Ad

சனி, 26 செப்டம்பர், 2020

சீனா: 3 ஆண்டுகளில் 16,000 மசூதிகள் இடிப்பு! - ஆஸ்திரேலியாவின் ASPI அறிக்கை சொல்வதென்ன?

ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் (ASPI) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளிலுள்ள 16,000 மசூதிகளை கடந்த மூன்று வருடங்களில் சீன அதிகாரிகள் இடித்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

சீனாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஜின்ஜியாங் மாகாணம் ரஷ்யா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது.

அங்கு வசிக்கும் உய்குர் இன மக்களை, சீனமயமாக்க அந்நாட்டு அரசு முயன்றுவருவதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்காக அதிகமான முகாம்களையும், சிறைகளையும் சீனா ரகசியமாக வைத்திருப்பதாக அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் கூறியிருந்தது.

இந்தநிலையில், செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான புனிதத் தலங்கள் மற்றும் புள்ளிவிவரம் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் (ASPI) சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் இருந்த 16,000 மசூதிகளை சீன அதிகாரிகள் இடித்திருக்கிறார்கள்.

மசூதி அழிப்பு நடவடிக்கைகளின் பெரும்பகுதி கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக நகர்ப்புற மையங்களான உரும்கி மற்றும் காஷ்கருக்கு வெளியே கிட்டத்தட்ட 8,500 மசூதிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆஸ்திரேலியாவின் ASPI தெரிவித்துள்ளது.

மேலும், சீனாவின் வடமேற்கிலுள்ள நிங்ஜியா மண்டலம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. சீனாவின் ஜிங் ஜியாங் பகுதியில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக, டாங்ஜிங் கவுன்ட்டியின் வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் அதிக அளவில் வாழ்ந்துவருகின்றனர்.

சமீபத்தில், வெய்ஸு பகுதியில் ஏற்கெனவே இருந்த மசூதியை இடித்துவிட்டு, புதிதாக மசூதி கட்டப்பட்டிருந்தது. ஆனால், அனுமதி இல்லாமலும், விதிகளை மீறியும் மசூதிகள் கட்டப்பட்டதாகக் கூறி, உள்ளூர் அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அதில், `மசூதியை அரசே அப்புறப்படுத்தும்’ என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அந்த மசூதிகள் அனைத்தும் இடிக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றும் ASPI தெரிவித்திருக்கிறது.

கிட்டத்தட்ட 15,500 மசூதிகள் இடிக்கப்படுவதிலிருந்து தப்பித்தாலும், அவற்றின் வழிபாட்டுப் பகுதிகளை இழந்து நிற்கின்றன என்றும் கூறப்படுகிறது.

மசூதிகள், கல்லறைகள் மற்றும் புனித யாத்திரைத் தலங்கள் போன்ற இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலங்களில் மூன்றில் ஒரு பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் அல்லது இப்பகுதியிலுள்ள புத்த கோயில்கள் எதுவும் அழிக்கப்படவில்லை எனவும் ASPI கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த சீன வெளியுறவு அமைச்சகம், ஆஸ்திரேலியா ASPI-யின் அறிக்கையை `சீன எதிர்ப்பு அறிக்கை’ என்றும், அதில் நம்பகத்தன்மை இல்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து பதிலளித்த சீன அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், இந்தp பிராந்தியத்தில் சுமார் 24,000 மசூதிகள் இருப்பதாகவும், ஜிங் ஜியாங்கின் மொத்த மசூதிகளின் எண்ணிக்கை அமெரிக்காவிலுள்ள எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார். மேலும், சில முஸ்லிம் நாடுகளைவிட ஒரு முஸ்லிம் நபருக்கு சராசரி மசூதிகளின் எண்ணிக்கை என்பது இங்குதான் அதிகமாக இருக்கிறது என்றும் வாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/china-demolished-thousands-of-mosques-says-aspi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக