`ஆளுங்கட்சியினரின் வெறுப்பு பிரசாரங்களைத் தங்கள் தளத்தில் கட்டுப்படுத்துவதிலோ அல்லது அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதிலோ சமூக வலைதளமான ஃபேஸ்புக் அக்கறை காட்டவில்லை’ என்று கூறி அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ஃபேஸ்புக்கின் வெறுப்பு பிரசாரங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விதிகள் இந்திய அரசியல் சூழலைப் பொறுத்தவை என்றும் அந்தக் கட்டுரையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதற்கு உதாரணமாக தெலங்கானா மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜாசிங் விவகாரமும் அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், `இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும்’ என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக ஃபேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன்பாக ஃபேஸ்புக் இந்தியா நிர்வாகிகள் நேற்று ஆஜராகி விளக்கமளித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த விசாரணையில், வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான கொள்கைகள் குறித்த கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தநிலையில், தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜாசிங் பெயரிலான பக்கங்களை முடக்கியிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகள் தொடர்பான தங்களது விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், இது போன்ற பதிவுகளை நீக்குவதற்காக ஃபேஸ்புக் தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்?! மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
அதேநேரம், ஃபேஸ்புக்கில் தனக்கு அதிகாரபூர்வ கணக்கு எதுவும் இல்லை என்று விளக்கமளித்திருக்கிறார் பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜாசிங். இது குறித்து ட்விட்டரில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அதில்,`` ட்விட்டர் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் மட்டுமே எனக்கு அதிகாரபூர்வ கணக்குகள் இருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனக்கு அதிகாரபூர்வ கணக்கு எதுவும் இல்லை'' என்று தெரிவித்திருந்தார். மேலும், தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் தனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
``பல ஃபேஸ்புக் பக்கங்கள் எனது பெயரைப் பயன்படுத்திவருவதாக எனக்குத் தெரியவந்தது. அதில் பதிவு செய்யப்படும் கருத்துகளுக்கு நான் எந்தவகையிலும் பொறுப்பில்லை'' என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார். மேலும், தனது ஃபேஸ்புக் பக்கம் கடந்த 2018-ம் ஆண்டிலேயே ஹேக் செய்யப்பட்டு பிளாக் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஃபேஸ்புக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜாசிங் பெயரிலான மூன்று கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. அவை மூன்றுமே ஏறக்குறைய மூன்று லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களைக்கொண்ட கணக்குகள்!
source https://www.vikatan.com/government-and-politics/controversy/facebook-bans-bjp-mla-t-raja-singh-named-pages-over-hate-speech
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக