Ad

வியாழன், 1 ஏப்ரல், 2021

மனிதர்களின் பாவம் தீர்க்க நிகழ்ந்த சிலுவை மரணம்... தேவனின் தியாகத்தைப் போற்ற வேண்டிய புனித வெள்ளி!

அந்த நள்ளிரவில் இயேசுவையும் அவர் சீடர்களையும் காவலர்கள் வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் இயேசு, “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது இயேசு “அது நான்தான்” என்று சொன்னார்.

இயேசுவைத் தோட்டத்தில் வைத்துக் கைது செய்தபோது நடந்த உரையாடல் இது.

யாரைக் கைதுசெய்ய வருகிறோம் என்பதை அறியாமலா அவர்கள் அங்கே வந்தார்கள்... அவர்கள் அறிவார்கள். இதற்கு முன்பாக நாசரேத்தான் ஆகிய இயேசுவை அவர்கள் ஆலயத்தில் கண்டிருக்கிறார்கள். சந்தைகளில் கண்டிருக்கிறார்கள். மலை உச்சியில் பிரசங்கம் செய்யும்போது கண்டிருக்கிறார்கள். கடற்கரையில் படகில் ஏறி நின்று உபதேசம் செய்யும்போது பார்த்திருக்கிறார்கள்.

இயேசு நிகழ்த்திய அற்புதம்

அவர் நோயாளிகளைத் தொட்டு சொஸ்தப்படுத்தியபோது பார்த்திருக்கிறார்கள். பேய்களைத் தன் சொற்களால் விரட்டிக் கடலில் தள்ளியபோது பார்த்திருக்கிறார்கள். மரித்தவனை உயிரோடு எழுப்பியபோது பார்த்திருக்கிறார்கள். 'என் தந்தையின் வாசஸ்தலத்தை வியாபாரக் கூடாரமாக மாற்றாதீர்கள்' என்று சாட்டை எடுத்து அங்கிருந்த வியாபாரிகளை அடித்து விரட்டியபோது பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் அப்போதெல்லாம் அவரைக் கைது செய்யாமல் நள்ளிரவில் கைது செய்தார்கள். அவரை முதன்மை குருவிடம் விசாரணைக்காக அழைத்துப்போனார்கள். அப்போது,

இயேசுவிடம் அவருடைய சீஷர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் தலைமைக் குரு விசாரணை செய்தார்.

அப்போது இயேசு,

“நான் உலகறியப் பேசியிருக்கிறேன். யூதர்கள் எல்லாரும் கூடிவருகிற ஜெபக்கூடத்திலும் ஆலயத்திலும் எப்போதும் கற்பித்திருக்கிறேன்; எதையும் நான் ரகசியமாகப் பேசியதே இல்லை. அப்படியிருக்கும்போது, ஏன் என்னை விசாரணை செய்கிறீர்கள்? நான் பேசியதைக் கேட்டவர்களிடம் விசாரணை செய்யுங்கள். நான் என்ன பேசினேன் என்று அவர்களுக்குத் தெரியும்” என்று சொன்னார். (யோவான் 18 - 20 -22)

உண்மையான வார்த்தைகளைக் கண்டதும் இந்த உலகம் நடுங்குகிறது. எங்கே நம் தவறுகளை, பாவங்களை அது வெளியரங்கமாக்கிவிடுமோ என்று பயப்படுகிறது. அதனால் உண்மை பேசுகிறவர்களை ஒடுக்க முயல்கிறது. இயேசு உண்மையைச் சொன்னார். ஆனால் அதைக் கேட்டுக்கொண்டிருந்த சாதாரண காவலன் அவர் முகத்தில் அறைந்து முதன்மை குருவுக்குரிய மரியாதையாதையோடு பதில் சொல்லுமாறு சொன்னான்.

இயேசு

அப்போதும் இயேசு அமைதியாக, “நான் தவறாகப் பேசியிருந்தால், அந்தத் தவறு என்னவென்று சொல். சரியாகப் பேசியிருந்தால், என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு பதில் இல்லை. இன்று எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களைக் கைநீட்டி அடிக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளாகக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது. ஏன் அடிக்கிறோம் என்பதை நிதானமாக யாராலும் சொல்ல முடியுமா... அப்படி முடிந்தால் அதை ஏன் அடிக்காமல் விளக்க முடியாமல் போனது? எது அடுத்தவரை மனித மாண்போடு அணுக முடியாமல் போகவைக்கிறது?

இயேசு கேட்ட இந்தக் கேள்விக்கான பதில் அவனிடம் இல்லை. அதன்பின் அந்தக் கேள்வியை பிலாத்து பலமுறை கேட்டான்.

பிலாத்து இயேசுவைக் கண்டதுமே அவர் நிரபராதி என்பதை அறிந்துகொண்டான். அவர் மேல் எந்தக் குற்றத்தையும் காணமுடியவில்லை. யூதர்கள் கூட்டமாகக் கூடி அந்த மனிதரைக் கொல்வதிலேயே நோக்கம் கொண்டு இருந்தனர். காரணம், அவர் அன்பை பிரசாரம் செய்தார். சாப்பிடும் எதனாலும் தீட்டு ஏற்படாது என்று உரைத்தார். தன்னைப் போல் பிறரையும் நேசி என்று கற்றுக்கொடுத்தார். மதத்தைப் பிழைப்பாகக் கொண்டு நடத்துபவர்களுக்கு இதெல்லாம் பிரச்னைகளாக மாறின. கூட்டத்தினரை சமாதானம் செய்யும்பொருட்டு பிலாத்து, இயேசுவை சாட்டையால் அடிக்கும்படிக் கட்டளையிட்டான்.

இந்த உலகுக்கு அன்பைப் பங்கிட்டுக் கொடுக்க வந்த தேவ மைந்தனின் சரீரத்தை மனிதர்களின் பேராசை முள்சாட்டையாக மாறிப் பிய்த்தெரிந்தது. அவர்களில் ஒரு மூடன் முட்கிரீடம் ஒன்றைச் செய்து அவர் தலையில் வைத்து அழுத்தினர். இந்த உலகத்தின் பாவத்தைக் கழுவுவதற்காக அந்தப் புனிதரின் ரத்தம் வழியத்தொடங்கியது. வீரர்கள் என்று சொல்லிக்கொண்ட கோழைகள் அவரின் கன்னத்தில் மாறிமாறி அறைந்தார்கள்.

புனித வெள்ளி

பிலாத்து மனம் நோக இவற்றைக் கண்டான். அப்போதும் யாரையும் வசை பொழியாமல் நிற்கும் அவர் மேல் அவனுக்கு இரக்கம் பிறந்தது. மக்கள் கூட்டத்திடம், 'நான் இவர் மேல் எந்தக் குற்றமும் காணேன்' என்று சொன்னான். ஆனால் அதை அவர்கள் ஏற்காமல் 'அவரைச் சிலுவையில் அறையுங்கள்' என்று கூச்சலிட்டனர்.

ஒருகட்டத்தில் பிலாத்துவால் அவர்களை சமாளிக்க முடியாமல் அவர்களிடம் இயேசுவை ஒப்படைத்தான். அந்த கணத்திலிருந்து சித்ரவதைகள் தொடங்கின. இயேசு தன் சிலுவையைச் சுமந்துகொண்டு கொல்கொதா என்ற இடத்துக்குச் சென்றார். செல்லும் வழியெல்லாம் அவரை சாட்டையால் அடைத்தனர். அதைப் பார்த்த பெண்கள் அனைவரும் அவர் படும் வேதனைகளைக் கண்டு கதறி அழுதனர்.

இயேசுவை கொல்கொதாவில் வைத்து சிலுவையில் அறைந்தனர். அவரின் ஆடையையும் களவாடிக்கொண்டனர். இந்த உலகில் ஜலத்தை அசைபாட வைத்த தேவகுமாரனின் இறுதி தாகத்துக்கு கசப்பான காடியைக் குடிக்கத் தந்தனர். இத்தனை வேதனைகளோடும் அவர் யாரையும் சபிக்கவில்லை.

மனிதர்களின் பாவங்களைத் தீர்க்கும் வாசலாக ஒளியாகத் தன் மரணம் அமையப்போவதை அவர் அறிந்திருந்தார்.அதற்காக அவர் சகலத்தையும் அந்த நாளில் சகித்துக்கொண்டார். பிசாசானவன் அவர் முன் வென்றுவிட்டதாகக் கொக்கரித்தான்.ஆனால் அது நிரந்தரமான வெற்றி அல்ல என்பதை அவன் அறியவில்லை.

புனித வெள்ளி

தன் வார்த்தைகளை கணம்பண்ணி அத்தனையையும் சகித்துக்கொண்ட மைந்தனை கர்த்தர் மூன்றாம் நாளில் மகிமைப்படுத்தினார். மரணத்தின் மீது அவருக்கு ஜயத்தை உண்டாக்கினார். மரணத்தில் குழியிலிருந்து சகலவிதமான அதிகாரங்களோடு இயேசுபிரான் உயிர்த்தெழுந்தார்.

இன்றைக்கு நாம் எளிதாக பாவங்களை இயேசுவின் ரத்தத்தினால் மன்னிப்புப் பெறுகிறோம். அவரின் சிலுவையின் நிழலில் இளைப்பாறுகிறோம். அப்படிப்பட்ட மீட்பை நமக்கு வழங்கும் தேவனின் பாடுகளை இந்த நாளில் நாம் தியானம் செய்தால் நாம் மீண்டும் மீண்டும் வாழ்வில் பாவங்களால் இடரலடையாது இருப்போம். அவரின் வார்த்தைகளை கணம் பண்ணுவோம். எப்போதும் அவரைத் துதித்து ஸ்தோத்தரிப்போம்.

இன்று புனித வெள்ளி. நமக்காக, மனித குல மீட்புக்காக மனுஷ குமாரன் என்னும் ஆட்டுக்குட்டி பலியான தினம். இந்த நாளில் நாம் அவரை நினைத்து ஸ்தோத்தரித்து அவரின் அன்புக்குப் பாத்திரமாவோம். அத்தனை பாடுகளுக்கு நடுவிலும் அவர் ஒருவரையும் தூஷணம் செய்யாமல் பொறுமையோடு இருந்ததை நினைவுக்கூர்வோம். இன்று சாதாரண விஷயங்களுக்கெல்லாம் பொறுமை இழக்கும் குணத்தை மாற்றிக்கொள்ள முயல்வோம். அனைவரையும் சாதிமத பேதங்கள் இன்றி நேசிப்போம். அதுவே அவருக்குச் செய்யும் பிரதான துதியாக மாறும்.



source https://www.vikatan.com/spiritual/gods/good-friday-time-to-think-and-thank-the-sacrifice-of-jesus-in-cross

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக