வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வை புறக்கணிப்போம் என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அமைப்பினர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனைக் கண்டித்து திருச்சி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அ.தி.மு.க-வில் மாநகர் மாவட்டச்செயலாளராக முன்னாள் எம்.பி குமார், புறநகர் மாவட்டச்செயலாளராக முன்னாள் எம்.பி ரத்தினவேலு என இரு மாவட்டச்செயலாளர்கள் மட்டுமே இருந்தன. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வில் மாவட்டங்கள் அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்தவகையில் திருச்சி கிழக்கு, மேற்கு மற்றும் துறையூர் தொகுதிகளைக் கொண்ட திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டார்.
அடுத்தாக மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி தொகுதிகளைக் கொண்ட புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி குமார் நியமிக்கப்பட்டார். திருச்சி ஸ்ரீரங்கம், முசிறி மணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளைக் கொண்ட திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி நியமிக்கப்பட்டார். இவர்கள் அறிவிக்கப்பட்டத்திலிருந்தே மாவட்டத்திற்கு பல்வேறு பிரச்னைகள் எழுந்துக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் சுற்றுலாத்துறை அமைச்சரை பிரச்னை அதிகமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. திருச்சி பாலக்கரை பகுதி செயலாளராக இருந்த கலீல் ரகுமான் என்பவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிதாக சுரேஷ் குப்தா என்பவரை நியமனம் செய்திருக்கிறார் அமைச்சர்.
இந்நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சங்கத்தினர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வை புறக்கணிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகம் அருகில் உட்பட பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரை எதிர்க்க என்ன காரணம் என்று திருச்சி அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகள் அணி வகுக்கத் தொடங்கியுள்ளது. முதலில் அமைச்சருக்கு மாவட்டச்செயலாளர் பதவி கிடைத்த போது அவரது ஆதரவாளர்கள் வெல்லமண்டியின் மகனின் புகைப்படத்தைப் போட்டு திருச்சி முழுவதும் வாழ்த்துக்கள் மழைபொழிந்து போஸ்டர்களை ஒட்டினார்கள். இதனைப் பிடிக்காத வெல்லமண்டி எதிரணியினர் அப்படியே தலைமைக்கு தந்தியடித்தனர்.
தலைமையும், வாரிசு அரசியலைத் தூக்கிப்பிடிக்கவேண்டாம் என்று கறாராகச் சொல்லியிருக்கிறது. இந்நிலையில், இப்போது கலில் ரகுமானைத் தூக்கிவிட்டு அவரது ஆதரவாளரைப் போட்டது தான் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இச்செயலைக் கண்டித்துத் தான் ஜமாத் தரப்பில் வெல்ல மண்டியைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள். இவ்விவகாரம் பெரிதாகவும் மாற வாய்ப்பிருக்கிறது” என்றனர்.
இதுகுறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ``திருச்சி பாலகரைப் பகுதியில் பகுதி செயலாளராக இருந்த கலீல் ரகுமான் என்பவர் முன்னாள் எம்.பி குமார், முன்னாள் மாவட்டச்செயலாளர் ரெத்தனவேல், பரஞ்சோதி எனப் பல தலைவர்களிடம் இருந்துகொண்டு கொண்டு பல உள்ளடி வேலைகளைச் செய்தவர். பெரிதாகக் கட்சியில் எந்த வித ஈடுபாடும் கிடையாது. இந்நிலையில் அமைச்சர், சிறப்பாகச் செயல்படக்கூடிய சுரேஷ் குப்தா என்பவரை நியமித்தார். இதில் என்ன தவறு இருக்கிறது. சிறப்பாகச் செயல்படக்கூடியவர்களைத் தானே பக்கத்தில் வைத்துக் கொள்ளமுடியும். இதில் எந்த தவறும் இல்லையே” என்று முடித்துக் கொண்டனர்.
source https://www.vikatan.com/news/politics/reason-behind-trichy-poster-against-minister-vellamandi-natarajan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக