Ad

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

JOJI: இதுவும் ஃபார்முலா படம்தான்... ஆனால் இது ஃபகத் ஃபாசில் ஃபார்முலா! `ஜோஜி' படம் எப்படி?

தோட்டம் வைத்திருக்கும் பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி ஃபகத் ஃபாசில். சகோதரர்கள் மற்றும் கண்டிப்பான அப்பாவின் நிழலில் இருந்து வெளியே வந்து பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற முனைப்பில் பணத்தைக் குதிரை வியாபாரத்தில் இறைக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கையாகிறார் அப்பா. தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க ஃபகத் எனும் இந்த ஜோஜி எடுக்கும் விபரீத முடிவுகளும் அதனால் அந்தப் பெரிய குடும்பம் சந்திக்கும் இன்னல்களும்தான் இந்த ஸ்லோபேர்ன் க்ரைம் டிராமாவின் ஒன்லைன்.

படத்தின் கதையைப் பற்றி இரண்டு வரி பேசினாலே ஸ்பாய்லர்தான் என்பது போன்றதொரு திரைக்கதை அமைப்பு. இரண்டு மணிநேரத்துக்கும் குறைவாக ஓடும் படத்தின் ஒவ்வொரு காட்சிகளுமே பின்பாதி கதையின் ஓட்டத்தில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன என்பது இதன் மிகப்பெரிய ப்ளஸ். ஷேக்ஸ்பியரின் 'மேக்பெத்' நாடகத்தின் சாராம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கதையின் களத்தைக் கேரளாவின் பின்புலத்துக்கு மாற்றியிருக்கிறார் கதாசிரியர் ஸ்யாம் புஷ்கரன். வெவ்வேறு யதார்த்தமான மனிதர்கள், அவர்களுக்கு இருக்கும் நியாயங்கள், ஜோஜி என்ற கதாபாத்திரத்தின் தன்மை, தான் கொண்ட கொள்கைக்காக எந்த எல்லைக்கும் போகும் அவனின் வீம்பு என நிறையவே உழைத்திருக்கிறார் ஸ்யாம்.

ஜோஜி | Joji

ஃபகத் ஃபாசில், ஸ்யாம் புஷ்கரன், திலீஷ் போத்தன் கூட்டணியில் இதற்கு முன்னர் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்', 'தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும்' என இரண்டு படங்களுமே ஒரு கல்ட் க்ளாசிக் அந்தஸ்தைப் பெற்றுவிட்டன. அதனாலேயே இந்தப் படத்துக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால், முதல் இரண்டு படங்களுடன் போட்டிப்போட்டால் இதற்கு வெண்கலப் பதக்கம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தும் எதிர்பாராத சம்பவம், பிளவுபட்ட சுயநல மனிதர்கள், நியாய தர்மங்களை உற்று நோக்காத கதையின் போக்கு என இதுவும் ஒரு தனி முத்திரையைப் பதிக்கிறது.

ஜோஜியாக செம ஸ்லிம் ஃபகத் ஃபாசில். தன் முதிர்ச்சியான முகத்தையும் உடல்மொழியையும் விடுத்து விடலையின் கூறுகளை, வீட்டின் செல்லப்பிள்ளையின் தன்மைகளை மெனக்கெட்டு திரையில் கொண்டு வந்திருக்கிறார். எப்போதும் தன்னைச் சுற்றி கதையை அமைக்காமல், கதையின் போக்கில் நாயகனாக உருமாறும் அதே டெம்ப்ளேட்டுடன் இதிலும் பொருந்திப் போயிருக்கிறார். தொடர்ந்து பெரும்பாலான படங்களில் கொஞ்சம் நல்லவன் நிறையக் கெட்டவன் என்ற ஃபார்முலாவையே இங்கேயும் பின்பற்றியிருக்கிறார். இப்படி ஒரு வட்டத்துக்குள் இந்தப் பாத்திரமும் சிக்குவது மட்டும் சற்றே நெருடல்.

ஜோஜி | Joji

ஃபகத்தைப் போலவே அனைத்து நடிகர்களும் யதார்த்தமாக வந்துபோகிறார்கள். மதம் தொடர்பான மூட நம்பிக்கைகளில் சிக்காமல் கண்டிப்பான மூத்த அண்ணனாக வலம் வரும் பாபுராஜ், அவரின் மகனாக வரும் பதின்பருவ சிறுவன் பாப்பி, ஃபகத்தின் அண்ணி பின்ஸியாக வரும் உன்னிமாயா பிரசாத், சர்ச் ஃபாதராக வரும் பேசில் ஜோசப், அப்பாவாக வரும் சன்னி என அனைவருமே கதையின் ஓட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்கள். எப்போதும் பெரியதொரு குடும்பத்தில் பிரச்னை எனும்போது தூரத்துச் சொந்தமாக இருக்கும் ஏதோவொரு மாமா வந்து சமரசம் பேசுவார். அப்படியான ஒரு பாத்திரத்தில் டாக்டர் ஃபெலிக்ஸாக ஷம்மி திலகன். படத்தில் இத்தனை மனிதர்கள் இருந்தும் லாக்டௌன் சினிமா என்பதால் தோட்டம் கொண்ட பெரிய வீடு, ஒரு மருத்துவமனை எனக் குறைவான இடங்களில் மட்டுமே கதை நகர்கிறது.

கொஞ்சம் பிசகினாலும் ஒரு லோ பட்ஜெட் நாடகமாக மாறியிருக்கும் என்கிற ரீதியிலான இந்த சினிமாவை கட்டிக் காத்திருப்பது சைஜு காலித்தின் கேமராவும் கிரண் தாஸின் படத்தொகுப்பும்தான். எதிர்பார்க்கும் நேரத்தில் அமைதி காக்கும் ஜஸ்டின் வர்க்கீஸின் பின்னணி இசை, எதிர்பாரா தருணங்களில் எல்லாம் ஒலித்து படத்துக்கான த்ரில்லர் டெம்போவைக் கூட்டியிருக்கிறது.

கூரியர் கடையின் டெலிவரி பாயில் தொடங்கும் படத்தின் ஆரம்ப ஷாட், ஃபகத் மீன் பிடிப்பதை உவமையாகச் சித்திரித்திருப்பது, அண்ணியிடம் ஃபகத் பேசும்போது அடுப்பு பெரிதாக எரிவது, எப்போதும் கதவைச் சாத்திக்கொண்டு தன் சுயரூபத்தைக் காட்டும் ஃபகத்தின் திருட்டுத்தனத்தைக் கணித்துவிட்டதாய் தோன்ற வைக்கும் வகையில் ஜன்னலில் படாரென்று எட்டிப் பார்க்கும் மூத்த அண்ணனின் முகம் எனப் படம் நெடுக நிறையக் குறியீடுகள்.
ஜோஜி | Joji

அதிலும் அப்பாவின் மாத்திரையுடன் நடமாடும் ஃபகத், இரண்டு முறை ரிப்பீட்டாகும் அதே சீக்வென்ஸ், அதில் ஃபகத்தின் உடல்மொழி, அவர் அண்ணியின் இருப்பு எனப் பதைபதைப்பைக் கூட்டும் காட்சிகளிலும் அத்தனை அழகியல். இப்படியான காட்சிகள் தாண்டி, அப்பாவின் மீள் வருகை, வீல்சேரில் இருந்தாலும் தான்தான் அந்த வீட்டில் எப்போதும் ராஜா என்பதை நிறுவுவதாய் அவர் தன் இரண்டு கைகளில் போடும் அந்தக் கையொப்பம் ஒரு மாஸான மாஸ்டர் கிளாஸ்!

Also Read: யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

ஜோஜி | Joji

படம் இரண்டு மணிநேரத்துக்கும் குறைவு என்றாலும் படத்துடன் ஒன்றிப்போக நமக்குச் சிறிது காலம் தேவைப்படுகிறது. யார் யாருக்கு என்ன உறவு என்பதைப் புரிந்துகொள்வதற்குள்ளாகவே படம் அடுத்த கியரைப் போட்டுவிடுகிறது. காட்சி மொழியாகப் படம் பல இடங்களில் ஈர்த்தாலும் கதையை முழுவதுமாக நகர்த்தியிருப்பது கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள்தான். அந்த மண்ணின் கலாசாரம், மொழி போன்றவற்றை அறியாதவர்களுக்கு இது சற்றே நெருடலை ஏற்படுத்தலாம். இதுதான் 'ஜோஜி'யின் வெளியை ஒரு மலையாள குடும்பத்தின் பிரச்னையாக, ஒரு மலையாள சினிமாவாக மட்டுமே சுருக்கியிருக்கிறது.

இதை ஒதுக்கிவைத்துவிட்டு, ஃபகத்தின் நடிப்புக்கான வெளி, அடுத்து என்ன என நிறையச் சம்பவங்களுடன் நகரும் திரைக்கதை போன்றவற்றை மட்டும் வைத்துப் பார்த்தால் இந்த 'ஜோஜி'யும் ஃபகத்தின் தலைக்கு ஒரு மகுடம்தான்!


source https://cinema.vikatan.com/movie-review/amazon-prime-video-release-fahadh-faasil-joji-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக