Ad

வியாழன், 17 செப்டம்பர், 2020

`இயற்கை மரணம் ஓ.கே... இறந்தது அங்கொட லொக்கா தானா?' - இலங்கை தாதா மரண வழக்கு சர்ச்சை

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, அங்கு ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு மோஸ்ட் வான்டட் லிஸ்டில் சேர்க்கப்பட்டார். நெருக்கடி அதிகரித்ததால், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இலங்கையில் இருந்து வெளியேறி சட்ட விரோதமாக இந்தியா வந்தார். பெங்களூர், சென்னை, கோவை என்று பல்வேறு இடத்தில் சுற்றியுள்ளார்.

இலங்கை தாதா அங்கொட லொக்கா

Also Read: `டி.என்.ஏ சோதனை; கஸ்டடி விசாரணை!’ - க்ளைமாக்ஸை நெருங்கும் அங்கொட லொக்கா வழக்கு?

கோவையில் பிரதீப்சிங் என்ற பெயரில் தங்கியுள்ளார். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு லொக்கா உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது இலங்கை மற்றும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லொக்கா விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. மேலும், தனது அடையாளத்தை மாற்றி சுதந்திரமாக சுற்றுவதற்காக லொக்காவே இப்படி ஓர் இறப்பு நாடகத்தை பரப்பியிருக்கலாம் என்று இலங்கை போலீஸார் கூறினர். கோவை தனியார் மருத்துவமனையில் லொக்கா பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததும் தெரியவந்தது.

இலங்கை தாதா அங்கொட லொக்கா

இதையடுத்து, லொக்காவுடன் தங்கியிருந்த அவரின் காதலி அமானி தான்ஜி அவர்களுக்கு உதவி செய்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவரது உடலுக்கு நடந்த பிரேத பரிசோதனை ரிப்போர்டில், “அவரது கை விரல்கள், கால் விரல் நீல நிறமாக இருந்தன. அதேநேரத்தில் உடலில் காயங்கள் ஏதுமில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. இது தொடர்பாக உயிரிழந்த உடலின் பாகங்கள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.

இலங்கை தாதா அங்கொட லொக்கா

அதில் அவர், விஷம் வைத்து கொல்லப்படவில்லை என்றும் மாரடைப்பால்தான் உயிரிழந்துள்ளார் என்று ரிசல்ட் வந்துள்ளது. அதேநேரத்தில், உயிரிழந்தது அங்கொட லொக்கா தானா? என்பது தொடர்பாக டி.என்.ஏ ரிப்போர்ட் வெளியாகவில்லை.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி சங்கர், “பிரேத பரிசோதனை முடிவுகள் சந்தேகமாக இருந்ததால்தான், உடல் பாகங்களை ஆய்வகத்துக்கு அனுப்பினோம். அதில்தான், இது இயற்கையான மரணம், விஷம் வைக்கவில்லை என தெரியவந்துள்ளது” என்றவரிடம் டி.என்.ஏ ரிப்போர்ட் குறித்து கேட்டோம். “டி.என்.ஏ முடிவுகள் வருவதற்கு தாமதமாகும்.

இலங்கை தாதா அங்கொட லொக்கா

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது அங்கொட லொக்கா தான் என்று சொல்கின்றனர். உயிரிழந்தது லொக்கா என்பது 90 சதவிகிதம் உறுதியாகிவிட்டது. அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால் டி.என்.ஏ முடிவுகள் கிடைக்க வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/news/crime/article-on-srilankan-don-angoda-lokka-death-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக