சீர்காழியில் இன்று அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த தலைமை ஆசிரியரின் மனைவி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த ஜோதி. ஓதவந்தான்குடி அரசுப் பள்ளி தலைமையாசியராகப் பணிபுரிகிறார். இவரின் மனைவி சித்ரா (வயது 40). இவர், வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்காக இன்று விடியக் காலை வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர், தலையில் கொடூர ஆயுதங்களால் பலமாகத் தாக்கி தப்பிச் சென்றுள்ளனர். தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் சிதறிய நிலையில், சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் ஆனந்த ஜோதி ,உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சித்ராவின் உடலைக் கண்டு கதறி அழுதனர்.
Also Read: ஒரு கொலை ரூ.6,000 - மிரளவைக்கும் ரௌடிகள்... அலறும் தமிழகம்...
இதுகுறித்து, சீர்காழி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்ரா உடலை பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்தக் கொலை நகை பறிப்பு நோக்கில் நடந்ததா அல்லது வேறு ஏதாவது முன்விரோதம் காரணமாக நடந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதிகாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இக்கொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/government-teachers-wife-killed-in-sirkali
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக