Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

`கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டி!’ - நயினார் நாகேந்திரன்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், குமரி மண்டலப் பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் தலைமையில் நெல்லையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென் தமிழகத்தைச் சேர்ந்த 11 மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் இந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Also Read: தனிமைப்படுத்திக் கொண்ட நயினார் நாகேந்திரன்! - முதல்வரின் நெல்லை விசிட் காரணமா?

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க-வின் குமரி மண்டலப் பொறுப்பாளரான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,``கன்னியாகுமரி மண்டலத்துக்கு உள்பட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த மையக்குழு பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கட்சியைப் பலப்படுத்துவது குறித்தும் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்பது பற்றியும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன்

வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனியாகப் போட்டியிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்தும் அதற்கு எப்படி தயார்ப்படுத்திக் கொள்வது என்பதையும் நிர்வாகிகள் விரிவாக ஆலோசித்தார்கள். தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.க-வின் பலம் என்ன என்பது தெரியும் என்பதால் பலரும் தனித்துப் போட்டியிட வலியுறுத்தினார்கள்.

Also Read: தனிமைப்படுத்திக் கொண்ட நயினார் நாகேந்திரன்! - முதல்வரின் நெல்லை விசிட் காரணமா?

அ.திமு.க., மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் பலம் வாய்ந்தவை. ஆனாலும் ஒவ்வொரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே அதன் உண்மையான பலம் என்ன என்பது தெரியவரும். சட்டமன்றத் தேர்தலின்போது பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க ரஜினி விரும்பினால் கூட்டணி அமைக்கலாம்.

நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் பாரதிய ஜனதாக் கட்சி வேட்பாளரே வெற்றி பெறுவார். எங்கள் கட்சியின் சார்பாக எனக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் போட்டியிடத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/i-am-ready-to-contest-in-parliamentary-by-election-says-nainar-nagendran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக