Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ராமநாதபுரம் - சிவகங்கை - மதுரை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

பரமக்குடி (தனி)

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், தி.மு.க-வில் முருகேசன் ஆகியோர் மோதுகிறார்கள். 2019 இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சதன் பிரபாகரன், தொண்டர்களிடம் எளிமையாகப் பழகக்கூடியவர். போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலராக இருந்த முருகேசன், பாரம்பர்யமிக்க தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தொகுதியில் நன்கு பரிச்சயமானவர். தொகுதியில் அ.தி.மு.க மீது பரவலாக உள்ள அதிருப்தியால், முருகேசன் முந்துகிறார்.

திருவாடானை

காங்கிரஸின் கரு.மாணிக்கமும், அ.தி.மு.க-வின் ஆனிமுத்துவும் அ.ம.மு.க-வின் ஆனந்த்தும் மோதுகிறார்கள். பாரம்பர்யமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், குடும்பத்தினர் இந்தத் தொகுதியில் சிலமுறை வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதும் கரு.மாணிக்கத்துக்கு ப்ளஸ். கடந்தமுறை இரட்டை இலைச் சின்னத்தில் வென்ற கருணாஸ் மீதான அதிருப்தி ஆனிமுத்துவுக்கு எதிராக இருக்கிறது. அ.ம.மு.க வேட்பாளர் பிரிக்கும் வாக்குகளும் அ.தி.மு.க-வுக்குப் பாதகமே. எனவே, கரு.மாணிக்கமே முந்துகிறார்.

ராமநாதபுரம்

பா.ஜ.க-வின் குப்புராம், தி.மு.க-வின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ஆகியோர் மோதுகிறார்கள். குப்புராமுவுக்கு அ.தி.மு.க-வினரின் ஆதரவு பெரிய அளவில் இல்லாததும், அ.ம.மு.க-வின் முனியசாமி அ.தி.மு.க வாக்குகளைப் பிரிப்பதும் மைனஸ். மேலும், பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் முத்துராமலிங்கத்துக்கே கிடைக்கும். எனவே, தொகுதியில் உதயசூரியன் உதிக்கிறது.

முதுகுளத்தூர்

தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனும், அ.தி.மு.க-வில் கீர்த்திகா முனியசாமியும், அ.ம.மு.க-வில் முருகனும் களத்தில் இருக்கிறார்கள். கணிசமான அ.தி.மு.க வாக்குகள், அ.ம.மு.க பக்கம் செல்கிறது. வேறு தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் மத்தியில் பரிச்சயம் இல்லாதது கீர்த்திகா முனியசாமிக்கு மைனஸ். தொகுதிக்குள் உள்ள செல்வாக்கு, யாதவர்கள், மீனவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களின் ஆதரவு ஆகியவற்றால் ராஜகண்ணப்பன் முந்துகிறார்.

காரைக்குடி

பா.ஜ.க-வில் ஹெச்.ராஜா, காங்கிரஸில் மாங்குடி, அ.ம.மு.க-வில் தேர்போகி பாண்டி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. பொதுவாக தொகுதியில் நிலவும் பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை, அ.தி.மு.க-வினரின் உள்ளடி வேலைகள், தேர்போகி பாண்டி அ.தி.மு.க வாக்குகளைப் பிரிப்பது போன்றவை ஹெச்.ராஜாவுக்கு மைனஸ். மாங்குடி, தொகுதியில் செல்வாக்குள்ள ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பது மட்டும்தான் ப்ளஸ். ஆனாலும், கூட்டணி பலம் கைகொடுப்பதால் மாங்குடி முந்துகிறார்.

திருப்பத்தூர்

அ.தி.மு.க-வில் மருது அழகுராஜ், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பெரியகருப்பன், அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவன் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. உமாதேவன், அ.தி.மு.க-வின் வாக்குகளைப் பிரிப்பது மருது அழகுராஜுக்கு மைனஸ். மூன்று முறை தொகுதியைக் கைப்பற்றியிருக்கும் பெரியகருப்பனுக்குத் தொகுதியில் ஓரளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது. கட்சி சாராத வாக்காளர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தி இருந்தாலும், அ.தி.மு.க வேட்பாளரின் பலவீனத்தால் இம்முறையும் பெரியகருப்பனே தொகுதியைத் தக்கவைக்கிறார்.

சிவகங்கை

அ.தி.மு.க-வின் செந்தில்நாதனும், சி.பி.ஐ-யின் குணசேகரனும் போட்டியிடுகிறார்கள். செந்தில்நாதன் காரைக்குடி தொகுதியைச் சேர்ந்தவர் என்பது அவருக்கு மைனஸ். தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான பாஸ்கரனுக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதால், அவரின் ஆதரவாளர்களும் செந்தில்நாதனுக்கு எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார்கள். அ.ம.மு.க வேட்பாளர் அன்பரசன், அ.தி.மு.க-வின் கணிசமான ஓட்டுகளைப் பிரிக்கிறார். இவையெல்லாம் செந்தில்நாதனுக்கு மைனஸ். உள்ளூர் வேட்பாளர் என்ற செல்வாக்காலும், கூட்டணி பலத்தாலும் குணசேகரன் முந்துகிறார்.

மானாமதுரை (தனி)

அ.தி.மு.க-வில் இதே தொகுதியின் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சிட்டிங் எம்.எல்.ஏ நாகராஜன், தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, அ.ம.மு.க சார்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி போட்டியிடுகிறார்கள். தேவேந்திர குல வேளாளர் பெயர் விவகாரத்தால், திருப்புவனம் ஒன்றியத்தில் கணிசமாக இருக்கும் வேளாளர் பிள்ளைமார் சமூகத்தினர் ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். தவிர, அ.ம.மு.க பிரிக்கும் ஓட்டுகளும் அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவே. இவையெல்லாம் நாகராஜனுக்கு மைனஸ். தவிர, இளையான்குடி ஒன்றியத்தில் தி.மு.க-வுக்கு கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. இதனாலேயே தமிழரசி முந்துகிறார்.

மேலூர்

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பெரியபுள்ளான் என்ற செல்வம், காங்கிரஸ் கட்சியில் ரவிச்சந்திரன் மோதுகிறார்கள். தொகுதியில் நிலவும் அதிருப்தி பெரியபுள்ளானுக்கு மைனஸ். அவர் சார்ந்திருக்கும் முத்தரையர் சமூகத்தினரின் வாக்குவங்கி அவருக்கு ப்ளஸ். மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் பட்டியலின மக்கள் பெரியபுள்ளான் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். ரவிச்சந்திரனுக்கு சீட் கொடுத்ததை காங்கிரஸ் கட்சியினரே விரும்பாதது அவருக்கு மைனஸ். கடும் போட்டியிலும் முந்துகிறார் பெரியபுள்ளான்.

மதுரை - கிழக்கு

அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பி.மூர்த்தி போட்டியிடுகிறார்கள். மக்கள் பிரச்னைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பதால் மூர்த்திக்கு நல்ல பெயர் இருக்கிறது. தொகுதியிலுள்ள யாதவர் சமூகத்தினரின் வாக்குவங்கி மட்டுமே கோபாலகிருஷ்ணனுக்கு ப்ளஸ். அ.தி.மு.க நிர்வாகிகள் வேலையில் சுணக்கம்காட்டுவது அவருக்கு மைனஸ். முத்தரையர் சமூகத்தினர், முக்குலத்தோர், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைப்பதால் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் தொகுதியைத் தக்கவைக்கிறார் மூர்த்தி.

சோழவந்தான் (தனி)

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ மாணிக்கம், தி.மு.க-வில் வெங்கடேஷன் போட்டியிடுகிறார்கள். தொகுதி வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்கிற மக்களின் அதிருப்தி, உட்கட்சியில் ஒத்துழைப்பு இல்லாதது மாணிக்கத்துக்கு மைனஸ். வெங்கடேஷன் புதுமுக வேட்பாளராக இருந்தாலும், மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி அவருக்காகத் தீவிரமாக வேலை பார்ப்பது வெங்கடேஷனுக்கு ப்ளஸ். வன்னியர் இட ஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் போன்ற விஷயங்களால் தொகுதியில் பரவலாக இருக்கும் பிற சமூகத்தினர் ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் இருப்பதால், வெங்கடேஷன் முந்துகிறார்.

மதுரை - வடக்கு

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வின் டாக்டர் சரவணன், தி.மு.க-வில் கோ.தளபதி களத்தில் இருக்கிறார்கள். தொகுதியில் பா.ஜ.க-வுக்கு அடித்தளம் இல்லாதது, திடீரென்று கட்சிக்குள் என்ட்ரி கொடுத்து சீட்டைக் கைப்பற்றியதால் பா.ஜ.க-வினரின் அதிருப்தி, கூட்டணிக் கட்சியினரான அ.தி.மு.க-வினரும் ஒதுங்கி நிற்பது... இவையெல்லாம் சரவணனுக்கு மைனஸ். தொகுதியிலுள்ள தனிப்பட்ட செல்வாக்கு சரவணனுக்கு ப்ளஸ். அரசு ஊழியர்களும், சிறுபான்மையினரும் தொகுதியில் அதிகமாக இருப்பது தளபதிக்கு ப்ளஸ். ரேஸில் முந்துகிறார் தளபதி.

மதுரை - தெற்கு

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணனும், தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க-வின் பூமிநாதனும் போட்டியிடுகிறார்கள். சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு சரவணனுக்கு மைனஸ். ஆனால், தொகுதியில் கணிசமாக இருக்கும் சௌராஷ்டிரா சமூகத்தினரின் வாக்குவங்கி அவருக்கு ப்ளஸ். தொகுதியில் பரவலாக உள்ள சிறுபான்மையினரின் ஆதரவு, முக்குலத்தோர் ஆதரவு, தி.மு.க நிர்வாகிகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் பூமிநாதன் முந்துகிறார்.

மதுரை - மத்தி

அ.தி.மு.க கூட்டணியில் பசும்பொன் தேசியக் கழகத்தின் ஜோதி முத்துராமலிங்கமும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க தொழில்நுட்ப அணியின் செயலாளராக இருப்பது, பாரம்பர்யமான தி.மு.க குடும்பம், கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் தொகுதியில் சிறப்பாகச் செயல்பட்டது ஆகியவை பழனிவேல் தியாகராஜனுக்கு ப்ளஸ். இந்தத் தொகுதியில் சீட் எதிர்பார்த்த அ.தி.மு.க-வின் கிரம்மர் சுரேஷ் சுயேச்சையாகப் போட்டியிடுவது, அ.தி.மு.க நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாதது ஜோதி முத்துராமலிங்கத்துக்கு மைனஸ். கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைத் தக்கவைக்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

மதுரை - மேற்கு

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான செல்லூர் ராஜூ, தி.மு.க-வில் சின்னம்மாள் போட்டியிடுகிறார்கள். தொகுதியிலும், கட்சிக்குள்ளும் இருக்கும் அதிருப்தி அலைகள் செல்லூர் ராஜூவுக்கு மைனஸ். முக்குலத்தோர், யாதவர், சிறுபான்மையினர் அமைப்புகள் அ.தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது சின்னம்மாளுக்குச் சாதமாக இருக்கிறது. பிரமலைக்கள்ளர் சமூகத்தினரின் ஓட்டுகள், சொந்தக் கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் சின்னம்மாள் முந்துகிறார்.

திருப்பரங்குன்றம்

அ.தி.மு.க-வில் ராஜன் செல்லப்பா, தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கட்சியின் பொன்னுத்தாய், அ.ம.மு.க-வில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை களத்தில் இருக்கிறார்கள். அரசியலில் நீண்ட அனுபவமுள்ள ராஜன் செல்லப்பா, கடந்த ஓராண்டாகவே இந்தத் தொகுதியைக் குறிவைத்து களப்பணி ஆற்றிவருவது அவருக்கு ப்ளஸ். அதேநேரத்தில் டேவிட் அண்ணாதுரை பிரிக்கும் வாக்குகள் ராஜன் செல்லப்பாவுக்கு மைனஸ். பொன்னுத்தாய் எளிமையானவர் என்பது ப்ளஸ். ஆனால், தேர்தல் பணிகளில் தி.மு.க-வினர் சற்று சுணக்கம் காட்டிவருவது பொன்னுத்தாய்க்கு மைனஸ். பணபலம், சாதிபலம், அரசியல் வியூகம் ஆகியவற்றால் ராஜன் செல்லப்பா முந்துகிறார்.

திருமங்கலம்

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தி.மு.க-வில் மணிமாறன், அ.ம.மு.க கூட்டணியில் மருது சேனை கட்சியின் கரு.ஆதிநாராயணன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். உதயகுமாரை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்தவில்லை என்று தி.மு.க-வினரே அதிருப்தியில் இருப்பது, மணிமாறனுக்கு மைனஸ். அரசுத் திட்டங்கள், தனிப்பட்ட முறையிலான உதவிகள் என்று தொகுதி மக்களை நன்கு கவனித்துவருகிறார் உதயகுமார். மருதுசேனை வேட்பாளர் ஓரளவுக்கு வாக்குகளைப் பிரித்தாலும்கூட கெளரவமான வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைத் தக்கவைக்கிறார் உதயகுமார்.

உசிலம்பட்டி

அ.தி.மு.க-வில் அய்யப்பன், தி.மு.க கூட்டணியில் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பி.வி.கதிரவன், அ.ம.மு.க-வில் மகேந்திரன் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மகேந்திரன் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால், கதிரவனுக்கும் அவருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. அய்யப்பன் வேறு தொகுதியைச் சேர்ந்தவர் என்பது மைனஸ். சிட்டிங் எம்.எல்.ஏ ப.நீதிபதிக்கு சீட் மறுக்கப்பட்டதால், அவரின் ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தொகுதியில் ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு, கூட்டணி பலத்தால் ரேஸில் முந்துகிறார் கதிரவன்.



source https://www.vikatan.com/news/election/ramanathapuram-sivagangai-madurai-assembly-election-survey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக