அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மல்லிகார்ஜுன கார்கே, நேற்று தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் பிறகு, அவர் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். 47 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் கார்கே. அந்தக் குழுவில், கார்கேவை எதிர்த்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சசி தரூர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
வழி காட்டுதல் குழு!
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மொத்தம் 9,835 வாக்குகள் பதிவாகியிருந்தன. 7,897 வாக்குகளைப் பெற்ற கார்கே வெற்றிபெற்றார். தோல்வியடைந்த சசி தரூர் 1,072 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த நிலையில், நேற்று தலைவர் பதவியேற்றவுடன், கட்சித் தேர்தல் குழுக் கூட்டத்தைக் கூட்டினார் கார்கே. அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுவான காங்கிரஸ் காரிய கமிட்டி குழு கலைக்கப்பட்டது. `மீண்டும் காரியக் கமிட்டி அமைக்கப்படும் வரை, 47 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும்' என்றும் கார்கே அறிவித்தார்.
அந்தக் குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், ஆனந்த் ஷர்மா, திக்விஜய் சிங், பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
`காந்தி குடும்பம் யாரையும் விட்டுவைக்காது!'
இந்த நிலையில், வழிகாட்டுல் குழுவில் சசி தரூர் இடம்பெறாதது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. குறிப்பாக, பா.ஜ.க இந்த விஷயத்தைக் கையிலெடுத்து காங்கிரஸை விமர்சித்துவருகிறது. `காந்தி குடும்பம் சார்பாக நிறுத்தப்பட்ட கார்கேவை எதிர்த்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டதால், சசி தரூர் இனி கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுவார். அதன் தொடக்கம்தான் இது' என பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர்.
பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், ``கார்கே வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் குழுவில் சசி தரூரின் பெயர் இடம்பெறவில்லை. காங்கிரஸிலிருந்து அவரை ஓரம்கட்டுவது தொடங்கிவிட்டது. காந்தி குடும்பம் யாரையும் விட்டுவைக்காது. அடுத்தது கெலாட்தானே?'' என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால், சசி தரூரோ, கார்கேவுக்கு முழு ஆதரவு தருவதாகக் கூறியிருக்கிறார்.
கார்கே, சோனியா காந்தி ஆகியோருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``காங்கிரஸ் கட்சியை முன்னெடுத்துச் செல்ல எனது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் கார்கேவுக்கு கொடுப்பேன்'' என்று ட்விட்டரில் சொல்லியிருக்கிறார்.
இது குறித்து காங்கிரஸ் தரப்பைச் சேர்ந்தவர்கள், ``புதிய தலைவர் பதவியேற்றவுடன் காங்கிரஸ் காரிய கமிட்டியைச் சேர்ந்தவர்களும், நிரந்தர நிர்வாகிகளும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது கட்சியின் விதி. மீண்டும் காரிய கமிட்டி அமைக்கப்படும் வரையிலும்தான் இந்த வழிகாட்டுதல் குழு செயல்படும். இது தற்காலிகமான ஒரு குழுதான். இதில் இடம்பெறாதவர்களுக்குக் கட்சி முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அர்த்தமில்லை. பா.ஜ.க இதைவைத்து அரசியல் செய்கிறது. அடுத்தடுத்து முக்கியப் பதவிகளுக்கான தேர்தல்கள்கூட நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது. சில மாநிலத் தலைவர்களைக்கூடக் கட்சியின் புதிய தலைவர் மாற்றுவதற்கான வாய்ப்பிருக்கிறது'' என்கின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/is-congress-purposely-avoids-sasi-tharoor-in-the-47-member-steering-committee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக