சராசரிக்கும் கீழான உயரம், ஜிம் பக்கமே போகாத உடம்பு, ஒட்டிய கன்னம், வறண்ட புன்னகை... அதை மறைக்கும் அடர்ந்த தாடி மீசை என சராசரி தோற்றம் கொண்டவன்தான் கேரளத்தின் சுமார் மூஞ்சி குமார் 'அசோகன்'. திருமணம் என்பதே பெருங்கனவு என்றாகிப்போன அந்த முதிர்கண்ணனின் பெருங்கனவு பலித்ததா இல்லையா என்பதே 'மணியறையிலே அசோகன்!' (மணமேடையில் அசோகன்)
OTTயில் ஃபஹத் ஃபாசிலின் 'C U Soon' படத்தோடு ரிலீஸாகியிருக்கும் இந்தப் படம் லாக்டௌனுக்கு முன்பு எடுக்கப்பட்டது. துல்கர் சல்மானும் படத்தின் ஹீரோவான நடிகர் ஜேக்கப் கிரிகோரியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள் என்பதே எதிர்பார்ப்பைக் கூட்டியது. கிரிகோரி தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் நடித்த 'அக்கர கழ்ச்சகல்' என்ற காமெடி நெடுந்தொடர் மலையாள சேனலான 'கைரளி டிவி'யில் மிகப்பிரபலம். இந்தப் படத்துக்குத் தேவையான ஆவரேஜ் லுக் இளைஞன் பாத்திரத்துக்கு அவரே பொருத்தமாக இருப்பார் என துல்கர் அழைத்ததும் ஓடிவந்து 'நானும் இணைந்து தயாரிக்கிறேன்' என்று சொல்லி நடித்திருக்கிறார். ஆனால், படம் எப்படி இருக்கிறது?
போஸ்டரில் அழகழகான பெண்களுக்கு நடுவே சராசரித்தோற்றம் கொண்ட கிரிகோரி கேரக்டர் எதிர்பார்ப்பை எகிற வைத்ததில் ஆச்சர்யமில்லை. அதேபோல அசோகனின் முதலிரவில் கேமராவுக்கு முதுகைக் காட்டும் அவரது மனைவி கேட்கும் அந்த அதிர்ச்சி கேள்வியோடு படம் ஆரம்பிப்பதால், 'கல்யாணம் நடந்துடுச்சு. ஆனா, எப்பிடி?' என 'குஷி' படம்போல ஆரம்பத்தில் நமக்குள் கேள்வி எழுவது படத்தின் ப்ளஸ். ஆனால், கதையில் அது மட்டுமே ப்ளஸ் என்பதே சோகம்.
கதையின் ஒன்லைன் ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால், கனவுகளில் அழகான பெண்ணைக் கரம்பிடித்து முதலிரவில் முகம் பார்த்து நாணும் இளைஞன் பாத்திரம் சேட்டன்களுக்குப் புதிதில்லை.
மலையாள சினிமாவில் இயக்குநர்-கம்-நடிகரான வினீத் ஸ்ரீனிவாசன் பல படங்களில் ஏற்று நடித்த பெண்களைப் பார்த்து கூச்சப்படும், தாழ்வு மனப்பான்மை கொண்ட இளைஞன் பாத்திரம்தான் இந்த அசோகன். எனவே கிரிகோரி என்ன வித்தியாசம் காட்டி நடித்தாலும் வினீத் ஸ்ரீனிவாசன் கண்முன் வந்து போகிறார். அவரின் திரைக்கதை காட்சியமைப்புகளுக்கு முன் இந்த அசோகனின் உணர்வுகள் பலவீனமான திரைக்கதை மற்றும் காட்சிகளால் மனதில் பதியவில்லை. துல்கர் ஒரே ஒரு காட்சியில் வருகிறார். அந்தக் காட்சி அவ்வளவு அழகு. ஆனால், படத்தை துல்கரால் காப்பாற்ற முடியவில்லை. பாடல்கள் மூலம் இசையமைப்பாளர் ஸ்ரீஹரியும், ஒளிப்பதிவாளர் சஹத் கக்கும் கவனிக்க வைக்கிறார்கள். படம் முழுவதும் வரும் பெண்கள் மீது நாமும் ஈர்ப்புகொள்ள பாடல்களின் 'ஒலி, ஒளி' ஜாலத்தில் கவனிக்க வைக்கிறார்கள். பாடல்கள் ஒவ்வொன்றும் நிஜமாகவே உலகத்தரம்!
பொதுவாக ஜாதகத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்களைப் பற்றிய கதைகளை சினிமாவில் பார்த்திருப்போம். இதில் ஹீரோவுக்கு நடக்கிறது. ஜாதகம் பிரச்னையில்லை என்றாலும் இவர் வரன் பார்க்கும் பெண்களுக்கும் இவரைப் பிடிக்கவில்லை. இப்படி தட்டிக்கழிக்கப்படும் அசோகனின் வாழ்க்கையில் வசந்தம் வருகிறது என்பதோடு படம் முடிகிறது.
சொல்ல மறந்துட்டேன். படம் நெடுக அழகழகான மலையாள ஹீரோயின்ஸ் கேமியோ பண்ணியிருக்கிறார்கள்.
நடுவில் ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தைக் கழிக்க ஒரு வாழை மரத்தோடு அசோகனுக்கு கல்யாணம் நடக்கிறது. உடனே, 'அப்புறம் அதை வெட்டிப் போட்ருவாங்க கரெக்ட்டா ப்ரோ?' என கேட்கிறீர்கள்தானே? இந்த இடத்தில் தான் இயக்குநர் சம்ஷு சாய்பா ஒட்டுமொத்த கிரியேட்டிவிட்டியையும் கொட்டி யோசித்திருக்கிறார். அந்த வாழை மரத்தின்மீது மானசீகமாக பேரன்பை வளர்க்கிறார் அசோகன். 'என்ன இருந்தாலும் என் மனைவி இது!' என்கிறது அவரின் பலவீனமான இதயம். வாழையை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் பார்த்து நேசம் வளர்க்கிறார்.
'கல்லானாலும் கணவன் போல வாழையானாலும் வாழ்க்கைப்பட்டவ பாஸ்!' என நாம் நினைக்க வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். அதற்காக நீள நீளமாக காட்சிகள். வாழை மரத்தின் பின்பக்கம் லைட்ஸ் வைத்து கேமராவில் பட்டுத்தெறிக்கும் ஒளிவித்தை காட்டி என்னென்னமோ பண்ணுகிறார்கள். 'சிரிக்கவா அல்லது அழவா?' எனக் கேட்க வைக்கும் அளவுக்கு இயக்குநருக்கே அந்தக் காட்சிகள் காமெடிக்கா, சென்ட்டிமென்ட்டுக்கா என்ற தெளிவில்லாததால் நாமும் குழம்பிவிடுகிறோம்.
சரி கதைக்கு வருவோம்... வாழையடி வாழையாக அசோகனுக்கு இரண்டு வாழைக்கன்றுகளும் பிறக்கின்றன. நீங்கள் அசோகனை தப்பாக நினைக்க வேண்டாம். வாழை மரம் இரண்டு கன்றுகளைக் கொடுத்துவிட்டு விபத்தில் இறந்துவிடுகிறது! அதை தன் மகள்களாக 'சிவகாமி', 'சிவகங்கா' எனப் பெண்களின் பெயரிட்டு வளர்க்கிறார் அவ்வளவுதான்.
ஒரு கட்டத்தில் எப்பேர்ப்பட்ட கிறுக்கனிடம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என படம் பார்க்கும் பார்வையாளர்கள் மனதில் உணர்வெழும்போது அசோகனை மனநல ஆலோசனை மய்யத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள் அவர் நண்பர்கள். மய்யம் என்றதும் 'டுப்புச்சிக்கு டுப்புச்சிக்கு பிக்பாஸ்' என கமல் பாட்டுபாடி குணமாக்க வருவார் என நினைக்க வேண்டாம். பெண் மனநல மருத்துவர் ஒரு மான்டேஜ் பாடலில் அசோகனுக்கு 'பிராந்தல்லா... கொறைச்சு பிரச்னையானு' என சரியாக்கி அனுப்பி வைக்கிறார்.
Also Read: #CUSoon ஐபோனில் ஒரு படம்... எப்படியிருக்கிறது ஃபகத் ஃபாசிலின் லாக்டெளன் சினிமா?!
ஒருவழியாக அசோகனுக்கு கல்யாணம் நடக்கிறது. அதுவும் எப்படி? சின்ன ட்விஸ்ட். அவர் கண்ட கனவுக்கன்னியோடு அல்ல. நமக்கெல்லாம் கனவுக்கன்னியாக இருந்த பெண்ணொடு. ஆம், கேரளம் தாண்டி தமிழ்நாட்டு இளசுகளை வசீகரித்த ஒரு அழகான ஹீரோயினோடு கல்யாணம் முடிகிறது. உடனே, 'அப்போ அந்த ரெண்டு வாழைங்களோட வாழ்க்கை?' என நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது.
க்ளைமேக்ஸில் குனிந்து அந்த வாழைகளிடமே ஹீரோ இப்படி கேட்கிறார்: 'உங்க ரெண்டு பேருக்கும் சித்தியை பிடிச்சிருக்கா?'
ஐயய்யோ அசோகா..!
source https://cinema.vikatan.com/tamil-cinema/dulquer-salmans-maniyarayile-ashokan-malayalam-movie-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக