Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

திடீர் வெடிச்சத்தம், பொசுங்கிய உடல், 22 வருட போராட்ட வாழ்க்கை... மகாலிங்கத்தின் கண்ணீர்க் கதை!

மகாலிங்கத்தின் கதையை அறிந்தால், கல் மனமும் கண்ணீர் சிந்தும். அந்த விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால், இன்று தன்னாலான வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றியிருப்பார். ஆனால், துள்ளி ஓடும் வளரிளம் பருவத்தில் எதிர்பாராத அந்த விபத்து மகாலிங்கத்தை முழுவதுமாக முடக்கிவிட்டது. இவரால் பேச முடியாது, இயல்பாக சுவாசிக்கவோ, சாப்பிடவோ முடியாது. இவர் சாப்பிடும் காட்சியை நேரில் பார்த்தால், நம்மால் அடுத்த சில நாள்களுக்கு இயல்பாகச் சாப்பிட முடியாது. அவ்வளவு வேதனை அது. என்னதான் நடந்தது மகாலிங்கத்துக்கு?
மகாலிங்கம்

`கொதிக்கும் வெண்கலக் குழம்பு தொண்டை வழியே நம் உடலுக்குச் சென்றால்...?' - நினைத்துப் பார்க்கவே பயங்கரமான அந்த நிகழ்வுதான் இவருக்கு நிஜத்தில் நடந்துள்ளது. மெலிந்த தேகத்துக்குள் ஆறாத காயங்களையும் வலிகளையும் சுமந்துவரும் மகாலிங்கம், நம்பிக்கை தளராமல் மனைவி குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.

``என் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம். ஏழ்மையான குடும்பம். எனக்கு நாலு அக்கா, மூணு தங்கை. வீட்டுல யாருமே படிக்கலை. அப்பா பித்தளை குடம் செய்ற தினக்கூலி தொழிலாளி. அக்காக்கள் பீடி சுத்துற வேலைக்குப் போனாங்க. ஆனாலும், வறுமையால தினமும் ஒருவேளை அல்லது ரெண்டு வேளை மட்டும்தான் சாப்பிட முடியும். குடும்ப கஷ்டத்துக்கு உதவ லீவ் நாள்கள்ல நானும் வேலைக்குப் போவேன். பத்தாவது சம்மர் லீவ்ல குத்துவிளக்கு பண்ற வெண்கல பட்டறைக்கு வேலைக்குப் போனேன். ஒருநாள் எதிர்பாராத விதமா கொதிகலன் வெடிச்சிருச்சு. சுதாரிச்சு ஓடுறதுக்குள்ள கொதிக்கும் உலோகக் குழம்பு என் வாய்க்குள் போய்டுச்சு.

மகாலிங்கம்

மூச்சுக்குழாய், உணவுக்குழாய் பொசுங்கிய நிலையில், துடிதுடிச்சு சுருண்டு விழுந்தேன். ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க. தொண்டையில் இருந்த அந்த உலோகக் குழம்பை நீக்கி, சுவாசிக்க மூச்சுக்குழாயில் டியூப் பொருத்தினாங்க. ஆஸ்பத்திரியில் ஒரு மாசம் சிகிச்சையில் இருந்தும் முன்னேற்றம் ஏற்படலை. உடல்நிலை ரொம்பவே மோசமடைய திருநெல்வேலி கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். வயித்துல டியூப் பொருத்தி திரவ உணவுகளைக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. பிறகு, மேல் சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட்டேன். சில வருஷமா பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைகள் எடுத்தும்கூட பெருசா பலனில்லை. அப்போ தொண்டையில புழுக்கள் உருவாகி துர்நாற்றத்துடன் என் நிலைமை மோசமாச்சு. சென்னை ரிஜிட் ஆஸ்பத்திரியில டாக்டர் ராஜ்குமார் இலவசமா சிகிச்சை கொடுத்து என்னைக் காப்பாத்தினார்" - தனக்கு ஏற்பட்ட அசாதாரணமான சூழலை, லேசான நடுக்கத்துடன் எழுதிக்காட்டும் மகாலிங்கம் தொடர்கிறார்.

``ஒரு நுரையீரலும் இரைப்பையும் நீக்கப்பட்ட நிலையில், அபாயக் கட்டத்தைக் கடந்து வீடு திரும்பினேன். ஆனா, அந்த விபத்துக்குப் பிறகு, என்னால இயல்பா சுவாசிக்க முடியாது. வாய் வழியே சாப்பிட முடியாது. அப்படியே வாழப் பழகினேன். எனக்கு மறுவாழ்வு கிடைச்சதுக்குக் காரணமே, சென்னை `சுயம்' அமைப்பைச் சேர்ந்த உமா மேடம்தான். என்னைக் காப்பாற்ற உதவியதுடன், மேற்கொண்டு படிக்கவும் உதவினாங்க. கரஸ்ல ப்ளஸ் டூ முடிச்சுட்டு, விவரிக்க முடியாத வேதனைகளுடன் ரெகுலர் காலேஜ்ல எம்.ஏ முடிச்சேன். பிறகு, `சுயம்' அமைப்புலயே சில காலம் என்னாலான வேலைகளைச் செஞ்சேன்.

மகாலிங்கம் உணவு சாப்பிடும்போது...

சென்னை சூழல் எனக்கு ஒத்துக்கலை. அம்பாசமுத்துரத்துல இருந்த என் வீட்டுக்கு வந்தேன். பெற்றோருக்குப் பிறகு, எனக்கு ஒத்தாசையா இருக்கணுமேனு கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. என்னோட உடல்நிலையால யாருமே என்னைக் கட்டிக்க முன்வரலை. அப்பதான் சொந்த அக்கா மகளான இசக்கியம்மா என்னைக் கட்டிக்க முன்வந்தா..." - எழுத்து வழி தகவல் பறிமாற்றத்துக்கு இடைவெளிவிடுகிறார் மகாலிங்கம்.

``எங்களுதும் ஏழ்மையான குடும்பம்தான். நானும் படிக்கலை. என்னோட நினைவு தெரிஞ்ச காலத்துல இருந்தே இவரைப் பத்தி எனக்குத் தெரியும். அப்போவே இவர் மேல எனக்கு அன்பு அதிகம். சின்ன வயசுல துறுதுறுனு இருப்பார். அந்த விபத்துக்குப் பிறகு இவரோட கஷ்ட நிலையால வருந்தினேன். இக்கட்டான சூழல்ல, இவரை நான் கட்டிக்கிறேன்னு சொன்னதும் வீட்டுல ஏத்துகிட்டாங்க. கல்யாணத்துக்குப் பிறகு இப்பவரை அம்பாசமுத்திரத்துலதான் இருக்கோம். உடல் உழைப்பு கொடுத்து இவரால எந்த வேலையும் செய்ய முடியாது. நிறைய முயற்சி செஞ்சும் இவருக்கு ஏத்த வேலை கிடைக்கலை.

மகாலிங்கம் உணவு சாப்பிடும்போது...

கடவுள் விட்ட வழி இதுதான். ஏத்துகிட்டுதானே ஆகணும். பெரும்பாலும் வீட்டுக்குள்ளதான் இவரால இருக்க முடியும். காய்கறி நறுக்கித் தர்றதுல இருந்து வீட்டு வேலைகளுக்கு இவரால முடிஞ்ச ஒத்தாசையைச் செய்வார். இவரோட தேவைகளைச் சுயமா பூர்த்தி செஞ்சுப்பார். மழை, பனி, வெயில்னு பருவநிலை மாறும்போதெல்லாம் இவரோட உடம்பு பாதிக்கப்படும். மூச்சு விடவே சிரமப்படுவார். இவருக்கு உணவுக் கட்டுப்பாடுகள் உண்டு. வயிறு வலி உட்பட பக்க விளைவுகள் தொடர்ந்து இருக்கு. இவ்வளவு வலிகளையும் தாங்கிகிட்டு இவர் நம்பிக்கையோடு வாழறதுதான் பெரிய விஷயம்.

உட்கார்ந்தபடி கம்யூட்டர்ல தமிழ், இங்கிலீஷ்ஸ்ல டைப் செய்வார். இவரால இயல்பா பேச முடியாது. உதட்டசைவுகளை வெச்சு இவர் சொல்ல நினைக்கிற விஷயங்களைத் தெரிஞ்சுப்பேன். மூச்சு விடவும், சாப்பாடு செலுத்தவும் இவர் உடல்ல எப்பயும் ரெண்டு டியூப் இருக்கும். தண்ணியையும் ஊசி மூலமாதான் உடலுக்குள் செலுத்துவார். சூடான, குளிச்சியான எந்த உணவுகளையும் இவர் உடல்ல நேரடியா செலுத்தக் கூடாது. உணவு, தண்ணி உட்பட எதையும் ருசிச்சு, உணர்வுபூர்வமா உடலுக்குள் செலுத்த முடியாது. ரொம்பவே வேதனையான நிலை இவருக்கு" என்று கண்ணீருடன் கூறுகிறார் இசக்கியம்மாள்.

மகாலிங்கம்
சாப்பாடு உட்பட உணவுப் பொருள்கள் எதுவானாலும், வாயில் மென்று அதைப் பாத்திரம் ஒன்றில் துப்புகிறார். கூழ் மாதிரியான அந்த உணவை ஊசி போடும் `சிரஞ்'சில் செலுத்தி குழாய் வழியே உணவுக் குழாயில் செலுத்திக்கொள்கிறார் மகாலிங்கம். கொடுமையான இந்த முறையில் 22 ஆண்டுகளாக உணவு உண்பதுடன் குடிநீரும் அருந்துகிறார்.

``ஏற்கெனவே நிறைய ஆபரேஷன் செய்யப்பட்டதால என் உடல்நிலை மோசமான கட்டத்துலதான் இருக்கு. இத்தனை வருஷமா நான் உயிர் வாழ்றதே ஆச்சர்யம்தான். இதுக்கு என் குடும்பத்துக்குத்தான் நன்றி சொல்லணும். இனி என் உடல்ல ஆபரேஷன் பண்றது உயிருக்கு ஆபத்தாகிடும். எனவே, இப்படியே வாழ்ற வரைக்கும் காலத்தை ஓட்டணும். வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாத்த முடியாத வேதனை ஒருபக்கம். பையன் விஷ்வ தர்ஷனுக்கு நாலு வயசு. தூக்கிக் கொஞ்ச முடியாம, பேச முடியாம, அவனோட எதிர்காலத்துக்கு வழிகாட்ட முடியாம இருக்கிற தவிப்பு மறுபக்கம்.

மகாலிங்கம்

ஒரு நோயாளி மாதிரிதான் இப்பவரை இருக்கேன். ஆனாலும், மனசார ஏத்துகிட்டு எனக்குத் தேவையான எல்லா மருத்துவ உதவிகளையும் செஞ்சு என்னைக் கவனிச்சுக்கறாங்க இசக்கியம்மா. தினமும் வீட்டுல ஒண்ணாதான் உட்கார்ந்து சாப்பிடுவோம். ஆனா, நான் சாப்பிடுற முறையைப் பார்த்து எந்த வருத்தமும் சலனமும் இல்லாம ரெண்டு வாய் அதிகமா சாப்பிடுங்கன்னு ஊக்கப்படுத்துவாங்க. ஒருநாள்கூட முகம் சுளிக்காம, வெறுப்பில்லாம மனநிறைவோடு என்னைக் கவனிச்சுக்கிற மனைவி எனக்குக் கிடைச்ச பெரிய வரம்." - உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளால் மேற்கொண்டு எழுத முடியாமல் மகாலிங்கத்தின் கைகள் நடுங்குகின்றன.

``கல்யாணம் ஆன காலத்துல இருந்து இப்பவரை ரொம்பவே அன்போடுதான் பார்த்துக்கறேன். துளி அளவுகூட இவர் இப்படி இருக்காரேனு ஏக்கமாவோ, கவலையாவோ நான் பார்க்கலை. இவர் இருக்கிற காலம்வரை நல்லபடியா பார்த்துக்கிறதுதான் என் ஒரே லட்சியம். முன்னாடி ஓரளவுக்கு இவரோட உடல்நிலை நல்லா இருந்துச்சு. ஆனா, இவருக்கு தினமும் பழம், முட்டை, சிறுதானிய உணவுகளையெல்லாம் கொடுக்கணும்னு டாக்டர்கள் சொல்றாங்க. ஆனா, எங்க வசதிக்கு இதெல்லாம் சாத்தியமில்லை. எங்களால முடிஞ்ச சாப்பாடுதானே சாப்பிட முடியும். சத்தான உணவில்லாம இவரோட உடல் ரொம்பவே மெலிஞ்சுகிட்டே போகுது. பார்க்கவே வருத்தமாதான் இருக்கும். என்ன பண்றதுனே தெரியலை.

குடும்பத்துடன் மகாலிங்கம்

இவரையும் எங்க பையனையும் தனியா விட்டுட்டு எங்கயும் போக முடியாது. எனவே, நான் வீட்டுலயே துணி தைக்கறேன். இதுல கிடைக்கிற சொற்ப வருமானம் போதாது. என் அம்மாதான் வாடகை உட்பட பல்வேறு தேவைகளுக்கும் இப்பவரை உதவுறாங்க. கூலி வேலை செய்ற அவங்களும் சிரமப்பட்டுத்தான் எங்க செலவுக்குப் பணம் அனுப்புறாங்க. கஷ்டமா இருக்கு. கணவரும் நானும் சேர்ந்து கவனிச்சுக்கிற மாதிரி ஒரு மளிகைக்கடையோ, பெட்டிக்கடையோ வெச்சுக்கொடுத்து உதவினா புண்ணியமா போகும். சிரமத்திலும் உழைச்சுப் பிழைச்சுப்போம்" என்கிற இசக்கியம்மாளின் கண்ணில் ஈரம் கசிகிறது!

Note:

போராட்ட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் மகாலிங்கம் - இசக்கியம்மாள் தம்பதிக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com' என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். மகாலிங்கம் குறித்த தகவல்கள் உங்களுக்கு உடனடியாகத் தரப்படும். உங்கள் உதவியை மகாலிங்கம் - இசக்கியம்மாள் தம்பதிக்கு கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.



source https://www.vikatan.com/news/general-news/tragic-story-of-accident-survivor-mahalingam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக