Ad

சனி, 26 செப்டம்பர், 2020

`வேளாண் சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை!’ - தமிழக அரசின் விளக்கமும் விவசாய சங்கத்தின் கேள்வியும்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மைகள் அதிகம் என தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் இத்துறையின் செயலாளர் ககன்திப் சிங் பேடியும் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக, ஒப்பந்த சாகுபடி முறை கொண்டு வரப்பட்டதாகவும், அதேபோல்தான் மத்திய அரசு விவசாயிகளுக்கு உத்தரவாதமான விலை கிடைப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்கள். இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், `கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பணத்தை தமிழக அரசால் பெற்றுத் தர முடியவில்லை. அப்படியென்றால், தற்போது மத்திய அரசு கொண்டு வரும் சட்டமும் தோல்வியில்தான் முடியுமா?” என கேள்வி எழுப்புகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைப்பொருள் வணிகம் ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த பண்ணைய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்படுவதாகவும், இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தது. தற்போது தமிழ்நாட்டிலும் இச்சட்டங்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில்தான் தமிழக அரசு இச்சட்டங்களுக்கு ஆதரவான நிலை எடுத்தது. இதுகுறித்து விளக்க அளிப்பதற்காக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் இத்துறையின் செயலாளர் ககன்திப் சிங் பேடியும் நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்கள். ``இச்சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மைகள் அதிகம். எவ்வித பாதிப்பும் இல்லை” என தெரிவித்தார்கள். ``தமிழக அரசுதான் இந்தியாவிலேயே முதல் முறையாக ஒப்பந்த சாகுபடி முறையை கொண்டு வந்தது.

அதன்படிதான், தற்போது மத்திய அரசு, விவசாய விளைப்பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான உத்தரவாத சட்டத்தை கொண்டு வந்துள்ளது” என ககன் திப் சிங் பேடி தெரிவித்தார். இக்கருத்து விவசாயிகளை குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``ஒப்பந்த சாகுபடி என்பது விவசாயிகளை சுரண்டி ஏமாற்றக்கூடிய சூழ்ச்சி திட்டம். தற்போது இது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரக்கூடிய ஒப்பந்த பண்னைய சட்டம், எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு பயன் அளிக்காது என்பதை தமிழக அரசு மறைமுகமாக ஒப்புக் கொள்கிறது. சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்து கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாகவே வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். விவசாய அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த தொகுதியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளின் பெயரை பயன்படுத்தி, வங்கிகளில் மோசடியாக 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுவிட்டு ஆலைகளையும் மூடிவிட்டது.

சுவாமிமலை சுந்தர விமல்நாதன்

பாவம், விவசாயிகள் தாங்கள் வாங்காத கடனுக்கு கடன்காரர்களாக நிற்கிறார்கள். மேலும் திரு ஆரூரான் மற்றும் அம்பிகா ஆலை குழுமம், விவசாயிகள் கொடுத்த கரும்புக்கு, முழுமையான விலையை கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. சுமார் 120 கோடி ரூபாய்க்கும் மேல் விவசாயிகள் பணம் இந்த சர்க்கரை ஆலைகளிடம் முடங்கிக் கிடக்கிறது. இந்த ஆலைகள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஆலைகள், விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறது. மொத்தம் 1,850 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இந்த பணத்தை ஏன் தமிழக அரசால் மீட்டு தர முடியவில்லை.

விவசாயிகளின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி, வங்கிகளின் கடன் பெற்ற சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. ஒப்பந்த சாகுபடி முறை என்பது விவசாயிகளை வஞ்சிக்கக்கூடியது என்பது உலகறிந்த உண்மை” என தெரிவித்தார்.

ககன்தீப் சிங் பேடி

இதுகுறித்து தமிழக வேளாண்மைத்துறை செயலாளர் ககன்திப் சிங் பேடியிடம் பேசியபோது, ‘’பென்னாடம் அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை மீதும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த, நியாயமான ஆதரவு விலையை பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் கொடுத்துவிட்டன. மாநில அரசின் பரிந்துரை விலையை தான் சர்க்கரை ஆலைகள் கொடுக்கவில்லை. இதனை பெற்று தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் சட்டங்களை தமிழக அரசு ஆதரிப்பதில் எந்த ஒரு அரசியல் உள்நோக்கமும் கிடையாது. விவசாயிகளின் நலன் கருதியே இச்சட்டங்களை ஆதரிக்கிறோம்.”என்றார்.

இதுகுறித்து மீண்டும் சுவாமிமலை விமலநாதனிடம் நாம் பேசியபோது, ‘’1966-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கரும்பு ஆணை கட்டுப்பாட்டு சட்டப்படி, விவசாயிகள் கொடுத்த கரும்புக்கு 14 நாள்களுக்குள் சர்க்கரை ஆலைகள் பணம் தர வேண்டும். ஆனால் இதை பின்பற்றுவதே இல்லை. தமிழக அரசும் தட்டிக் கேட்பதில்லை. திருஆரூரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் மீது, ஏற்கனவே உள்ள வருவாய் வசூல் சட்டப்படிதான் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் விவசாயிகளுக்கு எந்த வித நியாயமும் கிடைக்கவில்லை. ஒப்பந்த சாகுபடி முறையில் கரும்புக்கே இந்த நிலையென்றால், நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்து விளைப்பொருள்களும் ஒப்பந்த சாகுபடி முறையில் கொண்டு வந்தால் விவசாயிகளின் நிலை என்னவாகும் ? நினைத்து பார்ப்பதற்கே மனம் பதறுகிறது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/farmers-association-questions-on-tamilnadu-governments-explanation-on-agriculture-act

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக