நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகியவற்றுக்கு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசில் சிரோமணி அகாலிதளம் கட்சியும் இடம் பெற்றிருந்தது. மக்களவையில் இரண்டு இடங்களை கொண்ட சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக இருக்கிறார். மற்றொரு உறுப்பினரான அவரின் மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல், மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றைய மக்களவை கூட்டத்தில் பேசிய சுக்பீர் சிங் பாதல், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்தார். மேலும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் அறிவித்தார். இவரின் இந்த அதிரடி அறிவிப்பு நாடாளுமன்றத்தில் அதிவலைகளை ஏற்படுத்தியது. ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினாலும் மத்திய அரசுக்கு சிரோமணி அகாலி தளத்தின் ஆதரவு தொடரும் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஹர்சிம்ரத் கவுர் பாதல். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன். விவசாயிகள் மகளாகவும், சகோதரியாகவும் இருப்பதில் தான் பெருமை” என்று குறிப்பிட்டார்.
சுக்பீர் சிங் பாதல், செய்தியாளர்களிடம், ``நாங்கள் விவசாயிகளுடன் நிற்கிறோம், அவர்களுக்காக எதையும் செய்வோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்போம்” என்றார்
ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஹர்சிம்ரத் கவுர் பாதல் வசம் இருந்த உணவு பதப்படுத்துதல் தொழில் துறையை மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹர்சிம்ரத் கவுர் பாதல் 1966 -ம் ஆண்டில் டெல்லியில் பிறந்தவர். சிரோமணி அகாலிதளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதலை 1991 -ம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரின் சகோதரர் சிரோமணி அகாலிதளம் எம்.எல்.ஏ வாக இருக்கிறார். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த ஹர்சிம்ரத் கவுர் அரசியலில் களம் கண்டது 2009 -ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் களத்தில்.
அந்த தேர்தல் ஹர்சிம்ரத் கவுர் பாதல் காங்கிரஸ் வேட்பாளரை பதின்டா தொகுதியில் 1,20,960 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதன் பின்னர் 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களிலும் அதே தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்று மூன்றாவது முறையாக நாடாளுமன்றம் சென்றார். இரண்டாவது முறையாக 2014-ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளரை வீழ்த்தியதற்கு பரிசாக, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து அந்த பதவியில் நீடித்து வந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் விவசாயிகளுக்காக தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் மத்திய அரசின் குறிப்பிட்ட வேளாண் மசோதாவுக்கு சுக்பீர் சிங் பாதல், அவரின் மனைவி ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் எதிராக வாக்களித்துள்ளனர் என்பதும் குறிப்பித்தக்கது.
Also Read: ``இந்த மசோதாக்கள் விவசாயத்தையே அழித்துவிடும்!" போராட்டத்தில் ஹரியானா & பஞ்சாப் விவசாயிகள்
இந்த ராஜினாமாவுக்கு பிறகு பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ``விவசாயிகள் தொடர்பான ஒரு விஷயத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அதன் கூட்டணிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டாமா?... மசோதாவைத் திரும்பப் பெறுங்கள், பின்னர் ஒருமித்த மசோதாவுக்கு பேச்சுவார்த்தை நடத்துங்கள்” எனக் கூறியுள்ளார். இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்பது குறிப்பிடதக்கது.
சிரோமணி அகாலிதளம் கட்சியின் இந்த முடிவு தாமதமானது என்ற குற்றசாட்டும் எழுந்திருக்கிறது. மேலும் கூட்டணியில் நீடிப்பதால் மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. பஞ்சாப்பில் இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் அரசியல் செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.
விவசாய மசோதா தொடர்பான பிரச்னைகளில் மாநில அரசுகளும் எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது, கூட்டணிக் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவரே ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/who-is-harsimrat-kaur-badal-who-resigned-her-minister-post-to-oppose-agriculture-bill
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக