தேர்தலுக்கு சுமார் 2,500 `சி’ வரை தேவைப்படும் என்று ஆளும்தரப்பு கணக்கு போட்டிருக்கிறதாம். அதாவது, ஒரு தொகுதிக்கு சராசரியாக 10 `சி.’ கூட்டணிக் கட்சியினருக்கு மொய் எழுதுவது தனிக் கணக்கு. இந்தநிலையில், `கணிசமான செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன். அ.தி.மு.க 160 இடங்களில் போட்டியிட்டால், அதில் 80 சீட்டுகளை எனது கோட்டாவாக ஒதுக்க வேண்டும்.
அப்படியென்றால் மட்டுமே இந்த டீல்’ என்று தோட்டாவைப்போல இந்த டேட்டாவைப் பாய்ச்சியதாம் பன்னீர் தரப்பு. அதேபோல `தேர்தலில் வெற்றிபெறும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை வைத்து முதல்வர் யார் என்பதை முடிவெடுக்கலாம். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி என்னிடம் இருக்க வேண்டும்’ என்று கருதுகிறதாம் பன்னீர் தரப்பு.
கோட்டா எல்லாம் சரி... தொண்டனுக்கு மிஞ்சுமா பேட்டா?!
புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி-யாக 2019, நவம்பர் மாதம் டாக்டர் அருண்சக்திகுமார் பொறுப்பேற்றார். மூணு லாட்டரி, மணல் கடத்தல், போலி மது விற்பனை, பாலியல் தொழில் உள்ளிட்டவற்றை ஒடுக்கி, சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
நேர்மையாக வேலைபார்க்கும் போலீஸார் துடிப்புடன் இருந்தார்கள். இரு மாதங்களுக்கு முன்னர் அருண்சக்திகுமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். `பழைய திருடி... கதவைத் திறடி’ கதையாக நிலைமை பழையபடி தலைகீழாக மாறிவிட்டது. கஞ்சா வியாபாரம், மணல் கடத்தல் தொடங்கி `மன்மத’ பிசினஸ் வரை சக்கைபோடு போடுகிறது. தற்போதைய எஸ்.பி-யான பாலாஜி சரவணன் வந்த புதிதில் சில நாள்கள் அதிரடி காட்டியதுடன் சரி. பிறகு அப்படியே `ஆஃப் லைன்’ மோடுக்குச் சென்றுவிட்டார் என்கிறார்கள்.
தூங்கினது போதும்.... எந்திரிங்க எஸ்.பி... எந்திரிங்க!
இழந்த அமைச்சர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று மனம் தளராத விக்கிரமாதித்தனாக முட்டிமோதுகிறார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் மணிகண்டன். இந்தநிலையில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி எம்.எல்.ஏ-வான சதன்பிரபாகரும் எஞ்சிய சில மாதங்களாவது கோட்டைப் பிரதிநிதியாக வலம்வந்துவிட வேண்டும் என்று தனியாகக் காய்நகர்த்துகிறார்.
இவருக்கு மதுரைக்காரர் ஆதரவாம். தனக்குப் போட்டியாக நடக்கும் காய்நகர்த்தலைக் கண்டு கடுப்பிலிருக்கிறது மணிகண்டன் தரப்பு!
கொடுமை கொடுமைன்னு கோட்டைக்கு வழி தேடினா... போட்டிக்கு வந்து சேர்ந்துச்சாம் `பெருமை!’
ஈரோடு, திண்டல் பகுதியில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக `ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. 42 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு செப்டம்பர் 3-ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. ஈரோட்டைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் தென்னரசு, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவைச் `சிறப்பி’த்தனர்.
ஆனால், ``முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுவரும் வேளையில், பூமி பூஜை விழா தேவையா?” என்று இவர்களின் எதிர் கோஷ்டியினர் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். சுதாரித்துக்கொண்ட எம்.எல்.ஏ-க்கள் பூமி பூஜை செய்தி, புகைப்படங்கள் வெளியே கசியாத வண்ணம் `கவனித்து’க்கொண்டார்களாம்.
`யார் செத்தா நமக்கென்ன... நீ ரசத்தை ஊத்து’ கதையா இல்ல இருக்கு!
நெல்லை மாவட்ட அ.தி.மு.க பஞ்சாயத்து இது. ராதாபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான மைக்கேல் ராயப்பன் தலைமையில், அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் மாவட்டச் செயலாளர் நாராயண பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் தனி கோஷ்டியாகச் செயல்படுகிறார்களாம். தொகுதி எம்.எல்.ஏ-வான இன்பதுரைக்கு `அல்வா’ கொடுத்துவிட்டு, கட்சிக் கூட்டங்களைத் தனியாக நடத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர் தச்சை கணேஷ்ராஜாவுக்கு எதிரான கோஷ்டியினர் பலரும் மைக்கேல் ராயப்பன் அண்ட் கோவுக்கு பக்கபலமாக இருப்பதால், கட்சிக்குள் குழப்பம் அதிகரித்திருக்கிறது.
இன்பதுரை இப்போது `துன்ப’துரை!
அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு வலது கையாக இருக்கும் பிரமுகர் ஒருவர், தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் புதிய வீட்டைக் கட்டிவருகிறார். வீட்டின் மர வேலைகளுக்காக தென்னங்குடியைச் சேர்ந்த `ஒன்றிய’த்தை ஓரம்கட்டியுள்ளார். ஒன்றியமோ... `அதற்கென்ன போச்சு’ என்று திருவிடைமருதூர் அருகில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்திலிருந்த சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரத்தை நைஸாக வெட்டி அனுப்பிவிட்டார். இந்த விவகாரத்தை இப்போது எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துள்ளன. விரைவில் பிரச்னை பூதாகரமாக வெடிக்கலாம்!
ஊரான் வீட்டு நெய்யே... வைத்தியின் `வலது கை’யே!
டெல்டா மாவட்டங்களுக்கு ஆட்சியர்களாக வருபவர்கள், பெரும்பாலும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். ஆனால், தற்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரான கோவிந்த ராவ், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் தொடர்பு எல்லைக்குள் வருவதே இல்லையாம்.
``விவசாயப் பிரச்னைகள் தொடர்பா பேசலாம்னு நாங்க போன் செஞ்சா, `ட்வீட் செய்யுங்கள். ரிப்ளை பண்றேன்’ என்று மெசேஜ் அனுப்புகிறார். ட்வீட்டுன்னா என்னங்க!” என்று புலம்புகிறார்கள் அப்பாவி விவசாயிகள்.
கலெக்டரோட சம்பளத்தையும் ட்விட்டர் கணக்குலயே போட்டுடலாமே!
சிவகங்கை மாவட்டத்தில் மண் கொள்ளை தொடர்பான ஒரு வழக்கில், சமீபத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு கண்டனங்களைத் தெரிவித்திருந்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. 60-க்கும் மேற்பட்ட குவாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விதிமுறைகளை மீறி அனுமதியளித்திருந்ததே இதற்குக் காரணம். மேலும், `மண் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது’ என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றமும் கண்டிப்பு காட்டியுள்ளது. இதனால், கனிமவளம் சம்பந்தப்பட்ட எந்த ஃபைல் வந்தாலும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கையெழுத்துப் போடத் தயங்குகிறாராம்.
ஏகப்பட்ட ஃபைல்கள் தேங்கியிருப்பதால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பாஸ்கரன் தரப்பு அதிருப்தியில் இருக்கிறது.
கனிமத்துக்கு மினிமம் கேரண்டியாச்சும் கொடுங்கப்பா... அப்பதானே கையெழுத்துப் போடுவாரு!
தற்போது தமிழக பா.ஜ.க-வின் மேலிட பொறுப்பாளராக முரளிதர ராவ் இருக்கிறார். தேர்தல் பணியை ஸ்பெஷலாகக் கவனிக்க, அகில இந்திய பொதுச் செயலாளராக இருக்கும் பூபேந்திர யாதவ்வை கூடுதலாக நியமிக்க இருக்கிறதாம் கமலாலய டெல்லித் தலைமை.
அ.தி.மு.க தலைமை தரப்பில், `மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்தான் தமிழகத் தேர்தல் வேலைகளை கவனிக்க வருவார்; அவர் நமக்கு அணுக்கமாக இருப்பார்’ என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பூபேந்திர யாதவ் கறார் பேர்வழியாம். எடப்பாடியின் எண்ணத்தில் வெந்நீர் ஊற்றிவிட்டது பா.ஜ.க தலைமை.
வெந்நீரில் துளிர்க்குமா இரட்டை இலை!
தென் மாவட்டம் ஒன்றில் `மணல்’ அமைச்சர் என்று பெயரெடுத்தவர் அவர். சமீபத்தில் திருமண விருந்து ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது கறுப்புப் பணத்தை காரைக்குடி, தேவகோட்டை ஏரியாக்களில் வட்டிக்குவிடும் கும்பல் ஒன்று, அமைச்சரை அணுகிப் பேசியிருக்கிறது.
Also Read: `தென் தமிழகக் கோரிக்கை முதல் தி.மு.க-வை உடைக்கும் முருகன் வரை!' - கழுகார் அப்டேட்ஸ்
ஒவ்வொரு மாதமும் கமிஷன் போக, வட்டியாக அவர்கள் குறிப்பிட்ட தொகையைக் கேட்டு அமைச்சர் வியந்துவிட்டாராம். அந்த பார்ட்டிகளிடம்,``நம்ம பணமும் இருக்கு. வட்டிக்கு விட்டுத் தர்றீங்களா?” என்று கேட்டிருக்கிறார்.``சிறப்பா செஞ்சுடலாம்ணே” என்று கிளம்பியிருக்கிறது அந்தக் கும்பல். அடுத்த அஞ்சு வருஷத்துக்கு ஏதாவது ஒரு தொழில் செஞ்சாகணுமே!
ஒருவழியாக தி.மு.க பொதுச் செயலாளராகியிருக்கிறார் துரைமுருகன். பொறுப்பை ஏற்றுக்கொண்ட கையோடு, செப்டம்பர் 3-ம் தேதி மாலை சென்னை, கோட்டூர்புரத்திலுள்ள வீட்டுக்குச் சென்ற துரைமுருகனுக்கு பால் பாயசத்துடன் இனிப்பான வரவேற்பை அளித்தார்களாம் அவரின் குடும்பத்தினர். பொதுவாகவே இனிப்பை அவ்வளவாக விரும்பி உண்ணாதவர், அன்று இரண்டு கப் நிறைய பாயசம் அருந்தினாராம்.
ஆயாசத்தைப் போக்கிய `பதவி’ பாயசம்!
source https://www.vikatan.com/news/politics/ops-election-demand-to-duraimurugans-happiness-mr-kazhugu-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக