Ad

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

`கட்சியை வீதிக்குக் கொண்டுவந்துவிட்டார் பிரேமலதா!' - விளாசும் சி.ஹெச்.சேகர்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் காலில் பலர் விழுவது போன்ற கார்ட்டூன் ஒன்றை அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர், எல்.கே.சுதீஷ் நேற்று வெளியிட்டிருந்தார். விஜயகாந்த் காலில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி விழுவது போன்று அந்த கார்ட்டூன் இருந்தது அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியது. உடனடியாக சம்பந்தப்பட்ட கார்ட்டூன் பதிவை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து சுதீஷ் நீக்கிவிட்டார். இருந்தாலும் ஆத்திரம் அடங்காத தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் தே.மு.தி.க-வை வறுத்து எடுக்கிறார்கள்.

சர்ச்சையை ஏற்படுத்திய சுதீஷின் கார்டூன்

தே.மு.தி.க-வின் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ-வாக இருந்தவரும் தற்போது தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளராக இருப்பவருமான சி.ஹெச்.சேகரிடம் பேசினோம். ``தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்தபோது, அமெரிக்காவில் இருந்து வீடியோ வெளியிட்டு அழுதவர் விஜயகாந்த். அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் நேராக வீட்டுக்குக் கூடச் செல்லாமல் கலைஞரின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் மீது விஜயகாந்துக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஆனால், பிரேமலதா விஜயகாந்த் சில கோடிகளுக்காக பல லட்சம் தொண்டர்களை அடமானம் வைத்து கட்சியை நடத்துகிறார். கட்சியையே வீதிக்கு கொண்டுவந்துவிட்டார். யாரும் நம்மை மதிக்கவில்லையே என்கிற ஆத்திரத்தில்தான் இப்படி அக்காவும், தம்பியும் உளறிக் கொட்டுகிறார்கள்.

Also Read: ராமேஸ்வரம்: `தமிழக அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார்!'- பிரேமலதா

`கிங்டம்’ இல்லாத விஜயகாந்தை ‘கிங் மேக்கர்’ என்கிறார்கள். இந்த புளிப்பு மிட்டாய் விற்கும் கதையெல்லாம் மலையேறிவிட்டது.`தி எண்ட்’ போட வேண்டிய இடத்தில் தே.மு.தி.க வந்து நிற்கிறது. இதற்கு முழுக்க முழுக்க பிரேமலதாவும், அவர் தம்பி சுதீஷின் குடும்ப அரசியலும்தான் காரணம். இதில் எல்லாம் விஜயகாந்துக்கு உடன்பாடு இருப்பதாக நான் கருதவில்லை” என்றார்.

சி.ஹெச்.சேகர்

தே.மு.தி.க-வின் விளக்கமறிய அக்கட்சி பிரமுகர்களை தொடர்பு கொண்டோம். ``தலைமையிடம் அனுமதி பெறாமல் நாங்கள் பேசக் கூடாது” என்று ஒதுங்கிக் கொண்டனர். தி.மு.க வாரிசு பிரமுகருடன் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் `டீல்’ விரைவிலேயே முடிந்துவிடும் என்றும் சில நாள்களுக்கு முன்பு வரை பேச்சு ஓடியது. திடீரென `யு’ டர்ன் அடித்து, `தே.மு.தி.க தனித்து போட்டியிட வாய்ப்பு’ என பிரேமலதா கூறியிருப்பது, `டீல்’ இன்னும் படியாததையே காட்டுவதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. இன்னும் என்னென்ன வெடிகுண்டுகளை சாலிகிராமம் வீசப்போகிறதோ... பொறுத்திருந்து பார்ப்போம்.



source https://www.vikatan.com/news/politics/former-dmdk-mla-ch-sekar-slams-premalatha-vijayakanth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக