Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

கன்னியாகுமரி: கஞ்சா விவகாரத்தில் மோதல்! - நண்பரைக் கொன்று குளத்தில் புதைத்த 2 பேர்

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ஜேம்ஸ் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). கூலி வேலை செய்து வரும் இவர், கஞ்சா போதைப் பழக்கம் உடையவர் எனக் கூறப்படுகிறது. மேலும், இவர் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சாப் பொட்டலங்கள் விற்பனை செய்தும் வந்துள்ளார். மணிகண்டனும் அவரது நண்பர்கள் சிலரும் தினமும் அதே பகுதியில் உள்ள குளத்தின் கரையில் அமர்ந்து கஞ்சா புகைப்பது மற்றும் மது அருந்தி போதை மயக்கத்தில் இருப்பதும் தொடர் கதையாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 31-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் மணிகண்டனைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

கஞ்சா பொட்டலங்கள்

விசாரணையில், சம்பவத்தன்று மணிகண்டன் மற்றும் அவருடன் சில நண்பர்கள் இணைந்து கஞ்சா போதையில் குளக்கரையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனுடன் இருந்த நண்பர்களைத் தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது. போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கஞ்சாப் பொட்டலத்தை மணிகண்டன் மறைத்து வைத்ததால் அவரை நண்பர்களே கொலை செய்தது தெரியவந்தது.

Also Read: சென்னை:`என் மனைவி அசிங்கப்படுத்திவிட்டாள்!' - தம்பியைக் கொலை செய்த ஆட்டோ டிரைவர்

மேலும், மணிகண்டனின் உடலில் கல்லைக் கட்டி அந்தபகுதியில் உள்ள குளத்தில் புதைத்ததும் விசாரணையில் வெளியே வந்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்தில் இருந்து கயிறால் கட்டப்பட்ட நிலையில் மணிகண்டனின் உடல் மீட்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்த அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக அனுபி வைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து அஞ்சுகிராமம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தில் இருந்து மீட்கப்பட்ட மணிகண்டனின் உடல்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த காவல்துறை எஸ்.எஸ்.ஐ., ஒருவரின் மகன் நிஷாந்த் மற்றும் கணேசன் ஆகியோர் மணிகண்டனின் நண்பர்கள். மணிகண்டன் கஞ்சாப் பொட்டலங்களை மறைத்து வைத்ததாக கூறி நிஷாந்த் மற்றும் கணேசன் ஆகியோர் அவரிடம் தகராறு செய்துள்ளனர். வாய்த் தகராறு முற்றியதால், கணேசன் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனைக் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர், நிஷாந்த் உடன் சேர்ந்து ஜேம்ஸ் டவுன் பகுதியில் உள்ள குளத்தில் மணிகண்டன் உடலில் கல்லைக் கட்டி புதைத்துள்ளனர்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/kanyakumari-police-arrests-2-in-murder-charges

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக