12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் பண்பாடு - வரலாற்றை ஆய்வு செய்ய மத்திய கலாசார அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளதாக துறையின் அமைச்சர் பிரகலாத் சிங் படேல், நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குழுவில், தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒரு நபர்கூட இடம்பெறவில்லை என்றும், குழுவில் பெரும்பான்மையாக ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களே இடம்பெற்றிருக்கிறார்கள் என்றும் சர்ச்சை வெடித்தது.
இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், மத்திய அரசின் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஒருவர்கூட இடம்பெறாதது ஆச்சர்யமளிப்பதாகக் குறிப்பிட்டுருந்த முதல்வர், குழுவில் தமிழக நிபுணரை இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். மேலும், தமிழகக் கலாசாரம் இன்றி இந்திய கலாசாரம் முழுமையடையாது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், மத்திய அரசின் கலாசார ஆய்வுக் குழுவைக் கலைக்க வலியுறுத்தி 32 எம்.பி-க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ``12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய பண்பாடு - வரலாற்றை ஆய்வு செய்ய மத்திய கலாசார அமைச்சகம் 16 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களோ, வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ, பட்டியலின மற்றும் பெண்கள் என ஒருவர்கூட இல்லை. அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறிப்பிட்ட சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
மத்திய அரசால், செம்மொழி என அங்கீகரிக்கப்பட்டுள்ள செழுமையான வரலாற்றைக் கொண்ட தமிழ் உள்பட தென்மாநில மொழிகளைச் சேர்ந்த அறிஞர்கள் யாரும் அந்தக் குழுவில் இடம்பெறவில்லை. குழு அமைக்கப்பட்ட விதமே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. விந்திய மலைக்குக் கீழ் இந்தியா கிடையாதா? வேதகால நாகரிகம் தவிர வேறு நாகரிகங்கள் இந்தியாவில் இல்லையா? சம்ஸ்கிருதத்தைத் தவிர பழையான மொழிகள் எதுவும் இல்லையா?
Also Read: 12,000 வருட இந்திய வரலாற்றை ஆராய குழு: தமிழர் ஒருவர் கூட இல்லை! - கொதிக்கும் அரசியல் கட்சிகள்
ஜான் மார்ஷல், சுனித்குமார் சாட்டர்ஜி, ஐராவாதம் மகாதேவன், டோனி ஜோசப் மற்றும் ஆர்.பாலகிருஷ்ணன் போன்ற அறிஞர்கள் இந்தத் துறைக்கு மகத்தான பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள். அவர்களது பங்களிப்பை இந்தக் குழு மறுக்க முயற்சி செய்யும் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவிடம் முழுமையான அறிவியல் பார்வை இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. மேலும், வரலாற்றைத் திரித்துக் கூறவும் வாய்ப்பு உண்டு. குழு அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தையே அது சிதைத்துவிடும். எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவைக் கலைக்க உத்தரவிட வேண்டும்'' என்று எம்.பி-க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த கனிமொழி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 32 எம்.பி-க்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/32-mps-writes-president-over-disband-governments-study-of-indian-culture-study-committee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக