Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

`விடிய விடிய தர்ணா; தேநீர் எடுத்து வந்த மாநிலங்களவை துணைத்தலைவர்!’ - மறுத்த எம்.பி-க்கள்

இந்தியாவில் எதிர்க்கட்சிகளும் விவசாயிகளும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முந்தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கடுமையான அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவை

இந்த மசோதாக்கள் தொடர்பான விவாதததின் போது எதிர்க்கட்சிகள், அவையின் மையப்பகுதிக்கு வந்து, அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை கிழித்து வீசினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. `மாநிலங்களவையில் மத்திய பா.ஜ.க அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக’ எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அவையை நடத்திய துணைத்தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனு அளித்தனர்.

Also Read: புதிய வேளாண் சட்டங்கள்... ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க எம்.பி! - விவசாயிகளுக்கு நன்மையா, தீமையா?

இந்நிலையில் நேற்று காலை அவை கூடியதும் ஞாயிறு அன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்டது தொடர்பாக கடும் அதிருப்தி தெரிவித்தார் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு. தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 8 உறுப்பினர்களை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

வெங்கய்ய நாயுடு

இந்நிலையில் தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட எம்.பிக்கள் 8 பேரும் 2-வது நாளாக இன்றும் தங்களின் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், `மாநிலங்களவை விதிகளை மீறும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடந்து கொண்டனர். இந்த சம்பவம் நடந்த நாள், நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் வெட்கக் கேடான நாள்’ என்று கடுமையாக சாடினர்.

Also Read: 'சி.ஐ.ஏ., முத்தலாக், வேளாண் சட்டங்கள்'... தொடரும் இரட்டை நிலைப்பாடு-அ.தி.மு.க-வின் அரசியல் தந்திரமா?

இன்று 2 -ம் நாள் போராட்டத்தில், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொண்டு வந்தார். போராட்டத்தில் ஈபடட்டுள்ள உறுப்பினர்களுக்கு அதனை வழங்குவதற்காக கொண்டு வந்தார். ஆனால் அவரது தேநீரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பிக்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ரிபன் போரா பேசுகையில், ``ஹரிவன்ஷ் ஜி, சக உறுப்பினராக எங்களை பார்க்க வந்ததாகவும் மாநிலங்களவை துணைத்தலைவராக வரவில்லை எனவும் தெரிவித்தார். எங்களுக்காக தேநீரும் ஸ்நாக்ஸ் வகைகளும் எடுத்து வந்தார். நாங்கள் எங்கள் இடை நீக்கத்துக்கு எதிராக போராடி வருகிறோம். இரவு முழுவதும் இங்கேயே தான் இருந்தோம். அரசு தரப்பில் இருந்து யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை. பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்து பேசினார்கள். இந்த போராட்டத்தை நாங்கள் தொடரப் போகிறோம்” என்றார்.

இந்நிலையில் மசோதா நிறைவேற்றத்தின் போது எம்.பி-க்கள் தன்னை அவமதித்ததாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rajya-sabha-deputy-chairman-harivansh-meets-mps-who-were-protesting-in-parliament

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக