Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

`மாநிலங்களவை புறக்கணிப்பு.. 3 கோரிக்கைகள்; அழுத்தத்தை அதிகரிக்கும் எதிர்க்கட்சிகள்! - என்ன நடந்தது?

வேளாண் மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், சில கூட்டணிக் கட்சிகளும் பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. தற்போது எதிர்க்கட்சிகளும் தங்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

மாநிலங்களவை

வேளாண் மசோதா விவகாரத்தில் நடந்தது என்ன?

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கடந்த ஞாயிறு அன்று, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கடுமையான அமளிக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் தொடர்பான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள், அவையின் மையப்பகுதிக்கு வந்து, அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டதோடு, அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தைக் கிழித்து வீசினர். `மாநிலங்களவையில் மத்திய பா.ஜ.க அரசுக்குப் போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து, குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக’ எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அவையை நடத்திய துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனு அளித்தன.

சஸ்பெண்ட்... தர்ணா!

இந்தநிலையில் நேற்று காலை அவை கூடியதும், ஞாயிறு அன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்டது தொடர்பாக கடும் அதிருப்தி தெரிவித்தார் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்களை ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று நிராகரித்தார். இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். தங்களின் சஸ்பெண்ட்-க்கு எதிராக தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த தர்ணா, இரண்டாவது நாளாக இன்றும் நீடித்தது.

தர்ணா

இன்று இரண்டாம் நாள் போராட்டத்தில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டத்தில் ஈடுட்டிருக்கும் உறுப்பினர்களுக்கு தேநீர் கொண்டு வந்தார். ஆனால், அவரது தேநீரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பிக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மாநிலங்களவை துணைத்த லைவர் ஹரிவன்ஷ் தேரீர் அளித்ததை பிரதமர் மோடி பாராட்டினார். ``சில நாள்களுக்கு முன்னர் தன்னை அவமதித்தவர்களுக்கும் தேநீர் வழங்கிய ஹரிவன்ஷ் செயலை இந்திய மக்களுடன் இணைந்து நானும் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார் மோடி.

மாநிலங்களவையைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்!

இதற்கிடையே எட்டு எம்.பி-க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறும் வரை மாநிலங்களவையைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன எதிர்க்கட்சிகள். இதைத் தொடர்ந்து எட்டு எம்.பி-க்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். ``எந்தவொரு தனியார் நிறுவனமும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் எதையும் வாங்க முடியாத மசோதாவைக் கொண்டு வர வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணையம் செய்யப்பட வேண்டும். உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை அவர் முன்வைத்திருக்கிறார். இந்தக் கோரிக்கைகளை ஏற்கும் வரை மாநிலங்களவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார் குலாம் நபி ஆசாத்.

குலாம் நபி ஆசாத்

வேளாண் மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், சில கூட்டணிக் கட்சிகளும் பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றன. கூட்டணிக் கட்சியிலிருந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். வேளாண் மசோதாக்களுக்கு இரு அவைகளிலும் அ.தி.மு.க ஆதவாக வாக்களித்திருந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மசோதாவுக்கு எதிராகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

தற்போது எதிர்க்கட்சிகளும் தங்களின் நடவடிக்கைகளின் மூலம் அழுத்தம் கொடுத்துவருகின்றன. எனினும் பிரதமர் மோடி தொடர்ந்து வேளாண் மசோதாக்கள் குறித்து விளக்கமளித்து வருகிறார். அவர் தனது விளக்கத்தில் தொடர்ந்து, `குறைந்தபட்ச ஆதரவு விலை முறை நீடிக்கும்’ எனத் தெரிவித்துவருகிறார். மேலும், விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/opposition-parties-to-boycott-rajya-sabha-till-3-demands-are-met

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக