Ad

புதன், 2 செப்டம்பர், 2020

``தனித்துப் போட்டியிட்டால் 60 இடங்களில் வெற்றி” - பா.ஜ.கவின் வியூகம் என்ன? #TNElection2021

"பா.ஜ.க தனியாகத் தேர்தலில் போட்டியிட்டால் 60 இடங்களில் வெற்றிபெறும்" என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியிருப்பதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.

''கடந்த தேர்தலில் அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க போன்ற பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே வெறும் 3.7 சதவிகிதம் வாக்குகளைத்தான் அந்தக் கட்சி வாங்கியது. 2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 2.84 சதவிகித வாக்குகளை மட்டுமே அந்தக் கட்சியால் பெற முடிந்தது. சராசரியாக, 3 சதவிகித வாக்குகளை வைத்துக்கொண்டு 60 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று சொல்வதெல்லாம் மிகப்பெரிய காமெடி'' என எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, அந்தக் கட்சியோடு கூட்டணி வகிக்கும் கட்சிகளே கேலி பேசுகின்றன. ஆனால், ''கடந்த ஆறு வருடங்களில் எங்கள் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. தேர்தலுக்கென்றே பல யுக்திகளைக் கைவசம் வைத்திருக்கின்றோம் நிச்சயமாக எங்களால் முடியும்'' என பா.ஜ.கவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் உண்மையிலேயே பா.ஜ.கவின் வாக்கு வங்கி என்ன, 60 தொகுதிகளில் வெல்வோம் என சொல்லக் காரணம் என்ன ஆகியவை குறித்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

வாஜ்பாய்

பா.ஜ.க தோற்றம்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் ஜனதாக் கட்சியிலும் இரட்டை உறுப்பினர்களாக இருக்க முடியாது என்கிற காரணத்தால் அந்தக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள் பாரதிய ஜனசங்கத்தினர். ஏப்ரல் மாதம் 6-ம் தேதி 1980-ம் ஆண்டு அவர்களால் தொடங்கப்பட்டதுதான் பாரதிய ஜனதா கட்சி. ஆனால், பா.ஜ.க உருவான பிறகு ஜனசங்கத்தினர் மட்டுமல்லாது மற்றவர்களும் அந்தக் கட்சியில் இணைய ஆரம்பித்தனர். கட்சியின் கொள்கைகளை வகுப்பதற்கு அத்வானி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. கட்சியின் கொடியில் இருந்த தாமரை, தேர்தல் சின்னமானது.

தேர்தல் பங்கேற்பு!

பா.ஜ.க தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பிகார், பஞ்சாப், ஒரிஸா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில போட்டியிட்டு கணிசமான வெற்றிகளைப் பெற்றது. அதேபோல, 1982-ல் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சல் பிரதேசத்தில் 67 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க 29 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஹரியானாவில் 24 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், 29 சதவீத வாக்குகளை பெற்றது அந்தக் கட்சி. 1983-ல் ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட நான்கு மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் காஷ்மீர் தவிர மற்ற இடங்களில் கணிசமான வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, 1984-ம் ஆண்டு நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் 224 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

தமிழகத்தில் தேர்தல் பங்கேற்பு!

தமிழகத்தைப் பொறுத்தவரை 1984 பாராளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் போட்டியிட்டு 0.01 சதவிகித வாக்குகளை மட்டுமே பா.ஜ.கவால் பெற முடிந்தது. தொடர்ந்து, 1989-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மூன்று இடங்களில் போட்டியிட்டு 0.29 சதவிகித வாக்குகளையும், 1991-ல் 15 இடங்களில் போட்டியிட்டு 1.65 சதவிகித வாக்குகளையும், 96-ல் 37 இடங்களில் போட்டியிட்டு 2.93 சதவிகித வாக்குகளையும் பெற்றது.

முதன்முறையாக, 98-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு மூன்று இடங்களில் வெற்றியும் - 6.86 சதவிகித வாக்குகளையும், 1999-ல் தி.மு.க கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றியும் 7.14 வாக்கு சதவிகித்தையும் பெற்றது அந்தக் கட்சி. இதுவே அந்தக் கட்சியின் தமிழக தேர்தல் வரலாற்றில் பெற்ற அதிகமான வாக்கு சதவிகிதமாகும்.

2004-ல் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து 7 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. அதன் வாக்கு சதவிகிதம் 5.0-ஆகக் குறைந்தது. 2009-ல் - நடிகர் சரத்குமார், நடிகர் கார்த்திக் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து 2.30 சதவிகித வாக்குகளையும் 2014-ல், பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 7 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு இடத்தில் வெற்றியையும் 5.56 சதவிகித வாக்குகளையும் பெற்றது பா.ஜ.க. அதேபோல, 2019-ல் அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 5 இடங்களில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வியையும் 3.71 சதவிகித வாக்குகளையும் பெற்றது அந்தக் கட்சி.

சட்டமன்றத் தேர்தல் பங்கேற்பு!

சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, 1984 தேர்தலில் 15 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 0.25 சதவிகித வாக்குகளையும் 89-ல் 0.35 சதவிகித வாக்குகளையுமே பெற்றது அந்தக் கட்சி. முதல்முறையாக 91 சட்டப் பேரவைத் தேர்தலில், 1.70 சதவிகித வாக்குகளையும் ஒரு எம்.எல்.ஏ இடத்தையும் வென்றது. 96 தேர்தலில் 1.81 சதவிகித வாக்கையும் ஒரு இடத்தில் வெற்றியையும் பெற்றது.

2001-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 21 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றியையும் 3.19 சதவிகித வாக்குகளையும் பெற்றது. 2006 தேர்தலில் 225 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 221 இடங்களில் டெபாசிட் இழந்தது. வாக்கு வங்கியும் 2.02 சதவிகிதமாகக் குறைந்தது. 2011 தேர்தலில், 204 தொகுதிகளில் தனியாகப் போட்டியிட்ட பி.ஜே.பி 198 இடங்களில் டெபாசிட்டைப் பறிகொடுத்தது. 2.22 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2016 தேர்தலில், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2.84 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

நாராயணன் திருப்பதி

பா.ஜ.கவின் வாக்கு வங்கியைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தல்களில் அதன் வாக்குவங்கி 4 முதல் 7 சதவிகிதம் வரை இருந்திருக்கிறது. கடைசியாக தனித்துப் போட்டியிட்ட, 1996 தேர்தலில் 3 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது அந்தக் கட்சி. ஆனால், சட்டமன்றத் தேர்தல்களில், இதுவரை தனித்து நின்றாலும் கூட்டணி அமைத்தாலும் அதிகபட்சமாக 3 சதவிகிதத்தை ஒட்டிதான் வாக்குகளை பெற்றிருக்கிறது பா.ஜ.க. இந்தநிலையில் அந்தக் கட்சியின் தலைவர் எல்.முருகன், தனித்துப் போட்டியிட்டால் அறுபது தொகுதிகளில் வெல்வோம் என்று சொல்லியிருக்கிறார். இதுகுறித்து பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,

''எங்கள் கட்சியின் பலம் குறித்து பத்திரிகையாளர் கேட்கும்போது எங்கள் தலைவர் அப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். கடந்த ஆறு வருடங்களில் தமிழகத்தில் பா.ஜ.கவின் பலம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரின் மறைவின் காரணமாக ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது. தற்போது, ஆளுமைக்கு மாற்றாக நல்ல கட்சியை தேர்வு செய்யும் மனநிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். அந்த இடத்தில் மக்கள் பா.ஜ.கவை நோக்கி வருவார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. அப்படிப் பார்க்கையில் எங்கள் கட்சி நிச்சயமாக அறுபது தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறோம்'' என்றார் அவர்.

Also Read: பா.ஜ.க, பா.ம.கவுக்கு கல்தா, வாக்குச்சாவடிக்கு `500'... அ.தி.மு.கவின் பக்கா ப்ளான்! #2021TNElection

பா.ஜ.கவின் இந்த அறுபது தொகுதி கணக்கு குறித்து, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்,

''பா.ஜ.க தமிழகத்தில் எட்டாவது பெரிய கட்சிதான். ஆனால் கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து அறுபது தொகுதிகளில் அவர்கள் கான்சென்ட்ரேட் செய்ய நினைக்கிறார்கள். அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, கொங்கு வெள்ளாளக் கவுண்டர் வாக்குகளையும், மாநிலத் தலைவர் எல்.முருகனின் சமூகமான அருந்ததியர் வாக்குகளையும் தவிர, கொங்குப் பகுதியில் வாழ்கின்ற, மொழி, இனச் சிறுபான்மையினர் மத்தியில் மோடிக்கு இருக்கும் ஆதரவையும் கணக்கில் வைத்துதான் அப்படிச் சொல்கிறார்கள்.

ரவீந்திரன் துரைசாமி

அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டணியில் சேர்ந்து நிற்கும்போது, இரண்டு கட்சிகளின் எதிர்ப்பு வாக்கும் அப்படியே தி.மு,.கவுக்குப் போய் அவர்கள் வெற்றிபெற்று விடுவார்கள். அப்படித்தான் கொங்கு மண்டலத்தில் இருபது சதவிகித வாக்குகளை மட்டுமே வைத்திருந்த தி.மு.கவுக்கு இப்போது வாக்கு வங்கி ஐம்பது சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதேவேளை தனியாக நின்றால் அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை பா.ஜ.கவும், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை அ.தி.மு.கவும் வாங்கி மும்முனைப் போட்டிகளை உருவாக்கமுடியும். அதன்மூலம் தி.மு.கவின் வலிமையைக் குறைக்க முடியும் எனத் திட்டமிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, காங்கிரஸுக்கு நாம் சளைத்தளவர்கள் அல்ல என்பதையும் நிரூபிக்க நினைக்கிறது தமிழக பா.ஜ.க.

அதனால், அ.தி.மு.க ஐம்பது தொகுதிகளுக்கு மேல் கொடுத்தால் மட்டுமே அந்தக் கூட்டணியில் நீடிப்பார்கள். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. அதனால் நிச்சயமாக இரண்டு கட்சிகளும் தனித்துத்தான் போட்டியிம். 60 இடங்களில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று சொன்னதால்தான் கணிசமான வாக்குகளையாவது வாங்கமுடியும் என்பதால் அப்படிப் பிரசாரம் செய்கிறார்கள். காங்கிரஸைவிட பெரிய கட்சி என நிரூபிப்பதுதான் இப்போது அந்தக் கட்சியின் நோக்கம்'' என்கிறார் அவர்.

ஆயிரமாயிரம் தேர்தல் யுக்திகளை கையாண்டாலும் ஒவ்வொரு தேர்தலும் கட்சிகளுக்கு புதியதுதான். புதிய நிர்வாகிகள் நியமனம், பிரபலங்களை கட்சியில் சேர்ப்பது என்று மக்களின் மனதில் இடம் பிடிப்பதற்கான வேலைகளை பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர். இதன் ரிசல்ட் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-bjp-president-lmurugans-statement-about-60-seats-win-in-tn-without-alliance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக