கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அடுத்திருக்கும் குருங்குடி கிராமத்தில் சின்னதுரை என்பவரின் மனைவி காந்திமதிக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. கோயில் திருவிழாக்களுக்காக வான வெடிகள், நாட்டு வெடிகள் செய்யும் இந்தத் தொழிற்சாலையில், தீபாவளிக்காக பட்டாசுகள் செய்யும் பணி நடைப்பெற்று வந்தது.
வழக்கம்போல இன்று காலையில் அதே பகுதியைச் சேர்ந்த 9 பெண் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது இன்று காலை 11 மணிக்கு பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்களும் பல அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டார்கள். அதில் காந்திமதி (55), பாப்பாத்தி (50), லதா (42), மலர்க்கொடி (65), சித்ரா (45) உள்ளிட்ட 5 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இவர்களின் உடல்கள் பாகங்கள் சிதறிய நிலையில் வயல்வெளிகளிலும், அருகிலுள்ள ஏரியிலும் தூக்கி வீசப்பட்டது.
ரத்தினாம்பாள், தேன்மொழி, அனிதா, ருக்மணி உள்ளிட்ட 4 பெண்கள் படுகாயங்களுடன் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ரத்திணாம்பாள் (60) மற்றும் ருக்மணி இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் ஏற்பட்ட சத்தம் சுமார் 5 கிலோமீட்டர் வரை கேட்டிருக்கிறது. தொழிற்சாலையின் கட்டடங்கள் தரைமட்டமானதுடன், உடைந்த சுவர்கள் மற்றும் அவற்றிலிருந்த கற்கள் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன.
சத்தத்தைக் கேட்டு ஓடிச்சென்ற கிராமத்து மக்கள் உயிரிழந்து கிடந்த தங்களின் உறவினர்களைப் பார்த்து கதறி அழுதனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
Also Read: நடுரோட்டில் வெடித்துச் சிதறிய பட்டாசு வேன்... சிதைந்த உடல்கள்!- செஞ்சியைப் பதற வைத்த விபத்து
1951-ம் வருடம் முதல் செயல்பட்டு வரும் இந்த பட்டாசு தொழிற்சாலையின் உரிமம், கடந்த 3 நாள்களுக்கு முன்பு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் அவர்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
source https://www.vikatan.com/news/accident/7-women-were-dead-by-fire-accident-in-cracker-factory-at-cuddalore-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக