Ad

புதன், 23 செப்டம்பர், 2020

40 ஆண்டுகளுக்குப்பின் இங்கிலாந்திலிருந்து அனந்தமங்கலம் திரும்பும் ராமர் சிலை... கிடைத்தது எப்படி?

விக்ரகங்கள், பாரதப் பண்பாட்டில் மிகவும் முக்கியமானவை. ஆலயங்களில் இறைவடிவமாகத் தரிசனம் கொடுக்கும் விக்ரகங்கள் புனிதமானவை மட்டுமன்று, கலை அழகும் நுட்பமும் வாய்ந்தவை. ஆயிரம் ஆண்டுகால அந்நியர் படையெடுப்புகளில் கொள்ளைபோன நம் நாட்டின் கலைப்பொக்கிஷங்கள் ஏராளம். அவற்றையும் தாண்டி இன்றும் விலைமதிப்பில்லாத பல லட்சம் கலைப்பொருள்கள் நம் நாட்டின் வரலாற்றுக்கும் கலைப் பண்பாட்டுக்கும் சாட்சிகளாகத் திகழ்கின்றன. அப்படி இந்தியா முழுவதும் உள்ள ஆலயங்களில் சுமார் 70 லட்சம் விக்ரகங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 36,500 கோயில்களில் மொத்தம் 4.3 லட்சம் விக்ரகத் திருமேனிகள் உள்ளன என்கிறார்கள்.

அனந்தமங்கலம் ராமர்

சுதந்திரத்துக்குப் பின் பல விக்ரகங்கள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றின் கலைத் திறத்துக்காகவும் அழகியல் மதிப்பீட்டுக்காகவும் பல கோடிகள் கொடுத்து அவற்றை வாங்க அயல் நாட்டினர் முன்வந்தனர். இதை அடிப்படையாகக் கொண்டு சிலையைத் திருடி விற்கும் கும்பலும் நம் நாட்டில் பெருகின. தமிழகத்தில் சிலைத் திருட்டுகள் அதிகரித்ததையொட்டி அதைத் தடுக்கும் நோக்கில் 1983-ம் ஆண்டு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற காவல் அமைப்பைத் தமிழக அரசு உருவாக்கியது. சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காகத் தமிழகத்தில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்களும் தொடங்கப்பட்டன.

சில வழக்குகளில் மட்டுமே திருடியவர்கள் அகப்பட்டனர். பல வழக்குகளில் அதுவும் இல்லை. 1987-ம் ஆண்டு சிவபுரம் நடராஜர் சிலையும் 1991-ம் ஆண்டு பத்தூர் நடராஜர் சிலையும் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்டன. சிலைக் கடத்தல் வழக்கின் முக்கிய நிகழ்வாக 2012-ம் ஆண்டு சுபாஷ் கபூர் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அதன்பின் வேகமெடுத்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுப் போலீஸாரின் விசாரணையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 2018-ம் ஆண்டில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவால் ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகள் உள்ளிட்ட 20 சிலைகள் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் ரூபாய் 250 கோடி! தொடர்ந்து வெளிநாடுகளிலிருக்கும் நம் விக்ரகங்களை மீட்கும் சட்டப்போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதில் சமீபத்தில் கிடைத்திருக்கும் வெற்றியே அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயிலின் ராமர் சிலை மீட்பு.

அனந்தமங்கலம் ராமர்

அனந்தமங்கலம் ராமர் சிலை கடத்தல் வழக்கு

22.11.78 அன்று இரவு, அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் இருந்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் ஆகிய சிலைகள் களவாடப்பட்டன. இதுகுறித்து அப்போதைய கோயில் நிர்வாக அதிகாரி செல்வராஜ் என்பவர், காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையின் வழக்கு எண் 636/78. சிபிசிஐடி போலீசாரின் விசாரணையின் பேரில் நாச்சியார்கோவிலைச் சேர்ந்த அக்னி முத்துப்பிள்ளை மகன் கிருஷ்ணமூர்த்தி, நரசிங்கம்பேட்டை நாகூரான் மகன் ராஜேந்திரன் மற்றும் கலியன் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் சிலைகளை யாருக்கு விற்பனை செய்தார்கள் என்ற விபரம் தெரியவில்லை. சிலைத் திருட்டுக்காக இவர்கள் மூவருக்கும் 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Also Read: நாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்!

தசபுஜ ஆஞ்சநேயர் அருளும் அனந்தமங்கலம்

அனந்தமங்கலம் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. விஜயநகரப் பேரரசின் காலகட்டத்தில் சிறந்துவிளங்கிய இந்தக் கோயிலில் மூலவர் வாசுதேவ பெருமாள். உற்சவர் ராஜகோபால சுவாமி. ஶ்ரீதேவி பூதேவித் தாயாரும், உற்சவர்களாக ருக்மிணி, சத்யபாமா ஆகியோரும் கோயில்கொண்டுள்ளனர். இங்குதான் பத்து கைகளும் நெற்றிக்கண்ணும் கொண்ட தசபுஜ ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. தன் 9 கரங்களில் ஆயுதமும் ஒரு கரத்தில் வெண்ணெயும் தாங்கிக் காட்சி அருளும் இந்த ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டால் பகை அகலும் என்கிறார்கள் பக்தர்கள். மன வலிமையும் செயல்களில் வெற்றியும் வேண்டுபவர்கள் கட்டாயம் இந்த ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்.

இந்த அற்புத ஆலயத்தில்தான் 15- ம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய திருவடிவான லட்சுமணர், அனுமன், சீதை சமேத ஶ்ரீராமர் உற்சவ மூர்த்திகள் 1978-ம் ஆண்டு திருடப்பட்டன.

ராஜராஜன்

கைகொடுத்த பாண்டிச்சேரி பிரஞ்சு இன்ஸ்டியூட்

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் இந்தியப் பாரம்பர்யப் பொருளொன்று ஏலம் விடப்பட இருப்பதாக ஒரு விளம்பரம் வெளியானது. இதைக் கண்டதும் சமூக ஆர்வலர்கள் அதை ஆராயத் தொடங்கினர். ஆனால் இந்தச் சிலை எந்தக் கோயிலைச் சார்ந்தது என்ற விபரம் தெரியாமல் திண்டாடினர். அப்போது, புதுவை பிரஞ்சு இன்ஸ்டியூட் புகைப்பட ஆவணங்களில், 1958-ம் ஆண்டு ஜூன் 15 ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று கிடைத்தது. அது அனந்தமங்கலம் கோயில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் விக்ரகங்களின் புகைப்படம். இதிலுள்ள ராமர் விக்கிரகம் விளம்பரப்படுத்தப்பட்ட ராமர் விக்கிரகம் இரண்டும் உருவில் துல்லியமாக பொருந்தியிருக்க, விளம்பரத்தில் இடம்பெற்ற ராமரின் விக்கிரகம் அனந்த மங்கலம் கோயிலைச் சேர்ந்தது என்பது உறுதியானது. 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடனே இந்திய ஆணையம் லண்டன் போலீஸாருக்கு ஆவணங்களை அனுப்பிவைத்து உரிமை கோரினர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸார், சிலையை வைத்திருக்கும் அருங்காட்சியகத்தினர் நல்லெண்ண அடிப்படையிலேயே செயல்படுபவர்கள் என்றும் இந்தியாவிடமே அந்தச் சிலைகளைத் திருப்பித் தர முன்வருவதாகவும் தெரிவித்தனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நடந்த காணொளிக் காட்சியின் வழியாக இங்கிலாந்து அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் சிலைகளை ஒப்படைத்தனர். இவை இன்னும் 15 நாள்களில் இந்தியா வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தசபுஜ ஆஞ்சநேயர்

இந்த விக்ரகங்களில் அனுமன் விக்ரகம் மட்டும் அங்கு இல்லை. அது சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விலைமதிப்பற்ற இந்த விக்ரகங்கள் இந்தியாவுக்கு வந்து அடுத்த சில நாள்களில் மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை ஆணையர் மூலம் கோயிலுக்கு வழங்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து கோயிலைச் சேர்ந்த மாதவன் பட்டாச்சார்யாரிடம் பேசினோம்.

"சுமார் நாற்பது ஆண்டுகள் கழித்து இந்தக் கோயிலுக்கு ராமபிரான் திரும்பிவர இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் அவரை வரவேற்கக் காத்திருக்கிறோம். இதேபோன்று வெளிநாடுகளில் இருக்கும் சுவாமிகளின் மூர்த்தங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டால் நம் நாடு மேலும் சுபிட்சம் அடையும்" என்று மகிழ்வோடு கூறினார் மாதவன்.



source https://www.vikatan.com/spiritual/temples/anantha-mangalam-sri-ramar-statue-returning-to-its-temple-after-40-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக