Ad

வியாழன், 17 செப்டம்பர், 2020

`மகிழ்ச்சி, அதிர்ச்சி!’ - துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவி `ரியாக்‌ஷன்’

தி.மு.க பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சொந்த ஊரான வேலூருக்கு இன்று வந்தார் துரைமுருகன். அவருக்கு தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் வழிநெடுக பல இடங்களில் சிறப்பான வரவேற்பு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து, ஊர்வலமாகச் சென்ற துரைமுருகன் வேலூர் மாநகரில் உள்ள பெரியார், அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வரவேற்பு

பின்னர், பத்திரிகையாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ``60 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருக்கிறவன் என்பதால், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பொதுச்செயலாளர் பதவியை வழங்கி அங்கீகாரம் கொடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் தலைமைக்கும், தலைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read: தி.மு.க: பொதுச்செயலாளர் துரைமுருகன்... பொருளாளர் டி.ஆர் பாலு... சமாளிப்பாரா ஸ்டாலின்?

நான், சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன், அமைச்சராகவும் இருந்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக பத்திரிகைகளுடனும் பத்திரிகையாளர்களுடனும் நட்புறவாகத்தான் பழகிவருகிறேன். உண்மையை வெளியே கொண்டுவருவதுதான் பத்திரிகை தர்மம். அதற்கு நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனாலும், எனக்கு எதிராக யாரேனும் பொய் பரப்பினால், அதன் உண்மையை அறிந்து வெளிக்கொண்டுவருவது ஊடகத்தின் கடமை. நட்புறவு தொடர வேண்டும்.

பெரியார் சிலைக்கு மரியாதை

தி.மு.க-வை உருவாக்கிய தலைவர்கள் இருந்த இடத்தில் நான் அமர்ந்துள்ளேன். இதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது’’ என்றவர்`நீட்’ தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

மேலும்,``பதவிக்கு வந்த பிறகு முதல் முறையாக சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன். எதிரான கேள்விகள் எதுவும் இன்னைக்கு வேண்டாம். ஓரிரு நாள் ஆகட்டும், என்ன கேட்டாலும் பதில் சொல்கிறேன்’’ என்று பேட்டியை துரைமுருகன் முடித்துக்கொண்டார்.



source https://www.vikatan.com/news/politics/duraimurugan-speaks-about-elected-as-dmk-gs-in-vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக