Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

`எதிர்பாராத சம்பவம்... வெரி ஸாரி!’ - தென் கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் உன்

சீனாவுடன் மிக நெருக்கமான வர்த்தகத் தொடர்பிலிருக்கும் வட கொரியாவில், கொரோனா பரவல் இல்லை என்பதை உலக நாடுகள் ஏற்க மறுத்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வட கொரியாவுக்குள் கொரோனா பரவத் தொடங்கியிருப்பதாகக் கூறி, தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, சீன எல்லையில் கண்டதும் சுடும் உத்தரவை வட கொரியா பிறப்பித்திருப்பதாக, தென் கொரியாவிலிருக்கும் அமெரிக்க படைத் தளபதி ராபர்ட் அப்ராம்ஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

சீனாவில், கொரோனா பரவல் ஆரம்பித்த காலகட்டத்திலேயே வடகொரியா அதன் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. எல்லை மூடல், கடத்தல் பொருள்களுக்கான தேவையை அதிகரித்திருக்கிறது. இதனால், பலர் எல்லைகளில் பொருள்களை கைமாற்றி வந்திருக்கிறார்கள். இந்தநிலையில் சீன எல்லையில் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கான பகுதியை, புதிய `இடையக மண்டலமாக’ ​​அறிமுகப்படுத்தி, அந்தப் பகுதியில் அத்துமீறி நுழைபவர்கள்மீது, வட கொரியாவின் SOF, SF படைகள், துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இந்தநிலையில், தென்கொரிய அதிகாரி ஒருவர், வட கொரிய பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான கடல் எல்லையாகச் செயல்படும் ராணுவக் கட்டுப்பாட்டு பகுதி அருகே கடந்த 21-ம் தேதி தென் கொரிய மீன்வள அதிகாரி ஒருவர் காணாமல்போனதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரி கண்காணிப்புப் படகில் வட கொரிய எல்லைக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

வட கொரியா

47 வயதான அந்த அதிகாரி காணாமல்போனதாக நம்பப்படும் 24 மணி நேரத்தில் வடகொரிய பாதுகாப்பு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டார். கொரோனா தடுப்புக் கவசங்கள் அணிந்திருந்த வட கொரிய அதிகாரிகள், தென் கொரிய அதிகாரியிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பின்னர் அவரைச் சுட்டுக் கொன்றதுடன், நடுக்கடலிலேயே அவர்மீது எண்ணெயை ஊற்றி, தீ வைத்து சாம்பலாக்கியிருக்கிறார்கள் என குற்றம்சாட்டியது தென் கொரியா.

கொரோனா வைரஸ் எதிர்ப்பு உத்தரவின் கீழ் வட கொரியப் படைகள் இப்படிச் செய்திருக்கலாம் என்று தென் கொரியாவின் ராணுவம் சந்தேகம் தெரிவித்திருந்தது.`வட கொரியப் படையின் இது போன்ற அட்டூழியங்களை எங்கள் ராணுவம் கடுமையாகக் கண்டிக்கிறது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வடகொரியா விளக்கமளிக்க வேண்டும். இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை தண்டிக்கவும் வேண்டும்’ என தென் கொரிய கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் யங்-ஹோ தெரிவித்திருந்தார்.

வடகொரியா - தென்கொரியா அதிபர்கள்

இந்த நிலையில் வடகொரிய வரலாற்றில் அரிதிலும் அரிய நிகழ்வாக, அதிபர் கிம் இந்த விவகாரத்தில் தென் கொரியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ``தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியாவால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், அவரின் உடல் கடலிலே எரிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு வடகொரியா அதிபர் கிம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது எதிர்பாராத, அவமானகரமான நிகழ்வு என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்” என தென் கொரியா தெரிவித்துள்ளது.

Also Read: எல்லையில் சிக்கிய தென் கொரிய அதிகாரி; சுட்டுக்கொன்று எரித்த வட கொரியப் படை! - நடுக்கடல் அதிர்ச்சி

தென் கொரியாவுக்கான வட கொரிய அதிகாரி தரப்பில் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முழு தகவலும் வெளியிடப்படவில்லை. என்றாலும், தென் கொரியா அதிகாரி முறையான அடையாளங்களை காண்பிக்கவில்லை எனவும் அவர் மீது 10 முறை துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் கொரோனா அச்சம் காரணமாக கடலிலே எரித்து விட்டதாகவும் வட கொரியா குறிப்பிட்டிருக்கிறது என தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். சர்வதேச அரசியல் நோக்கர்கள், வட கொரியாவின் மன்னிப்பை அதிசயமாக பார்க்கிறார்கள். இது அரிதிலும் அரிதானதாக குறிப்பிடுகிறார்கள்.

கிம் ஜாங் உன்

1950 -களில் நடைபெற்ற கொரிய போருக்கு பின்னர் தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. 2018 -ம் ஆண்டில் தான் இந்த உறவு மேம்பட தொடங்கியது. குறிப்பாக தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்ற பின்னர் சுமூக உறவு தொடங்கியது. அதன் பின்னரே இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு நடைபெற்று சில ஒப்பந்தங்களும் ஏற்பட்டது. இந்த நிலையில் நடுக்கடலில் நடந்த துப்பாக்கிச் சூடு இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றத்தை அதிகரித்தது. தற்போது வட கொரிய அதிபர் கிம்-யின் மன்னிப்பு காரணமாக இந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/north-korea-president-kim-apology-to-south-korea-in-officer-killed-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக