மற்றும்பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
``தேடுபவனுக்கு மட்டுமே தேடியதோடு தேடாததும் சேர்த்துக் கிடைக்கிறது.''
ஐந்து மாதங்களுக்குப் பிறகு நூலகம் திறந்தது மட்டற்ற மகிழ்ச்சி. காலையில், நூலக வாயிலில் நுழையும்போதே புத்தகத்தை வெளியில் வைத்துவிட்டு காய்ச்சல் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்தனர். சானிடைசர் கொடுத்தார்கள். விமான நிலையத்தில் நுழைவதுபோல் இருந்தது நூலகத்தில் நுழைந்தது.
நூலகத்துக்கு கடந்த 20 ஆண்டுகளாகச் சென்றுகொண்டிருக்கும் எனக்கு, தற்போதைய அனுபவம் புதுமையாய் இருந்தது.
11-ம் வகுப்புப் படித்தபோது, பேராசிரியர் பொன்னுசாமி எழுதியிருந்த `நூலகக் கல்வி' குறித்த ஒரு பாடத்தை எங்கள் தமிழாசிரியர் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசியது நூலகம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அப்பாடத்தில், கிராமத்து நூலகம்தான் தனக்கு சங்ககாலத்தை அறிமுகம் செய்ததாகக் கவிஞர் வைரமுத்து சிலாகித்திருப்பார். நூலகம் குறித்துப் பேசும்போது ஆசிரியர் மறக்காமல் குறிப்பிடும் ஆளுமைகள் அண்ணா, நேரு, அம்பேத்கர், கார்ல்மார்க்ஸ். இவையெல்லாம்தான் எனக்கு நூலகம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அன்று மாலையே கிளை நூலகத்தில் விண்ணப்பப் படிவம் வாங்கி பூர்த்தி செய்து நூலகத்தில் சேர்ந்தேன். அறை முழுக்கப் புத்தகங்கள். பைண்டிங் செய்தவை, புதிய புத்தகம், தலையணை அளவில் புத்ககம், ஆங்கிலப் புத்தகம் என இருந்ததைப் பார்த்தபோது, புதிதாகச் சென்னை வருபவர் ஒவ்வொன்றையும் வியந்து பார்ப்பதுபோல் இருந்தது.
முதன்முதலில் ஒரு தெனாலிராமன் புத்தகத்தை எடுத்து என்ட்ரி போட்டு எனக்குக் கொடுத்தபோது, அந்தப் பரவச அனுபவத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. `அன்பளிப்பு' கதையின் இறுதியில் சாரங்கனின் மனநிலையைப்போல் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் புத்தகம் பெற்றது நினைவில் இருக்கிறது.
200 வயது நூலகம்!
இந்தியாவின் முன்னோடி நூலகமான தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் 1820-ல் நிறுவப்பட்டது. இரு நூற்றாண்டுகளை நெருங்கியுள்ளது.
1869-ம் ஆண்டு நிறுவப்பட்ட கன்னிமாரா நூலகம் இன்றும் பிரசித்திபெற்ற நூலகமாகத் திகழ்கிறது.
மன்னார்குடி எனும் நகரில் மேலவாசல் நகரில் 1931-ல் கனகசபை என்பவர் மாட்டுவண்டி மூலம் நடமாடும் நூலகத்தை கிராமம்தோறும் கொண்டு சென்றார்.
முதன்முதலாகத் தமிழகத்தில்தான் 1948-ம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டம் இயற்றினர். இந்திய நூலகத்தின் தந்தையென போற்றப்படும் சீர்காழி சீ.இரா.அரங்கநாதன், நூலகங்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர். நூலகங்களில் நூல்களைப் பாதுகாப்பாக வைக்க உதவும் கோலன் தொகுப்பு முறையை உருவாக்கியவர்.
ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி,1924-ல் பல்கலைக்கழக நூலகராக இணைந்து, அதற்கென லண்டன் சென்று நூலக அறிவியல் பயின்று திரும்பி, துறை வாரியாகப் புத்தகங்களைப் பிரித்து நூலகச் செயல்பாட்டை எளிமைப்படுத்தினார். ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு வாசகர் வட்டம் உண்டு, ஒவ்வொரு வாசகருக்கும் தேவையான புத்தகங்கள் இருக்க வேண்டும் என விதிகளை உருவாக்கினார் எஸ்.ஆர்.
1948-ல் நிறைவேற்றப்பட்ட பொது நூலகச் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புக்குச் செலுத்தும் சொத்து வரியில் குறிப்பிட்ட சதவிகிதம் நூலக வளர்ச்சிக்கு எனத் திட்டமிடப்பட்டது. நூலகத்தில் சேர காப்புத்தொகை, ஆண்டு சந்தா, புரவலர் திட்டம் என வெற்றிகரமாகச் செயல்படுகின்றன நூலகங்கள். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், நூலகங்களுக்கெல்லாம் முன்னோடியாய் விளங்குகிறது.
தேர்ந்தெடுக்கக் கற்றுத்தரும்!
எல்லா புத்தகங்களையும் நம்மால் காசு கொடுத்து வாங்க முடியாது. பழைய புத்தகங்கள் மற்றும் ஒரு பதிப்போடு நின்றுவிட்ட புத்தகங்களை நூலகம் தவிர வேறு எங்கும் படிக்க முடியாது. ஒரு புத்தகத்தை இரவல் எடுத்துப் படிக்கும்போது முன்பு படித்தவர் ஒரு சில இடங்களில் ரசித்துக் கோடிட்டிருப்பார். அதைக் கடக்கும்போது நாமும் நின்று ரசித்துச் செல்லும் அனுபவம் கிடைக்கும்.
முதல் முறை நூலகம் சென்றபோது, எந்தப் புத்தகம் அழகாக உள்ளதோ, அட்டைப்படம் அழகாக உள்ளதோ அதை எடுத்து வந்தேன். அதிலிருந்து கற்ற பாலபாடம்தான், அட்டையைப் பார்த்தோ, புத்தக அழகைப் பார்த்தோ வாங்கக் கூடாது என்பது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கும்போது, முன் அட்டையில் அதை எத்தனை பேர் எடுத்துள்ளனர் எனப் பார்த்து உடனே எடுத்துக்கொள்ளும் பழக்கம் ஆரம்பமானது. யாராவது புத்தகம் மாற்ற வரும்போது, அவர் எடுத்து வரும் நல்ல புத்தகத்தை நாமும் படிக்க வழிகாட்டுவார். ஒரு புத்தகத்தை வாங்குவதைவிட சவாலானது, நல்ல புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பதுதான். எனக்கு அதை நூலகம்தான் கற்றுக்கொடுத்தது.
சமீபத்தில் க்ரியா ராமகிருஷ்ணனின் பேட்டி ஒன்றில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அவருடைய புதிய அகராதி வெளியிட்டபோது அவரிடம் சொன்னார்களாம், `எதற்கு அகராதி..? நமக்கு எது தேவையோ அது நம் செல்பேசியில் ஒரு நிமிடத்தில் சொல்லிவிடாதா..?' என்று. அதற்கு அவர் சொன்னாராம்...
``உண்மைதான். ஆனால், கணினி நாம் சொன்ன சொல்லை மட்டும்தான் தரும். ஆனால், ஒரு அகராதியைப் புரட்டும்போது அந்தச் சொல்லை தேடும் முன் 10 சொற்களையாவது ஒருவன் கடந்து போவான் அல்லவா?"
அதுபோலத்தான் நூலகமும். ஒரு கதை புத்தகத்தைத் தேடும்போது ஒரு வரலாற்றுப் புத்தகம் கண்ணில்படும். ஓர் அறிவியல் புத்தகத்தைத் தேடும்போது ஒருவரின் வாழ்க்கை வரலாறு கண்ணில்படும். பரந்துபட்ட வாசிப்பு உலகுக்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்வது நூலகம்தான். யாருடைய பரிந்துரையும் இன்றி நாமே நூல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
நூலகம்... அறிவுப்பெட்டகம்!
நூலகத்தில்தான் முதன்முறையாக மு.வ, நா.பார்த்தசாரதி, ஓஷோ, கல்கி, தேவன், தென்கச்சி சுவாமிநாதன் அறிமுகமாயினர். இவர்கள் இல்லாத நூலகங்களே இல்லை எனலாம்.
அடுத்து, வேலை தேடும் இளைஞர்களுக்கு நூலகம் ஒரு போதிமரம். நல்ல அறிவார்ந்த நண்பர்கள் கிடைப்பார்கள். கற்ற நூல்களைப் பகிர, சொந்த புத்தகங்களைக் கொண்டு வந்து வாசிக்க சிறப்பான வெளி.
தனிப் பயிற்சிக்குச் செல்ல வசதியில்லாமல் தாங்களாகவே கூட்டுத் தயாரிப்பில் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர் கூட்டத்தை ஒவ்வொரு நூலகத்திலும் பார்க்கலாம்.
குறிப்புதவி புத்தகத் தளத்தில் நாள் முழுக்க தவமிருந்து கற்கும் வாசகர்களைக் காணலாம்.
இதழ்கள் வாசிக்கும் தளத்தில், தமிழகத்தில் இத்தனை வார, மாத இதழ்கள் வருகின்றனவா என ஆச்சர்யமளிக்கும் வகையில் சூழலியல், விவசாயம், உடற்பயிற்சி, சினிமா எனப் பல்துறை இதழ்கள் அசர வைக்கும். பத்துக்கும் மேற்பட்ட நாளிதழ்கள் இருக்கும். அலைபேசி பார்ப்பதையே மறக்க வைக்கும்.
இன்னும் எவ்வாறு மேம்படுத்தலாம்..?
* நூலகத்தில் புதிதாய் சேருவோரிடம் பெறும் காப்புக் கட்டணத்தை அதிகப்படுத்தலாம்.
* தற்போது 300 ரூபாய்க்கு உட்பட்ட விலையிலுள்ள மூன்று புத்தகங்கள் மட்டும் தரப்படுகின்றன. இதை மாற்றி 500 ரூபாயை முன்தொகையாகப் பெற்று 500 அல்லது 1,000 மதிப்புடைய புத்தகங்களை இரவல் அளிக்கலாம்.
* ஒரே தலைப்பில் ஏற்கெனவே இருக்கும் புத்தகங்களை வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். விளைவு ஒரே புத்தகம் ஐந்து பிரதிகள் அலமாரியை நிறைத்துக்கொண்டு இருப்பது.
* நவீன படைப்பாளர்களின் படைப்புகள் மற்றும் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் மிக மிக சொற்பமாய் உள்ளது.
* ஒவ்வோர் ஆண்டும் வெளியான கவனிக்கத்தக்க சிறந்த 50 புத்தகங்களை வழங்கினாலே வாசிப்பில் ஆர்வமுள்ளவர் நூலகத்தை நாடி தேடி ஓடி வருவர்.
* ஒவ்வொரு மாவட்ட நூலகமோ, கிளை நூலகமோ புரவலர் மற்றும் ஆர்வலரைக் கூட்டி என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம் எனும் தேவைப்பட்டியலைத் தயாரித்து அனுப்பலாம்.
* காலந்தாழ்த்திக் கொண்டு வரும் புத்தகங்களுக்கு அபராத கட்டணம் ஒரு ரூபாய் என்பதை மிக மிக உயர்த்தி வசூலிக்க வேண்டும்.
* அயல்நாடுகளில் உள்ளது போல் புத்தகம் திருப்பித் தர வேண்டியதை குறுஞ்செய்தி மூலம் அனுப்பலாம்.
* நூலக தினம், எழுத்தறிவு தினம் போன்ற நிகழ்வுகளை நடத்தி புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் திட்டம் அறிவிக்கலாம்.
* பணியாளர்கள் குறைவாய் உள்ளதால் கிளை நூலகங்களுக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்களை உடனுக்குடன் அனுப்ப முடிவதில்லை.
* மாவட்ட நூலகங்களில் உள்ளது போல் கிளை நூலகங்களிலும் போட்டித்தேர்வு வகுப்புகளை நடத்தினால் இளைஞர்கள் கூட்டம் நூலகங்களை நாடி வருவார்கள்.
#வாசிப்புக்கான பிள்ளையார் சுழி
ஒரு பெற்றோர் தன் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உன்னத பரிசு நூலக அட்டைகள்தாம். தாமே தேர்ந்தெடுத்து தாமே முயன்று தவறி கற்பது புத்தகங்களின் உதவியில் மட்டும்தான்.
செல்போன், டிவி கார்ட்டூன் சேனல்களின் உலகத்தில் வாழ்வோரை மீட்டெடுத்து நூலகத்தில் இருக்கும் சாகச கதைகளும், வரலாற்று நாவல்களும் பயிலும்போது தம் கற்பனையில் புதிய உலகம் சிருஷ்டிப்பதையும், வேகமான வாசிப்பும், முழுக் கதையும் சம்பவங்களை மனதில் நிறுத்தப் பயிற்சி கிடைக்கும்.
Also Read: படத்தின் முதல் காட்சியே நெஞ்சை தொட்டுவிடும்..! - 32 years of `உன்னால் முடியும் தம்பி’ #MyVikatan
இன்று மின் நூலின் வரவினால் அதிக வாசிப்பாளர்களை உருவாக்க முடியவில்லை. `நிஜமான வாசகன் புத்தகம் வாங்கித்தான் படிக்கிறான். டவுன்லோடு வாசகர்கள் ஹார்ட் டிஸ்கை மட்டுமே நிரப்பிக்கொள்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. டவுன்லோடு செய்த புத்தகங்கள் படிக்க ஒரு யுகமே தேவைப்படுகிறது. பதிவிறக்குவதில் இருக்கும் ஆர்வம் படிப்பதில் வருவதில்லை. ஒரு புத்தகத்தின் இடத்தை எந்த இ புக்கும் இன்னும் நிரப்பவில்லை என்பதே நிதர்சன உண்மை. இந்த விசயத்தில் இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என ஆர்வமுடையனே தேடுதலில் ஈடுபடுகிறான். அந்தத் தேடுதலே அவனுக்கான ஆசானாய் வழிகாட்டுகிறது.
``நாம் எப்போதும் தேவைப்படும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ளவும், புறக்கணிக்க முடியாத அளவுக்கு திறன்களையும் மேம்படுத்திக் கொண்டால் உலகம் என்றும் நம்மை புறக்கணிக்காது'' எனும் இறையன்புவின் வரியே நிதர்சன உண்மையை கூறுகிறது.
நாம் எவ்வளவு சின்ன மனிதர்கள் என்பதை ஒவ்வொருவரும் நூலகத்தில் நுழையும் போது தெரியும். நூலகங்களை பயன்படுத்துவோம். வாசிப்பின் வழியே வாழ்க்கையை கட்டமைப்போம்.
- மணிகண்டபிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/reader-shares-his-library-experience-and-love-for-books
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக