அனுப்பி வைக்கப்படும் மூல ஆதார் அட்டைக்கு உள்ள அதே மதிப்பு, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்படும் மின்னணு ஆதார் அட்டைக்கும் உண்டு.

ஆதார் - uidai இணையதளப் பகுதி

ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைப்பது எப்படி?

ஆதார் அட்டைக்குப் பதிவு செய்யும்போது செல்போன் எண்ணைக் குறிப்பிடத் தவறியவர்கள், அதன் பிறகும் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்கலாம். அதற்கு, அருகில் உள்ள ஆதார் மையத்தை அணுகலாம். இதற்கு, 30 ரூபாய் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். அல்லது உங்கள் செல் நம்பரில் இருந்து 14546 என்ற இலவச எண்ணுக்கு அழைக்கவும். ஆதார் விவரங்களைக் குறிப்பிட்டு, ஓ.டி.பி கடவுச்சொல் உள்ளிட்ட சரிபார்ப்பு பணிகள் முடிந்ததும், 48 மணிநேரத்தில் உங்கள் செல் நம்பர் ஆதாருடன் இணைந்துவிடும். குறுஞ்செய்தி மூலமாக இந்தத் தகவல் உங்களுக்கு வரும்.

வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

அரசின் மானியங்கள் பலவும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. மேலும், பண மோசடியைத் தடுக்கும் பொருட்டும், வாடிக்கையாளர்களின் ஆவணங்களை முறையாகப் பராமரிக்கும் பொருட்டும், வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று, ஆதார் அடையாள அட்டையின் நகலைக் கொடுத்தால் போதும். வங்கியிலேயே ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துவிடுவார்கள். வெளியூரில் இருப்பவர்கள், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் அருகிலுள்ள ஏதாவதொரு கிளையை அணுகலாம். இணைய வங்கிச் சேவையில், உரிய ஆப்ஷன் இருந்தால், வங்கிக்குச் செல்லாமலேயே இணையதளத்தின் மூலமாகவே ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கலாம். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். கூடுதல் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட வங்கியை அணுகவும்.

Also Read: மார்ச் 31 கடைசி... பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை எனில் அபராதம் விதிக்கப்படுமா? #PANAadhaar

மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம், ஆதார் எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து, வருமான வரி செலுத்துவோர் அனைவரும் தங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html - என்ற இணையதள பகுதியில் சென்று விவரங்களைப் பதிவிட்டு, இணைத்துக்கொள்ளலாம்.

ஆதாரில் திருத்தங்கள் செய்ய என்ன வழி?

வீட்டு முகவரியில் மாற்றம்செய்ய வேண்டுமெனில் ஆதார் இணையதளத்திலேயே செய்துகொள்ளலாம். அதற்கு, உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும். https://ssup.uidai.gov.in/ssup/ - என்ற ஆதார் இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்தால், பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP கடவுச்சொல் வரும். அதைத் தொடர்ந்து உங்களின் புதிய மற்றும் பழைய முகவரிகளைக் கொடுத்து, அதற்கான ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை

ஏற்கெனவே பெறப்பட்ட ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம் உள்ளிட்ட மற்ற திருத்தங்கள் செய்ய, அருகிலுள்ள ஆதார் மையம் அல்லது இ-சேவை மையத்தை அணுகலாம். ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, காஸ் இணைப்பு ஆவணம், வங்கிக் கணக்குப் புத்தகம், மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றின் அசல் ஆதாரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதற்காகக் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் என்ன செய்வது?

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. ஆதார் எண் அல்லது பதிவு எண் (Enrollment number) ஆகியவைதான் முக்கியம். uidai.gov.in என்ற ஆதார் இணையதளப் பக்கத்தில், My Aaadhaar - Retrieve Lost or Forgotten EID/UID - என்ற பக்கத்தில், பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, செக்யூரிட்டி கோடு எண்களைப் பதிவிட்டு, `Send OTP' பட்டனை க்ளிக் செய்தால், செல்போனுக்கு வரும் ஓ.டி.பி கடவுச் சொல்லைச் சரியாகக் குறிப்பிடவும். உடனே, `Download Aadhaar' என்று காட்டும் லிங்க்கை க்ளிக் செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Aadhaar Registration

குழந்தைகளுக்கு ஆதார் விண்ணப்பிப்பது எப்படி?

பிறந்த பச்சிளம் குழந்தைகளும் ஆதார் அட்டை பெறலாம். குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட ரசீது (Discharge Slip) தேவை. குழந்தை பள்ளிக்குச் செல்வதாக இருந்தால், பள்ளி அடையாள அட்டையே உரிய அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும். ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு நீல நிறத்தில் `பால் ஆதார் அட்டை' வழங்கப்படும். ஐந்து வயது பூர்த்தியான பிறகு, இந்த அட்டை செல்லாததாகிவிடும். அப்போது, அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்துக்குச் சென்று குழந்தையின் உடற்கூறுகளைப் பதிவு செய்து, ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். இதேபோல 15 வயது ஆன உடனும் குழந்தையின் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும்.



source https://www.vikatan.com/news/general-news/complete-guide-to-aadhaar-from-enrollment-to-correction-everything-you-want-to-know

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக