கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவந்த நேரத்தில்தான், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையத் தொடங்கியது. எனவே, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் திட்டமிடப்பட்டபடி முடிவடைவதற்கு 12 நாள்களுக்கு முன்பாகவே, மார்ச் 23-ம் தேதியன்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற விதிப்படி, ஒரு கூட்டத் தொடர் முடிந்த பிறகு, ஆறு மாதங்களுக்குள் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்த காரணத்தால், ஜூன் மாதம் மழைக்கால கூட்டத் தொடரை கூட்ட முடியாமல்போனது.
நாடாளுமன்ற மக்களவை, 545 இருக்கைகள்கொண்டது. மாநிலங்களவையில் 250 இருக்கைகள் உள்ளன. நாடாளுமன்ற மத்திய அரங்கத்தின் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 776. இதைக் கணக்கில்கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற அலுவல்குழு ஆலோசித்துவந்தது. `பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்த பிறகு, செப்டம்பர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதிவரை மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டது.
கூட்டத் தொடரின் முதல் நாளான செப்டம்பர் 14-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. `முதல் நாள் தவிர்த்து மற்ற நாள்களில் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் பிற்பகல் மூன்று மணி முதல் மாலை 7 மணி வரை அலுவல் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருநாள்கூட இடைவெளியோ, விடுமுறையோ இல்லாமல் தொடர்ச்சியாக 18 நாள்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றின் செயலாளர்கள் கடந்த 2-ம் தேதி ஓர் அறிவிப்பாணையை திடீரென வெளியிட்டனர். அதுதான் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. `கோவிட்-19 காரணமாக, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது கேள்வி நேரம் இருக்காது. மேலும், இரு அவைகளிலும் `ஸீரோ ஹவர்’ குறைக்கப்படும்’ என்பதுதான் அந்த அறிவிப்பாணை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்களில் கேள்வி நேரம் உயிர்நாடி போன்றது. அந்த நேரத்தில்தான் பொதுப் பிரச்னைகள், மாநிலங்கள் தொடர்பான பிரச்னைகள் எனப் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்புவார்கள். அந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் எழுந்து நின்று பதில் சொல்வார்கள். கேள்வி நேரம் இல்லையென்றால், அமைச்சர்கள் தாங்கள் விரும்பியதைப் பேசிவிட்டுச் செல்வார்கள். தான் விரும்பும் மசோதாக்களை அரசு தாக்கல் செய்யும். உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற நாற்காலிகளில் வெறுமனே அமர்ந்து வேடிக்கை பார்த்துவிட்டு, எழுந்து வந்துவிட வேண்டியதுதான்.
Also Read: முன்பெல்லாம் நாடாளுமன்றம் எப்படியிருக்கும் தெரியுமா? - ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் #MyVikatan
ஆகையால்தான், `மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இருக்காது’ என்ற அறிவிப்பு எதிர்க்கட்சியினரைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. பெருந்தொற்றுச் சூழலைக் காரணமாகக்கொண்டு, ஜனநாயகப் படுகொலை நடப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யான டெரிக் ஓ பிரெயின் ஆவேசத்துடன் கூறினார். ``1950-ம் ஆண்டு தொடங்கி, அரசைக் கேள்வி கேட்பதற்காக இருந்துவரும் உரிமையை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் இழக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த பணி நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. பிறகு ஏன் கேள்வி நேரத்தை ரத்துசெய்ய வேண்டும்... ஜனநாயகத்தைக் கொலை செய்வதற்கு கொரோனா காரணமா?’’ என்று பிரெய்ன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தை வெறும் நோட்டீஸ் போர்டாக மாற்றுவதாகவும், பெரும்பான்மையைவைத்து நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்ப்பாக மாற்றுவதாகவும் அரசை விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர். ``கேள்வி நேரத்தைக் கைவிடுவது என்பது தன்னிச்சையான ஒரு முடிவு. இது பெரும் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. ஜனநாயக விரோதமானது” என்று சொல்லியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக்குழு துணைத் தலைவரான ஆனந்த் சர்மா. எதிர்க்கட்சிகளின எதிர்ப்பைக் கண்டு அரசு கொஞ்சம் கீழே இறங்கிவந்தது. `கேள்வி நேரம் கிடையாது’ என்ற நிலையிலிருந்து மாறி, `Unstarred questions மட்டும் அனுமதிக்கப்படும்’ என்று தற்போது அரசு கூறியுள்ளது. அதாவது, உறுப்பினர்கள் எழுந்து நின்று கேள்வி கேட்பதற்கு பதிலாக, தங்கள் கேள்விகளை எழுத்து மூலமாக அளிக்கலாம். அந்தக் கேள்விக்கு, எழுத்து மூலமாக பதில் தரப்படும்.
இந்த முடிவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. ``நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கேள்வி கேட்கிற, அதற்கு அமைச்சர்கள் எழுந்து நின்று பதில் சொல்கிற கேள்வி நேரத்தை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். ஆனால், `எழுத்து மூலமாக கேள்விகள் அளிக்கலாம்’ என்று சொல்கிறீர்கள். ரொட்டித் தூள்களை வீசுவதை நிறுத்துங்கள். நாடாளுமன்றம் ஒன்றும் குஜராத்தின் ஜிம்கானா கிளப் கிடையாது’’ என்று ட்வீட் செய்தார் டெரிக் ஓ பிரெயின்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூரிடம் பேசினோம். ``இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் கேள்வி நேரம் இல்லாத நாளே கிடையாது. கேள்வி நேரத்தை எடுப்பது என்று அரசு முடிவு செய்ததைக் கேள்விப்பட்டபோது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்படுவது இதுதான் முதன்முறை.
கொரோனாவைக் காரணமாகக் காண்பித்து, எதிர்க் கட்சி உறுப்பினர்களைக் கேள்வி கேட்கவிடாமல் செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். கேள்வி நேரத்தை எடுத்துவிட்டால், அமைச்சர்கள் என்ன பேசுகிறார்களோ அதை அமைதியாக உட்கார்ந்து கேட்டுவிட்டு, எழுந்துவருவதை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியும். பொது விஷயங்களையும், மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் தொடர்புடைய பிரச்னைகளை எழுப்புவதிலிருந்தும் எதிர்க் கட்சி எம்.பி-க்களைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படிச் செயல்படுகிறார்கள். இதை ஒருபோதும் ஏற்க முடியாது’’ என்றார்.
தி.மு.க-வைச் சேர்ந்த திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சி.என்.அண்ணாதுரையிடம் பேசியபோது, ``நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய இரண்டிலுமே கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது. அப்படிப்பட்ட கேள்வி நேரத்தைத் தூக்க வேண்டுமென்று முடிவெடுக்கிறார்கள். அப்படியென்றால், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசவே கூடாது என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்” என்றார்.
ஆளும் தரப்பின் கருத்தைக் கேட்பதற்காக, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவருமான வி.பி.துரைசாமியிடம் பேசினோம். ``நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது ஜனநாயகத்தின் இதயம் போன்றது. சரியான கேள்விகள் எழுப்புவதன் மூலமாக ஒரு தொகுதியின் பல ஆண்டுக்காலப் பிரச்னைகளெல்லாம் தீர்க்கப்பட்டுள்ளன. எனவே, கேள்வி நேரம் மிகவும் முக்கியம். ஆனால், பெருந்தொற்று காலம் என்பதால் தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டும், உறுப்பினர்கள் அமர்வதற்கான இடவசதி பிரச்னை போன்றவற்றை கருத்தில்கொண்டும், நடைபெறக்கூடிய கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தை எடுப்பது என்று மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் தலைவரும் முடிவெடுத்தனர். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவு” என்றார்.
Also Read: ஜி.டி.பி சரிவு : `காந்தி கணக்கு’க்கும் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?
இவ்வளவு சர்ச்சைக்குப் பிறகு, ``எதிர்க் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகுதான் கேள்வி நேரத்தைக் கைவிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது” என்கிறார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.வி.ஜோஷி. ``தலைவர்கள் ஒப்புக்கொண்டதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், ஒப்புக்கொள்ளவில்லை என்று வெளியே வந்து கூறுவது சரியல்ல” என்று கூறுகிறார் ஜோஷி.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சொல்கிறபடி அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒப்புதல் அளித்திருக்கலாம். ஆனாலும், இதில் ஓர் அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. கேள்வி நேரத்தை ரத்து செய்வதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் குலாம்நபி ஆசாத் ஒப்புக்கொண்டதாக அமைச்சர் சொல்கிறார். ஆனால், காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும் என்று அரசியலை நகர்த்திக்கொண்டிருப்பவர் குலாம்நபி ஆசாத்.
காங்கிரஸ் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரியிடம், ஏன் இது குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். இப்போது, மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்களுக்கு ஆதிர் ரஞ்சன் சௌத்ரி எழுதியுள்ள கடிதத்தில், `கேள்வி நேரம் ரத்துசெய்யப்படுவது தொடர்பான முடிவை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்ளவில்லை’ என்று கூறியிருக்கிறார்.
மக்கள் பிரதிநிதிகளான எம்.பி-க்களின் குரல், குறிப்பாக எதிர்க் கட்சி எம்.பி-க்களின் குரல் ஒலிக்கவில்லையென்றல், எதற்கு இந்தக் கூட்டம்?
source https://www.vikatan.com/government-and-politics/politics/no-question-hour-curtailed-zero-hour-in-parliaments-monsoon-session-irks-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக