Ad

சனி, 26 செப்டம்பர், 2020

சென்னை: வாட்ஸ்அப்பில் அந்தரங்க புகைப்படம்... பெண்ணை மிரட்டிய ஆன்லைன் 'லோன் ஆப்' கும்பல்!

ஆன்லைன் லோன் ஆப் மூலம் பெற்ற கடனை, திருப்பிச் செலுத்த முடியாததால், கடன் பெற்ற பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை அவருக்கே அனுப்பிய நிகழ்வு சென்னையில் அரங்கேறியிருக்கிறது.

சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு கொரோனா ஊரடங்கு காரணமாகப் பணப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. கையிலிருந்த காசு முழுவதும் செலவாகிவிட்ட காரணத்தால், ஆன்லைன் லோன் ஆப் மூலம் 20,000 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார் அந்தப் பெண். `ஐ கிரெடிட்' என்ற லோன் ஆப் மூலம் ஏழு நாள்களில் 7,000 ரூபாய் வட்டியோடு சேர்த்து மொத்தம் 27,000 ரூபாயைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டத்தைத் தேர்வு செய்து கடன் பெற்றிருக்கிறார்.

ஏழு நாள்களுக்குப் பிறகு பணம் செலுத்தத் தவறியதால், பல சங்கடங்களைச் சந்தித்திருக்கிறார் அந்தப் பெண். முதலில் கடனை செலுத்தச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன. அவர், `எனக்கு அவகாசம் வேண்டும்' என்று சொல்லி நாள்களைக் கடத்தியிருக்கிறார். பின்னர், அந்த பெண்ணின் கைப்பேசியிலுள்ள அனைத்து எண்களும் டெக்னாலஜி மூலமாகத் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட அனைத்து எண்களுக்கும் அந்தப் பெண் குறித்த கடன் விவரங்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து அனுப்பப்பட்டிருக்கின்றன. இதையடுத்து அந்தப் பெண்ணின் கைப்பேசியிலிருந்த சில அந்தரங்கப் புகைப்படங்கள், அவருக்கே வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டிருக்கின்றன.

வாட்ஸ்அப்

Also Read: அந்தரங்கம் திருட உதவும் `டிராக்கிங்’ ஆப்கள்... தப்பிப்பது எப்படி?

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் புகைப்படங்கள் அனுப்பப்பட்ட எண்ணுக்குத் தொடர்புகொண்டு விசாரித்திருக்கிறார். அதற்கு, ``நீங்கள் பணம் பெற்ற நிறுவனத்திலிருந்துதான் இதுபோலச் செய்யச் சொன்னார்கள். ஒழுங்காகப் பணத்தைக் கட்டிவிடுங்கள்'' என்ற பதில் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண். இந்தச் சம்பவம் குறித்து ஐ கிரெடிட் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம் பின்வருமாறு விளக்கமளித்திருக்கிறது.

ஆன்லைன் லோன் ஆப் என்றால் என்ன?

வங்கிக்குச் சென்று பல ஆவணங்களைச் சமர்ப்பித்து, பல நாள்கள் காத்திருந்து கடன் பெறும் முறை குறித்து நாம் அனைவருமே தெரிந்துவைத்திருப்போம். அதைப்போலவே செல்போன் ஆப் மூலமும் கடன் பெறலாம். ஆனால், இதற்காக, நீங்கள் எங்குமே அலைய வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு ஆப்பை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து, மிகக் குறைந்த ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்து, உடனடியாக பணத்தைப் பெற முடியும். இந்த ஆப்கள் மூலம் ஆயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரை கடன்களைப் பெறலாம். பலவகைக் கடன் திட்டங்களை இந்த ஆப்கள் நமக்குத் தருகின்றன. அதிலொன்றைத் தேர்வு செய்து எளிதாகக் கடன் பெற முடியும்.

கடன்
இந்தியாவில், ஐ கிரெடிட், ஸ்மார்ட் காயின், கேபிடல் ஃபர்ஸ்ட், கேஷ் இ (Cash E), கேஷியா (Cashiya) உள்ளிட்ட பல ஆப்கள் இந்த கடன் சேவையை வழங்குகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் சில கருத்துகளை முன்வைக்கிறார்கள். ``இன்டர்நெட் என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. 2015-க்கு முன்பு மாதம் முழுவதும் 1 ஜிபி பயன்படுத்துவதற்கு 100 ரூபாய்க்கு மேல் செலவு செய்தோம். அளவாக மட்டுமே கைப்பேசியில் இன்டர்நெட் பயன்பாடு இருந்துவந்தது. ஆனால், அதற்குப் பிறகான காலகட்டத்தில் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக மிகக்குறைந்த விலையில் இன்டர்நெட் கிடைக்க ஆரம்பித்தது. மாதம் முழுவதும் 1 ஜிபி-யை வைத்து பயன்படுத்திக்கொண்டிருந்த நமக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி வழங்கப்பட்டது. இந்தியாவில், இன்டர்நெட் விலை குறைக்கப்பட்டதுதான் டெக்னாலஜி மூலமாக இன்று நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

இன்டர்நெட் விலை குறைந்ததையடுத்து எக்கச்சக்க ஆப்கள் இந்தியாவுக்குள் வரத் தொடங்கின. நாமும் பல ஆப்களை பயன்படுத்தத் தொடங்கினோம். அப்படி நாம் ஒரு ஆப்பை பயன்படுத்தும்போது, வேறொரு ஆப்புக்கான விளம்பரம் நம் கண்முன்னே தோன்றுகிறது. சரி இந்த ஆப்பில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடலாமென்று அதையும் டௌன்லோடு செய்கிறோம். அந்த ஆப் டௌன்லோடு ஆனதும் அது கேட்கும் அனைத்து விஷயங்களுக்கும் கண்ணை மூடிக்கொண்டு அனுமதியளிக்கிறோம். இதன் மூலம் நம் டேட்டாக்கள் எளிதாகத் திருடப்பட்டுவிடுகின்றன. அப்படித்தான் இந்த லோன் ஆப்களும் நம் கைப்பேசியில் நுழைந்துவிடுகின்றன. எளிதாக நம் தகவல்களையும் திருடிவிடுகின்றன. வேறொரு ஆப்-பை பயன்படுத்திக்கொண்டிருக்கையில் `எளிதாகக் கடன் கிடைக்கும்' என்ற விளம்பரத்தைப் பார்த்தவுடன், சிலர் அந்த ஆப்பை உடனடியாக டௌன்லோடு செய்துவிடுகிறார்கள். இன்னும் சிலர், உடனடியாக செய்யாவிட்டாலும், பணச் சிக்கல் என்று வரும்போது டௌன்லோடு செய்கிறார்கள். குறிப்பாக, இந்த ஆப்களை இளைஞர்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்'' என்கிறார்கள்.

`இந்த ஆன்லைன் லோன் ஆப்கள் எதன் அடிப்படையில் கடன் தருகின்றன?’ என்ற கேள்விக்கு, ``ஆன்லைன் லோன் தரும் பல ஆப் நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. பல்வேறு திட்டங்கள் மூலம் கடன் பெறும் வசதிகளை வழங்குகின்றன. சில ஆப்களில், வங்கிக் கணக்கின் தகவல்கள், அடையாள ஆவணம், கடன் தொகையை மட்டும் குறிப்பிட்டால் போதும்... அன்றைய தேதியிலேயே உங்களுக்கான பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும். தேர்ந்தெடுத்திருக்கும் திட்டத்தைப் பொறுத்து அதற்கான கால அவகாசத்துக்குள் வட்டியோடு சேர்த்து கடனை திரும்பிச் செலுத்த வேண்டும். இன்னும் சில ஆப்களில் மாதா மாதம் வட்டி செலுத்தும்படியான திட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் அசலைத் திருப்பிச் செலுத்தும் வரை, மாத வட்டி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானாக எடுத்துக்கொள்ளப்படும். மாதத்துக்கு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகப் பெறுபவர்களாக இருந்தால் மட்டுமே இது போன்ற திட்டங்களில் நீங்கள் கடன் பெற முடியும். இந்தத் திட்டத்தில் கடன் பெற, பான் கார்டு எண், முகவரி ஆவணம், சமீபத்திய சம்பளச் சான்றிதழ், வங்கிக்கணக்கு ஆவணம் உள்ளிட்டவற்றை நீங்கள் அந்த ஆப் மூலமே அப்லோடு செய்ய வேண்டியிருக்கும். ஆவணங்களை அப்லோடு செய்த சில மணி நேரத்திலேயே உங்கள் வங்கிக்கணக்குக்குப் பணம் வந்துவிடும்.

1,000 ரூபாய் தொடங்கி 10 லட்சம் ரூபாய்க்கும் மேல்கூட இந்த ஆன்லைன் ஆப்கள் மூலம் கடனாகப் பெற முடியும். லட்சங்களில் கடன் பெற வேண்டுமென்றால், அதற்கேற்றாற்போல மாதச் சம்பளம் இருக்க வேண்டும். சில ஆப்களில், 20,000 ரூபாய் வரை கடன் பெறுவதற்குச் சம்பளச் சான்றிதழ்கூட தேவையில்லை. வங்கியில் கடன் பெற வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்று பலமுறை அலைந்து திரிந்து, ஆயிரம் கேள்விகளை எதிர்கொண்டு, சில பல கையொப்பங்களை இட்டு, செக்யூரிட்டியாக ஏதாவது சமர்ப்பித்து, கஷ்டப்பட்டு, பல நாள்கள் கழித்துத்தான் கடன் பெற முடியும். ஆனால், இங்கு அப்படி எந்தச் சிக்கலுமே இல்லை. உடனடியாக, மிக மிக எளிதாகப் பணம் கிடைத்துவிடுகிறது. அதனால் இளைஞர்கள் பலரும் ஆன்லைன் லோன் ஆப்கள் மூலம் கடன் பெற விரும்புகிறார்கள்'' என்று பதிலளிக்கிறார்கள் தொழில்நுட்ப நிபுணர்கள்.

debt

மேலும், இதிலிருக்கும் சிக்கல்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விவரிக்கிறார்கள். ``நேரில் சென்று வட்டிக் கடையில் கடன் வாங்கினால்தானே பணத்தைக் கேட்டு பிரச்னை செய்வார்கள்... ஆப் மூலம் பணம் பெற்றால் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணம் நமக்கு வரலாம். ஆனால், லோன் ஆப்கள் மூலம் பணம் பெறுவதுதான் மிகப்பெரிய சிக்கலே. முதலாவதாக இந்த ஆப்கள் மூலம் உங்களுடைய செல்போன் டேட்டாக்கள் திருடுபோவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது, இந்த ஆப்கள் அனைத்தும் தனியார் ஏஜென்சிகள் மூலம்தான் பணத்தை வசூலிக்கின்றன. பணம் வசூலிக்க அவர்கள் உங்களைப் பலவிதங்களில் டார்ச்சர் செய்வார்கள். இது குறித்து லோன் ஆப் நிறுவனங்களிடம் கேட்டால் `நாங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். பணம் வசூலிக்கும் தனியார் எஜென்சிகாரர்கள்தான் அப்படிச் செய்திருப்பார்கள்' என்று அவர்களைக் கைகாட்டிவிடுவார்கள். இங்கு தனியார் எஜென்சி என்று குறிப்பிடப்படுபவர்கள், முறையான அனுமதி பெற்று அலுவலகமெல்லாம் வைத்திருக்க மாட்டார்கள். எங்கிருந்தோ இயங்கும் இத்தகைய கும்பல்கள் இது போன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதால், அவர்களை ட்ராக் செய்து நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல'' என்கிறார்கள்.

மேலும், `` இந்தியாவில், பணச்சிக்கல் காரணமாக ஏராளமானோர் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், இது போன்ற ஆப்களில் எளிதாகப் பணம் பெற்று, பின்னர் அதைத் திருப்பிச் செலுத்தவில்லையென்றால் பணம் பெற்றவர்களுக்கு அவமானம்தான் மிஞ்சும். அதன் விளைவாகவும் தற்கொலைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது போன்ற லோன் ஆப்கள், குண்டர்களைக் கொண்டு கடன் பெற்றவர்களை அவமானப்படுத்தி, கடனை வசூலிக்கும் விஷயங்களைச் செய்யத் தொடங்கியிருக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க ஒரேயொரு வழிதான் இருக்கிறது. ஆன்லைன் லோன் ஆப்கள் மூலம் கடன் பெறாமல் இருப்பதுதான் அந்த வழி. இந்த லோன் ஆப்கள் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. மத்திய அரசு சீனச் செயலிகளைத் தடைசெய்ததைப்போல இந்த லோன் ஆப்களையும் தடைசெய்ய வேண்டும் அல்லது இந்த ஆப்களையெல்லாம் முறைப்படுத்தி ஏதாவது ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்து செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால், இன்று சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்ததைப்போல இன்னும் பலருக்கு நடைபெறும் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

ஆன்லைன் ரம்மி

Also Read: பணம் வைத்து சீட்டாடுவது குற்றம்; ஆன்லைன் ரம்மி குற்றமில்லை - ஆன்லைன் சூதாட்டப் பின்னணி !

``பல இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தையும் நேரத்தையும் இழந்துகொண்டிருக்கிறார்கள். அதேபோல இந்த ஆன்லைன் லோன் ஆப்கள் மூலம் பணத்தைப் பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாமல்போனால், பணம் மட்டுமல்லாமல் அதோடு சேர்த்து மானத்தையும் இழக்க நேரிடும் என்பதால் இதில் கடன் பெற வேண்டாம்'' என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரை.


source https://www.vikatan.com/social-affairs/crime/story-about-online-loan-apps-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக