Ad

புதன், 23 செப்டம்பர், 2020

சென்னை: தனிமையில் ஜோடிகள்... 50 பெண்கள் பாதிப்பு... சிக்கிய லாரி உரிமையாளர்!

சென்னை புழலை அடுத்த வெஜிடேரியன் நகரில், கடந்த 19-ம் தேதி இரவு நடுத்தர வயது மதிக்கத்தக்க ஆணும் பெண்ணும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத அந்த இடத்துக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், `இந்த நேரத்தில் நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?’ என்று மிரட்டும் தொனியில் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஜோடி, `நாங்கள் இருவரும் கணவன், மனைவி. சும்மா பேசிக்கொண்டிருக்கிறோம்' என்று பதிலளித்ததோடு, `எங்களிடம் விசாரிக்க நீங்கள் யார்?’ என்று கேட்டிருக்கின்றனர்.

டேங்கர் லாரி உரிமையாளர் பிச்சைமணி

உடனடியாக, `கணவன், மனைவி என்றால் வீட்டில் பேசலாமே... எதற்கு இங்கே, அதுவும் இரவு நேரத்தில் பேச வர வேண்டும்' என்று கூறிய அந்த இளைஞர், `நான் போலீஸ் எஸ்.ஐ. உங்கள் இருவர் மீதும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உங்களை விசாரிக்க வேண்டும். ஸ்டேஷனுக்கு வாருங்கள்' என்று கூறியதாகத் தெரிகிறது. அதைக் கேட்டதும் ஜோடிக்கு கை, கால் உதறத் தொடங்கியிருக்கிறது. அதை கவனித்த அந்த இளைஞர்,`நீங்கள் உண்மையிலேயே கணவன், மனைவி இல்லை என்று எனக்குத் தெரியும்’ என்று கூறியதும், அந்தப் பெண்ணுக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கியது.

இதையடுத்து அந்தப் பெண்ணிடம், `உன்னுடைய கணவர் போன் நம்பரைக் கொடு. அவரிடம் பேசிக்கொள்கிறேன்’ என்று அந்த இளைஞர் கேட்டதும், `சார். எங்களை மன்னித்துவிடுங்கள். நானும் இவரும் ஃப்ரெண்ட்ஸ்’ என்று அந்தப் பெண் பதிலளித்திருக்கிறார். அதன் பிறகு, போலீஸ் எனக் கூறிய இளைஞர், `உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதித்திருக்கிறார். இதையடுத்து அந்த ஆண், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணிடம், `உன்னைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால், நான் சொல்வதற்கு நீ சம்மதிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார் அந்த இளைஞர். பொறியில் சிக்கிய எலியைப்போல அந்தப் பெண்ணும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.

காதல் ஜோடி

அதன் பிறகு போலீஸ் எனக் கூறிய இளைஞர் சொன்னதைக் கேட்டு நடந்துகொண்ட அந்தப் பெண், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணின் செல்போன், கையிலிருந்த 15,000 ரூபாய் ஆகியவற்றை அந்த இளைஞர் பறித்துக்கொண்டார். அந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் கணவர், மனைவிக்கு போன் செய்திருக்கிறார். ஆனால், போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக பதில் வந்திருக்கிறது. வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண், மாதரவம் பால்பண்ணை அருகே நடந்து வந்தபோது கத்தியைக் காட்டி மிரட்டிய மர்ம கும்பல், தன்னிடமிருந்த செல்போன், பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுவிட்டதாக கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார்.

Also Read: ராமநாதபுரம்: ஆபாசப் படம்; வெடிகுண்டு மிரட்டல்! - எஸ்.பி எண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

இதையடுத்து கணவனும் மனைவியும் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீஸார் விசாரித்தபோது அந்தப் பெண் கூறிய தகவல் பொய் எனத் தெரியவந்தது. அதனால், அந்தப் பெண்ணிடம் தனியாக போலீஸார் விசாரித்தபோது, உண்மையை அவர் கூறினார். இது குறித்து மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்தது யாரென்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

காவல்துறை

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``அந்தப் பெண் அளித்த தகவலின்படி வெஜிடேரியன் நகரிலுள்ள மைதானத்துக்குச் செல்லும் வழியிலுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தோம். அதேபோல அந்தப் பெண்ணின் செல்போன் சிக்னல் அடிப்படையில் விசாரித்தோம். மைதானத்திலுள்ள புதர்ப் பகுதியில் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட தகவல் கிடைத்தது. அதனால், அந்த இடத்தைத் தொடர்ந்து கண்காணித்தோம்.

அந்த நேரத்தில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிச்சைமணி (34) என்பவர்தான் ஆண் நண்பருடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்த தகவல் உறுதியானது. இதையடுத்து பிச்சைமணியிடம் விசாரித்தபோது அவரும் அதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து அந்தப் பெண்ணின் செல்போன் உட்பட இன்னும் சில செல்போன்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

கைது

பிச்சைமணி, டேங்கர் லாரி உரிமையாளர். இவர், இரவு 8 மணிக்கு மேல் தனிமையிலிருக்கும் பெண்களை மிரட்டி, அவர்களிடம் தவறாக நடந்துவந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக பிச்சைமணி இப்படிச் செய்துவந்திருக்கிறார். அவரால் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் புகாரளிக்கவில்லை. அதனாலேயே `போலீஸ் எஸ்.ஐ’ எனக் கூறிப் பல பெண்களை மிரட்டிவந்திருக்கிறார். பிச்சைமணியைப் பார்க்க போலீஸ்போல இருந்ததால், யாருக்கும் அவர் மேல் சந்தேகம் ஏற்படவில்லை. தொடர்ந்து பிச்சைமணியிடம் விசாரணை நடத்தி, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-tanker-lorry-owner

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக