Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

திருநெல்வேலி - தென்காசி - விருதுநகர் மாவட்ட தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

திருநெல்வேலி

பா.ஜ.க-வின் நயினார் நாகேந்திரன், தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் மோதுகிறார்கள். இருவருமே தொகுதி மக்களுக்குப் பரிச்சயமானவர்கள் என்றாலும், தேர்தல் சமயத்தில் மட்டும் தொகுதிக்குள் வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருப்பது, நயினார் நாகேந்திரனுக்கு மைனஸ். எளிமையான மனிதர் என்று பெயரெடுத்திருப்பது, லட்சுமணனுக்கு ப்ளஸ். நயினார் நாகேந்திரனுக்கு எதிராக அ.தி.மு.க-வினர் உள்ளடி வேலைகள் செய்வது, தி.மு.க கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு போன்றவை சாதகமாக இருப்பதால், திருநெல்வேலியை ஏ.எல்.எஸ்.லட்சுமணன் தக்கவைக்கிறார்.

அம்பாசமுத்திரம்

தி.மு.க-வில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோர் மோதுகிறார்கள். இருவருமே தொகுதியில் நன்கு பரிச்சயமானவர்கள். இசக்கி சுப்பையாவுக்கு எதிராக அ.தி.மு.க-வினர் உள்ளடி வேலைகள் செய்வது, அ.ம.மு.க வேட்பாளர் ராணி ரஞ்சிதம் (காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையின் மனைவி) கணிசமான வாக்குகளைப் பிரிப்பது, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம் ஆகியவை சாதகமாக இருப்பதோடு, கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதால் ஆவுடையப்பன் முந்துகிறார்.

பாளையங்கோட்டை

`தி.மு.க-வின் கோட்டை’ என்று சொல்லப்படும் இந்தத் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பாக அப்துல் வஹாப் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பாக ஜெரால்டு களமிறங்கியிருக்கிறார். ஜெரால்டு, கிறிஸ்தவ நாடார் என்றாலும், அ.தி.மு.க., பா.ஜ.க-வோடு இணைந்திருப்பதால் கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் அவருக்குக் கிடைப்பது சந்தேகமே. தொகுதியில் அதிக அளவில் இருக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் கிடைப்பதால், அப்துல் வஹாப் முந்துகிறார்.

நாங்குநேரி

அ.தி.மு.க-வின் கணேசராஜா, காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் மோதுகிறார்கள். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வாக்காளர்கள் கணிசமாக இருப்பதும், ஓராண்டுக்கு மேலாக தொகுதியில் தங்கியிருந்து மக்களைச் சந்தித்துவருவதால் கிடைத்திருக்கும் செல்வாக்கும் ரூபி மனோகரனுக்கு ப்ளஸ். சிட்டிங் எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதால், அ.தி.மு.க-வில் உட்கட்சிப்பூசல் நிலவுவது, கணேசராஜாவுக்கு மைனஸ். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு, ராகுல் காந்தியின் பிரசாரம் போன்றவை கைகொடுப்பதால் ரூபி மனோகரன் முந்துகிறார்.

ராதாபுரம்

தி.மு.க-வின் அப்பாவு, அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் மோதுகிறார்கள். நிறைய திட்டங்களைக் கொண்டுவந்திருப்பதால் தொகுதியிலுள்ள நல்ல பெயர் இன்பதுரைக்கு ப்ளஸ். கூட்டணி பலம் அப்பாவுக்கு-வுக்கு ப்ளஸ். கடந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு தோற்றதால், இம்முறை போட்டி கடுமையாக இருக்கிறது. அதனால், இழுபறிநிலை நிலவுகிறது.

சங்கரன்கோவில் (தனி)

தொடர்ந்து அ.தி.மு.க ஏழு முறையாக வெற்றிபெற்றிருக்கும் இந்தத் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான ராஜலட்சுமி அ.தி.மு.க சார்பிலும், ராஜா தி.மு.க சார்பிலும் போட்டியிடுகிறார்கள். ராஜா வேறு ஊரைச் சேர்ந்தவர் என்பதால், தொகுதிக்குள் பரிச்சயம் இல்லை. தொகுதிக்குள் இருக்கும் பரவலான அதிருப்தி, ராஜலட்சுமிக்கு மைனஸாக இருந்தாலும், தொகுதி முழுவதும் பரிச்சயமான வேட்பாளராக இருப்பதால், சங்கரன்கோவிலைத் தக்கவைக்கிறார் ராஜலட்சுமி.

வாசுதேவநல்லூர் (தனி)

அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ மனோகரன், ம.தி.மு,க-வின் சதன் திருமலைக்குமார், அ.ம.மு.க-வின் தங்கராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பது சதன் திருமலைக்குமாருக்கு ப்ளஸ். தொகுதிக்கு நிறைய திட்டங்களைக் கொண்டுவந்திருப்பது மனோகரனுக்கு ப்ளஸ். தொகுதியில் கணிசமான அளவில் இருக்கும் தேவர் சமூகத்தினரின் ஓட்டுகளை தங்கராஜ் பிரிப்பது மனோகரனுக்கு மைனஸ். சதன் திருமலைக்குமார் முந்துகிறார்.

கடையநல்லூர்

தி.மு.க கூட்டணியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சியின் முகமது அபுபக்கர், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற பரவலான அதிருப்தி அபுபக்கருக்கு மைனஸ். இஸ்லாமியர்களோடு இருக்கும் நெருங்கிய நட்பு கிருஷ்ண முரளிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அது அவருக்கான வாக்குகளாக மாறுவது சந்தேகமே. அதனால், கடையநல்லூரை அபுபக்கரே தக்கவைப்பார்.

தென்காசி

அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியனும் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடாரும் களத்தில் இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக மக்கள் விருப்பத்துக்கு மாறாக இடம் தேர்வுசெய்த விவகாரத்தில் தொகுதியில் எழுந்துள்ள அதிருப்தி, செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு பெரிய மைனஸ். காங்கிரஸுக்கு இருக்கும் செல்வாக்கு, கூட்டணி பலம் ஆகியவற்றால் பழனிநாடார் முந்துகிறார்.

ஆலங்குளம்

தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா, அ.தி.மு.க சார்பில் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், பனங்காட்டுப்படை கட்சி சார்பாக ஹரி நாடார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மனோஜ் பாண்டியன் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது மைனஸ். இளைஞர்களின் வாக்குகள் ஹரி நாடாருக்கு ப்ளஸ். அதேநேரத்தில், எளிய அணுகுமுறை, மக்களிடம் உள்ள நெருக்கம், கூட்டணிக் கட்சிகளின் பலம் ஆகியவற்றால் ஆலங்குளத்தைத் தக்கவைக்கிறார் பூங்கோதை.

ராஜபாளையம்

அ.தி.மு.க-வின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ செள.தங்கபாண்டியனும் மோதுகின்றனர். ராஜேந்திர பாலாஜி அமைச்சர் என்றாலும், இந்தத் தொகுதிக்கு புதுமுகம் என்பது அவருக்குச் சற்றே பின்னடைவு. ஆனால், அவர் சார்ந்துள்ள விஸ்வகர்மா சமுதாய மக்களின் வாக்குகளும், அ.தி.மு.க வாக்குவங்கியும் அவருக்கு ப்ளஸ். தங்கபாண்டியனுக்கும் அவர் சார்ந்துள்ள நாடார் சமுதாய வாக்குகள் ப்ளஸ். இவர் தொகுதி முழுவதும் கிராமப்புற மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்திருப்பதும் ப்ளஸ். கடுமையான போட்டியில், கடைசி நேரத்தில் முந்துகிறார் ராஜேந்திர பாலாஜி.

ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி)

அ.தி.மு.க-வின் மான்ராஜ், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாதவ ராவ் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க கட்சிக்குள்ளேயே மான்ராஜ் மீது அதிருப்தி நிலவுவது அவருக்கு மைனஸ். அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சந்திரபிரபாவுக்கு சீட் கொடுக்காததால், அவரின் ஆதரவாளர்கள் ஒதுங்கியிருப்பதும் மான்ராஜுக்கு மைனஸ். வெளியூர் வேட்பாளர் என்பது மாதவ ராவுக்கு மைனஸ். ஆனால், தொகுதியில் பலமாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குவங்கி, தி.மு.க நிர்வாகிகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கரை சேர்கிறது காங்கிரஸ்.

சாத்தூர்

அ.தி.மு.க-வின் வெம்பக்கோட்டை ரவிச்சந்திரன், தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் டாக்டர் ரகுராமன் மோதுகிறார்கள். ரவிச்சந்திரன் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி என்பது ப்ளஸ் என்றாலும், மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாதவர் என்பது மைனஸ். ரகுராமன் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ம.தி.மு.க., தி.மு.க வாக்குவங்கி ரகுராமனுக்கு ப்ளஸ். மேலும், உதயசூரியன் சின்னம் கைகொடுக்கும் என்பதால் ம.தி.மு.க முந்துகிறது.

சிவகாசி

அ.தி.மு.க-வில் லட்சுமி கணேசன், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அரசன் அசோகன் களத்தில் உள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மீதான அதிருப்தியும், தொகுதிக்குப் புதுமுகம் என்பதும் லட்சுமி கணேசனுக்கு மைனஸ். தொழிலதிபர், கல்வித்தந்தை என வலம்வரும் அரசன் அசோகன், மக்கள் மத்தியில் செல்வாக்காக இருப்பது ப்ளஸ். எளிமையான அணுகுமுறை, பட்டாசுத் தொழிலாளர்களின் குடும்ப வாக்குகள், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆதரவு ஆகியவற்றால் அரசன் அசோகன் முந்துகிறார்.

விருதுநகர்

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வின் பாண்டுரங்கன், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், அ.ம.மு.க-வில் கோகுலம் தங்கராஜ் போட்டியிடுகின்றனர். பாண்டுரங்கன் தொகுதிக்குப் புதுமுகம் என்பதும், தேர்தல் பணிகளில் அ.தி.மு.க-வினர் சுணக்கம் காட்டுவதும் இவருக்கு மைனஸ். கொரோனா உச்சத்தின்போது தொகுதியில் 50,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய கோகுலம் தங்கராஜுக்கு அ.தி.மு.க-வில் சீட் மறுக்கப்பட்டதால் அ.ம.மு.க-வில் இணைந்திருக்கிறார். இவர் பிரிக்கும் வாக்குகள் தி.மு.க-வுக்கு ப்ளஸ். தொகுதியில் பெரிதாகத் திட்டங்களை நிறைவேற்றாதது சீனிவாசனுக்கு மைனஸ் என்றாலும், தி.மு.க-வின் வலுவான வாக்குவங்கி கைகொடுப்பதால் விருதுநகரைத் தக்கவைக்கிறது தி.மு.க.

அருப்புக்கோட்டை

அ.தி.மு.க-வின் வைகைச்செல்வன், தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ம.நீ.ம கட்சியின் ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த உமாதேவி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தொகுதிக்குள் கட்சியைத் தாண்டியும் தனக்கான தனிச் செல்வாக்கை உருவாக்கி வைத்திருப்பது, ராமச்சந்திரனுக்கு ப்ளஸ். ஆனால், தொகுதிக்குள் பெரிதாக திட்டங்களைக் கொண்டுவராதது இவருக்கு மைனஸ். ஜெயவிலாஸ் குழுமத்தில் பணியாற்றும் 15,000 தொழிலாளர்களின் குடும்ப வாக்குகள் உமாதேவிக்கு ப்ளஸ். வெளியூர் வேட்பாளர், உட்கட்சிப் பூசல், கொரோனா காலத்தில் தொகுதியில் தலைகாட்டாதது இவையெல்லாம் வைகைச்செல்வனுக்கு மைனஸ். அருப்புக்கோட்டையைத் தக்கவைக்கிறார் ராமச்சந்திரன்.

திருச்சுழி

அ.தி.மு.க கூட்டணியில் மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் ராஜசேகரும், தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ தங்கம் தென்னரசுவும் மோதுகிறார்கள். பத்தாண்டுகள் பதவியிலிருந்தும் தொகுதிக்குப் பெரிதாக திட்டங்களைக் கொண்டுவராதது, தங்கம் தென்னரசுவுக்கு மைனஸ். எளிமையான அணுகுமுறை, தான் சார்ந்துள்ள முக்குலத்தோரின் வாக்குவங்கி, தாயார் சார்ந்துள்ள நாயக்கர் சமூக வாக்குவங்கி தங்கம் தென்னரசுவுக்கு ப்ளஸ். ராஜசேகர் தொகுதிக்குப் புதியவர் என்பது மைனஸ். இவருக்கு அ.தி.மு.க-வினரும் ஒத்துழைக்கவில்லை. அ.ம.மு.க வேட்பாளர் கே.கே.சிவசாமி அ.தி.மு.க-வின் வாக்குகளைப் பிரிப்பதால், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைத் தக்கவைக்கிறார் தங்கம் தென்னரசு.



source https://www.vikatan.com/news/election/tn-assembly-election-survey-2021-tirunelveli-thenkasi-viruthunagar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக