Ad

புதன், 7 ஏப்ரல், 2021

2021-22 நிதியாண்டு தொடங்கியாச்சு... மத்திய அரசின் நிதி சார்ந்த மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

2021 ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு (2021-22) தொடங்கிவிட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல புதிய மாறுதல்களைச் செய்திருக்கிறார், நிதிச் சேவைகளில் என்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

பிராவிடண்ட் ஃபண்ட்:

பிராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்யப்படும் பணம் நிதி ஆண்டில் இரண்டரை லட்சம் ரூபாய்க்குமேல் தாண்டினால் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த உச்ச வரம்பு அரசு ஊழியர்க்களுக்கு 5 லட்சம் ரூபாய் ஆக உள்ளது. பொதுவாக, தொழிலாளர் வைப்பு நிதியில் வழங்கப்படுகிற வட்டியானது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு கிடைக்கும் வட்டியைவிட அதிகமாக இருக்கிறது. அதனால் வரி செலுத்தினாலும் பி.எஃப் முதலீடு ஆதாயமாக இருக்கும்.

Provident Fund

பான் எண் கொடுக்காவிட்டால்..!

ஒருவரிடமிருந்து டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் வசூலிக்கப்படும்பட்சத்தில் அவர் பான் எண் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கவில்லை என்றால் அதிக வரி பிடிக்கப்படும்.

மேலும், கடந்த இரு ஆண்டுகளில் ரூ.50,000 ரூபாய்க்கு மேல் டி.டி.எஸ் பிடிக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் அவர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால் இனி இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் இதற்காக பட்ஜெட்டில் செக்ஷன் 206AB மற்றும் செக்ஷன் 206CCA என்கின்ற இரண்டு புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய காசோலைகள் மட்டுமே செல்லும்:

கடந்தாண்டுகளில் பல சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் முழுமையாக இணைக்கப்பட்டுவிட்டன. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைத்துள்ளது. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைந்துள்ளது இந்த இணைப்பு நடவடிக்கை தற்போது முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது.

Banking

2021 ஏப்ரல் 1 முதல் சிறிய வங்கியின் காசோலைகள் காலாவதியாகிவிடும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி, பெரிய வங்கி சார்பாக வழங்கப்பட்ட காசோலைகள் மற்றும் பாஸ்புக் புத்தகத்தை மட்டுமே இனி பயன்படுத்த முடியும். அதனால் வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகள் மற்றும் வங்கிப் புத்தகத்தை இதுவரை பெறவில்லை எனில், வங்கிக் கிளைகளை அணுகி உடனடியாகப் புதிய காசோலை புத்தகத்தைப் பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு செய்யாவிட்டால் உங்கள் கணக்கில் பணம் இருந்தாலும் இனி சிறிய வங்கிகள் வழங்கிய காசோலைகளைக் கொடுத்தால் அது செல்லாததாகக் கருதப்படும்.

இந்த மாறுதல் காரணமாக வாடிக்கையாளர்கள் பின் தேதியிட்ட காசோலைகளை வழங்கி இருக்கும் அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் இந்த மாறுதலைத் தவறாமல் செய்ய வேண்டும். உதாரணமாக, காசோலை மூலம் கடனுக்குத் தவணை செலுத்தும்பட்சத்தில் பழைய காசோலையைத் திரும்பப் பெற்று புதிய காசோலையைத் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்று மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் போன்ற பலவிதமான திட்டங்களில் பின்தேதியிட்ட காசோலைகளைக் கொடுத்திருந்தால் அங்கெல்லாம் மாற்றம் செய்ய வேண்டிவரும். அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக இந்த மாற்றங்களைச் செய்வது வங்கிச் சேவையில் எந்தக் குளறுபடியும் வராமல் இருப்பதற்கு உதவும்.

Real Estate! #InvestingTips

யூலிப் பாலிசி வருமானத்துக்கு வரி:

பங்குச் சந்தை சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் (ULIP Scheme) நிதி ஆண்டில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு பிரீமியம் செலுத்தும்பட்சத்தில் அந்தத் திட்டத்தில் கிடைக்கும் வருமானத்துக்கு அவரவர் வருமான வரி வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

யூலிப் பாலிசியில் ஆண்டு பிரீமியம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டாம்.

ரியல் எஸ்டேட் முதலீடு: டி.டி.எஸ் இல்லை

நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த திரட்டப்படும் ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் சார்ந்த முதலீடுகளில் (REIT – Real Estate Infrastructure Trust) மற்றும் Invit (Infrastructure Investment Trust) கிடைக்கும் டிவிடெண்ட் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் வெளிவந்துள்ளது.

மக்களிடம் நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முதலீடுகளில் ஆர்வத்தை ஏற்படுத்த முற்படும் வகையில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த டிவிடெண்ட் தொகைக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது அவரவர் வருமான வரி வரம்புக்கு ஏற்ப வரி கணக்கீடு செய்யப்பட்டு வரி செலுத்த வேண்டும். அதனால், இதை முதலீட்டாளர்களுக்கு லாபகரமானது எனச் சொல்ல முடியாது. ஒரு வசதி என்று மட்டுமே சொல்ல முடியும்.

Senior Citizens

மிகவும் மூத்த குடிமக்கள் வரிக் கணக்கு தாக்கல் சலுகை..!

75 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள் பென்ஷன் மற்றும் வங்கி டெபாசிட்கள் மூலம் வருமானம் கிடைக்கப் பெற்றால் அவர்கள் இந்த நிதியாண்டு முதல் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம். அவர்களுக்குக் கிடைக்கும் வட்டி மற்றும் பென்ஷன் தொகையைக் கணக்கிட்டு தானாகவே வரி பிடித்தம் செய்யப்பட்டுவிடும்.

இந்தத் திட்டத்தின் மூலம் வருமான வரிச் சலுகைகள் வழங்கப்படவில்லை. வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறைகளில் இருந்து மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வட்டி மற்றும் பென்ஷன் தவிர்த்து பிற வருமானங்கள் கிடைக்கப்பெற்றால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் ஒரே வங்கிக் கிளையில் பெற்றால் மட்டுமே இந்தச் சலுகை. இந்த மாறுதல்களை நிதித் திட்டமிடலில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளவும்.



source https://www.vikatan.com/business/finance/finance-minister-announces-financial-changes-in-financial-year-2021-22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக