-
சென்னை, விருகம்பாக்கம் தனியார் விடுதியில் 18 கிலோ கஞ்சாவுடன் கல்லூரி மாணவர்கள் உட்பட 12 பேர் கைது.
-
வேலூரை அடுத்த காட்பாடியில் இயங்கிவரும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் 12 கிலோ கஞ்சாவுடன் கைது.
-
சென்னை, மயிலாப்பூரில் உயர்ரக கஞ்சா விற்பனை செய்த ராயப்பேட்டையைச் சேர்ந்த சபாசக்தி (26), மயிலாப்பூரைச் சேர்ந்த யாசர் ஹனிபா (21) என்ற சட்டக்கல்லூரி மாணவன் இருவரும் மூன்றரை கிலோ `நெதர்லாந்து பட்’ எனப்படும் முதல் ரக கஞ்சாவுடன் கைது.
-
சென்னை, மண்ணடிப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் எட்டு கிலோ கஞ்சாவைப் பதுக்கிவைத்துச் சென்ற யூசுப் மற்றும் முஸ்தபா என்ற கல்லூரி மாணவர் இருவரும் கைது.
-
சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர் உளட்பட ஏழு பேரை காவல்துறை கைதுசெய்து, அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
-
காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி அகரம் பேருந்து நிறுத்தம் அருகே சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திய ஆந்திரப்பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த பிரவீன் (21), காக்கிநாடாவைச் சேர்ந்த சாய்ராம் (21) இரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைது.
-
மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வனிதா (32) ஆன்லைன் உணவு டெலிவரி செய்வதுபோலக் கஞ்சா விற்பனை செய்தவர். மூன்று கிலோ கஞ்சாவுடன் கைது.
மேலே கூறப்பட்டிருப்பவை, கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற சம்பவங்களில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே. இன்னும் சொல்லப்படாத சம்பவங்கள் ஆயிரமாயிரம். இந்தச் சம்பவங்கள் இல்லாமல், கஞ்சா விற்பனைத் தகராறில் நடந்த கொலைச் சம்பவங்களும், கஞ்சா போதையில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களும் ஏராளம்.
உதாரணமாக, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 802 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் தொடர்புடைய 132 நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக காவல்துறை எவ்வளவு கெடுபிடியாக இருந்தாலும். தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.
தமிழகத்துக்கு எங்கிருந்து வருகிறது கஞ்சா?
பெரும்பாலும், தமிழகத்துக்கு அண்டை மாநிலம் ஆந்திராவிலிருந்துதான் கஞ்சா கொண்டுவரப்படுகிறது. ஆந்திராவிலிருந்து கோயம்பேடு வரும் காய்கறி லாரிகளிலும், சொகுசு கார்களிலும், ஆந்திரா எல்லைகளிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்துக்கு பைக்குகளிலும் கஞ்சா கொண்டுவரப்படுகிறது. பின்னர் இங்கிருந்து தமிழகத்தின் மற்ற இடங்களுக்குச் சின்ன சின்னப் பொட்டலங்களாக மாற்றப்பட்டுக் கைமாற்றப்படுகிறது.
பெரும்பாலும், ஆந்திராவிலிருந்து வருவது இந்திய வகை கஞ்சாதான். இதன் விலை 100 கிராம் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் `நெதர்லாந்து பட்’ எனப்படும் முதல் தர கஞ்சா வகை, 100 கிராம் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது.
குறிவைக்கப்படும் மாணவர்கள்!
மாணவர்களிடம் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட காலம் போய், மாணவர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்துவது தற்போது அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை விசாரித்தால், பல திடுக்கிடும் தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஆடம்பரச் செலவு செய்ய ஆசைப்படும் நடுத்தரவர்க்க மாணவர்களைத்தான் இந்தக் கும்பல் குறிவைக்கிறது. அந்த மாணவர்களைப் பணத்தாசை காட்டி, மூளைச்சலவை செய்து தங்கள் கூட்டத்தில் சேர்த்துவிடுகின்றனர்.
இதற்குக் காரண்மும் உண்டு. மாணவர்கள் மூலம் மற்ற மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது எளிதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மாணவர்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினால், காவல்துறையினருக்குப் பெரிதாகச் சந்தேகமும் ஏற்படுவதில்லை. மற்றவர்களைவிட, மாணவர்களுக்குச் சம்பளத்தைக் குறைவாகக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்கள். இது போன்ற பல்வேறு காரணங்களால் கஞ்சா வியாபார கும்பல்கள் மாணவர்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்திவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் கஞ்சா வியாபாரம்!
தற்போது, தமிழகத்தில் பல பெருநகரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகிவருவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், திருச்சி, நெல்லை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாணவர்களிடையே கஞ்சா பயன்பாடு நாளுக்கு நாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ``மாணவர்களைப் பொறுத்தவரை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் இந்தப் பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அப்படியே இந்தத் தொடர் சங்கிலி நீண்டுகொண்டே செல்கிறது. எதிர்காலத் தலைமுறையினர் இப்படி போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்த ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து, வருமானமின்றி தவித்துக்கொண்டிருந்த பலரும் கஞ்சா விற்பனை கும்பலிடம் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பணத்தாசை காட்டி இந்தக் கும்பல் தன் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறது. வருமானமில்லாத அவர்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு, இந்தத் தொழிலில் இறங்கிவிடுகிறார்கள். முன்பெல்லாம், பல இடங்களில் அலைந்து, தேடிப்போய் வாங்க வேண்டிய நிலையிலிருந்த கஞ்சா, ஒரு போன் செய்தாலே வீட்டுக்கு வந்து டெலிவெரி செய்யும் அளவுக்கு மாறியிருக்கிறது. இதற்காக, தனியாக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் ஒரு பெரும் நெட்வொர்க் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஓரிடத்திலிருந்து சரக்கு தேவைப்படும் இடம் குறித்த விவரங்கள் அனைத்தும் இந்தக் குழுவில் பேசப்படுகின்றன.
Also Read: இன்ஜினீயரிங் கல்லூரி... ஐடி கம்பெனி... கஞ்சா நெட்வொர்க்... பாதை மாற்றிய போதைப் பயணம்!
தமிழகக் காவல்துறை தொடர்ந்து எவ்வளவோ முயன்றும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துவருகிறது. தற்போது காவல்துறையினர் கைப்பற்றுவதெல்லாம் சிறிய அளவு கஞ்சா மட்டுமே; கைப்பற்றுவதைவிட பல மடங்கு விற்பனை செய்யப்படுகிறது என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். தமிழகத்துக்கு கஞ்சா பிற மாநிலங்களிலிருந்து வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அல்அமீனுடன் தொடர்பிலிருந்தவர்களும் தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாகக் கஞ்சா பழக்கத்திலிருந்து மீண்டுவர, நூற்றுக்கணக்கான நபர்களுக்குச் சிகிச்சை அளித்துவரும் மனநல மருத்துவர் எம்.சுரேஷ்குமாரிடம் பேசினோம். ``கடந்த வருடம் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் மூன்று கோடி நபர்கள் கஞ்சா பயன்படுத்துகிறார்கள். இதில், அதிகப்படியான நபர்கள் இளைஞர்கள் என்பது தெரியவருகிறது. கஞ்சா பழக்கம் அதிகரிக்க முக்கிய காரணம், மற்ற போதைப்பொருட்களை விட கஞ்சாவானது குறைந்த விலையில் மிக எளிதில் கிடைக்கிறது. கஞ்சா அதிகம் பயன்படுத்தப்பட இதுவே முக்கியக் காரணம். மற்றொரு காரணம், கஞ்சா தடைசெய்யப்பட்ட போதைப்பொருள். அதைப் பயன்படுத்தினால் குற்றம் என்பதே பல மாணவர்களுக்குத் தெரிவது இல்லை. மாணவர்கள் ஒரு செயலை செய்கிறார்கள் என்றால், அது பரவலாக இருக்கும் பழக்கவழக்கமாகத்தான் இருக்கும். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அந்தப் பழக்கம் தொற்றிக்கொள்ளும்.
Also Read: சிவகங்கை: காரில் இருந்த 15 பெட்டிகள்! - இரவு ரோந்தில் சிக்கிய 34 கிலோ கஞ்சா
`கஞ்சா அடிப்பதில் என்ன இருக்கிறது. நான் எல்லாம் அடிக்கிறேன்தான். இது ஒரு விஷயமா?' என்று எண்ணிவதால்தான் எளிதில் ஒருவர் மூலம் மற்றவருக்கு கஞ்சா பழக்கம் பரவுகிறது. அதுமட்டுமில்லாது, `கஞ்சாவில் என்ன இருக்கிறது என்று முயற்சி செய்து பார்க்கலாமே' என்று முயற்சி செய்வது. தற்போதைய நிலையில் புகைப் பழக்கம், குடிப்பழக்கத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்பது போலக் கஞ்சாவைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்ற அறிய விரும்பும் ஆர்வம் மாணவர்கள், கஞ்சா பயன்படுத்தக் காரணமாக அமைகிறது. உண்மையில் நாம் கல்லூரி மாணவர்கள் பலரிடம் ரகசியமாகக் கேட்டுப் பார்த்தால் பலர் பயன்படுத்துவது தெரியவரும். சிறுவயதில் கஞ்சா பயன்படுத்த ஆரம்பிக்கும் மாணவர்கள், அந்த பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். பல மாணவர்கள் இப்படி ஒரு பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது அவர்களின் பெற்றோருக்குக்கூடத் தெரியாது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தை என்ன செய்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். கஞ்சா பயன்படுத்துபவர்களைக் குற்றம் செய்தவர்கள் போல பார்க்கக்கூடாது. அவர்களுக்கு இருப்பது ஒரு மூளை சார்ந்த நோய் என்றுதான் பார்க்க வேண்டும். கஞ்சாவினால் அடிமையாகும் நபர்களுக்கு மருத்துவம் சார்ந்த சிகிச்சை மட்டுமல்லாது, மனநலம் சார்ந்த சிகிச்சை, குடும்பத்தின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து வெளியில் கொண்டுவர முடியும். இதைவிடுத்து அவர்களை நீங்கள் குற்றவாளியாக நீங்கள் பார்க்க நினைத்தால், செய்யும் தவறை மறைமுகமாகச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது, அவர்களின் குடும்பமும் பாதிக்கப்படும், இந்த சமுதாயமும் பாதிக்கப்படும். எனவே, இதுபோன்ற பழக்கங்களிலிருப்பவரைச் சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச்சென்று சரிசெய்யவேண்டும். கஞ்சா பழக்கம் என்பது சரிசெய்யக் கூடியதுதான்" என்று கூறினார்.
Also Read: ஆந்திரா டு திண்டுக்கல்... 300 கிலோ கஞ்சா..! - அதிரடிகாட்டிய தனிப்பிரிவு போலீஸார்
நாட்டின் ஏதோ ஒரு முலையில் உட்கார்ந்துகொண்டு ஒரு கொள்ளைக் கூட்டம் பணம் சம்பாதிக்க. நாட்டின் நாளைய எதிர்காலமான மாணவர்களை போதைப்பழக்கத்துக்கு அடிமையாக்கி, இப்படி நாச வேலையில் ஈடுபடுத்துவதை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின், எதிர்பார்ப்பாக இருக்கிறது.
செய்துமுடிக்குமா காவல்துறை..?
source https://www.vikatan.com/news/crime/story-about-increasing-cannabis-smuggling-by-college-students