கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தொற்று அதிதீவிரமாக பரவும் மாநிலங்களில் புதுச்சேரி முதலிடத்தில் இருக்கிறது என்று ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்திருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக புதுச்சேரியில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சராசரியாக நாளொன்றுக்கு 8 முதல் 12 பேர் வரை தொற்றின் தீவிரத்தால் உயிரிழக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி 15,157 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 9,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையிலும், தங்கள் வீடுகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேற்று முன் தினம் மட்டும் 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் அமைப்பாளரும், தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏவுமான மருத்துவர் எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். தொற்று ஏற்பட்டு காலாப்பாட்டு பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் உயிரிழந்தார்.
Also Read: கொரோனா: புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் உயிரிழப்பு!
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஏ. சண்முகத்தின் மகனான இவர், 1985-1990-ல் உருளையன் பேட்டை தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-2006 மற்றும் 2006-2011-ல் முதலியார்பேட்டை தொகுதியில் தி.மு.க எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 முதல் 2014 வரை புதுச்சேரி மாநில தி.மு.கவின் அமைப்பாளராக இருந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி அமைப்பாளராக இருந்துவருகிறார். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஏழுமலை மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பாலன் இருவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/death/puducherry-mnm-cadre-died-of-corona-infection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக