Ad

சனி, 29 மே, 2021

தோனியின் உச்சம்… 2011 உலகக்கோப்பையை வென்றதும் சென்னை சூப்பர் கிங்ஸூக்காக ஐபிஎல் வென்றது எப்படி?!

எல்லா துறை வல்லுநர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரும். அப்போது அந்தத் துறையின் உச்சபட்ச வெற்றிகள் பலவற்றையும் அனுபவிக்கும் நிலை உருவாகும். சுருக்கமாக சொல்லப்போனால், அந்தச் சமயங்களில் அவர்கள் தொட்டதெல்லாமே தங்கமாக ஜொலிக்கும். முன்னாள் கேப்டன் தோனிக்கும் அப்படி ஒரு காலம் இருந்தது. 2010-11 இந்தக் காலகட்டத்தில் தோனி தொட்டதெல்லாம் ஹிட் தான். 2010 ஐபிஎல் கோப்பையை சென்னை அணிக்காக வென்று கொடுத்தவர், அடுத்து இந்திய அணிக்காக 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்று கொடுத்திருப்பார். இந்த உலகக்கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் தொடங்கிய 2011 ஐபிஎல் சீசனிலும் தோனியின் சென்னையே கோப்பையை வென்றிருக்கும். தோனியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற அந்த ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை சென்னை அணி வென்ற தினம் 28-05-2011. சரியாக 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கறது.

ஐபிஎல்-ன் முதல் சீசனிலிருந்தே சென்னை அணி பலமிக்க அணியாக வலம் வந்தது. முதல் சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக நூலிழையில் தோற்று கோப்பையை தவறவிட்டிருந்தது. அடுத்த சீசனில் அரையிறுதியில் வெளியேறியது. இரண்டு முறை வெற்றிக்கோட்டை நெருங்கி கோட்டைவிட்ட சென்னை அணியின் கோப்பை கனவு மூன்றாவது சீசனில் தான் கைகூடியது. ஆனாலும், அந்த 2010 சீசன் சென்னைக்கு முழுமையான திருப்தி கொடுத்த சீசன் கிடையாது. காரணம், சென்னை அணி அந்த சீசனில் கடுமையாக சொதப்பியிருந்தது. லீக் போட்டிகளோடு வெளியேறிவிடும் என்று நினைக்கையில் திடீரென மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்று கோப்பையையும் வென்றது. இந்த வெற்றி அதிர்ஷ்ட கேட்டகரியின் கீழ் வரவு வைக்கப்பட்டது. ஏனெனில், லீக் போட்டிகளில் சென்னை அணியின் தோல்விகளை பார்த்தவர்கள் யாரும் இப்படி மேஜிக் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.

IPL 2011 Final

இப்போது 2011-ல் அடுத்த சீசன். தோனி உலகக்கோப்பையை வென்ற கையோடு, திருப்பதிக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு சென்னைக்கு விமானம் ஏறிவிட்டார். இந்த முறையும் கடந்த சீசனை போல தட்டுத்தடுமாறி வென்றால் அது அவ்வளவு கௌரவமாக இருக்காது. ஏனெனில், 2010-ல் இருந்த தோனி வேறு. 2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு இருக்கும் தோனி வேறு. இந்த தோனியை கிரிக்கெட்டின் அத்தனை ஜாம்பவான்களும் 'உலகின் தலைசிறந்த கேப்டன்' என கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது தோனிக்கு முன் இருந்த பொறுப்புகளும் அழுத்தங்களும் அதிகம். தோனி இந்த முறை கோப்பையை தூக்கியாக வேண்டும். அதுவும் திண்டாடாமல் சௌகரியமாக அத்தனை அணிகளையும் சம்பவம் செய்து அரியணையில் ஏற்றியாக வேண்டும். இல்லையேல், அது தோனியின் கேப்டன்சி பற்றி கட்டி எழுப்பப்பட்டிருந்த மாபெரும் கோட்டையில் விரிசல்களை உண்டாக்கிவிடும். இப்படியான சூழலில்தான், சென்னையை வழிநடத்தி 2011 சீசனுக்குள் அடியெடுத்து வைத்தார் தோனி.

இந்த சீசனில் புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் என இரண்டு புதிய அணிகளும் இணைந்திருந்தன. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் 150 ஸ்கோரை டிஃபண்ட் செய்து 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியுடன் தொடரை தொடங்கியது சென்னை. ஆனால், அடுத்தடுத்து சறுக்கல்கள் உண்டானது. முதல் 5 போட்டிகளில் 2-ல் மட்டுமே சென்னை அணி வென்றிருந்தது. எப்போதும் ப்ளேயிங் லெவனில் பேட்டிங் லைன் அப்பில் மாற்றம் செய்ய விரும்பாத தோனி இந்த முறை சில மாற்றங்களை செய்தார். அனிருதா ஸ்ரீகாந்துக்கு பதிலாக முரளி விஜயுடன் மைக் ஹஸ்ஸியை ஓப்பனிங் இறக்கிவிட்டார்.

பத்ரிநாத்தை ஆட்டச்சூழலை பொறுத்து நம்பர் 4-ல் இருந்து நம்பர் 7, 8 வரைக்கும் கூட மாற்றி மாற்றி பயன்படுத்தினார். ஸ்காட் ஸ்டைரிஸ், சவுதி போன்றோரை பென்ச்சில் வைத்து பிராவோவை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்தார். ரெய்னாவும், ஆல்பி மார்க்கலும் நல்ல ஃபார்முக்கு வந்தனர். ஐந்து போட்டிகளுக்கு பிறகு வரிசையாக இது அத்தனையும் நடக்க சென்னை அணி வெற்றி நடை போடத் தொடங்கியது. தொடர்ந்து நான்கு போட்டிகளில் வென்று ஏறக்குறைய ப்ளே ஆஃபையும் உறுதி செய்தது. லீக் போட்டிகள் முடிவில் 9 ஆட்டங்களை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு பாய்ந்தது.

MS Dhoni and Kohli

சென்னை அணி எப்படி முதலில் சொதப்பியதோ அதே போன்று பெங்களூரு அணியும் கடுமையாக சொதப்பியே இருந்தது. சென்னை ஒரு அணியாக திட்டமிடல்களை மறு ஆய்வு செய்து மீண்டு வந்தது. ஆனால், பெங்களூரு மீண்டு வர அதெல்லாம் தேவைப்படவில்லை. பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் திர்க் நேனஸ் எதோ காரணத்திற்காக இந்த சீசனின் தொடக்கத்திலேயே வெளியேற, கெய்லை அவருக்கு பதில் ரீப்ளேஸ்மென்ட்டாக கொண்டு வந்து இறக்கினார் விஜய் மல்லையா. இந்த ஒரு மூவ்தான் பெங்களூரு அணியின் பயணத்தையே தலைகீழாக மாற்றிப்போட்டது. ஏலத்தில் விற்கப்படாத வீரராக இருந்த கெய்ல் பெங்களூருவால் வாங்கப்பட்ட சந்தோஷத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடனான ஒப்பந்தங்களை முறித்துவிட்டு பெங்களூருவில் கால் பதித்தார்.

அமைதியாக அன்சோல்ட் வீரராக வந்திறங்கியவர் அதற்கு பின் சூறாவளியாக சுழன்றடித்தார். கொல்கத்தாவுக்கு எதிராக கெய்ல் இறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்து மிரட்டினார். '’எவ்ளோ பெரிய அதிர்ஷ்டத்தை தப்பவிட்டுவிட்டோம்’' என அத்தனை அணியின் ஓனர்களும் கவலையில் ஆழ்ந்தனர். ஈவு இரக்கமின்றி எல்லா அணிகளுக்கு எதிராகவும் அடித்து துவம்சம் செய்தார். லீக் போட்டிகளில் மட்டும் 4 அரைசதங்கள் 2 சதங்கள். ஆரஞ்சு கேப் தானாக ஓடி வந்து தனக்கேற்ற தலை இதுதான் என கெய்லின் தலையில் கிரீடமாக பொருந்திக் கொண்டது. கெய்லோடு இளம்புயலாக இருந்த கோலியும் வெளுத்தெடுக்க டிவில்லியர்ஸின் அதிரடியும் கைகோர்க்க எளிதாக 9 போட்டிகளை வென்று ப்ளே ஆஃபுக்குள் வந்தது பெங்களூர்.

பெங்களூர் அணி இதுவரை மூன்று முறை மட்டுமே இறுதிப்போட்டி வரை தகுதி பெற்றிருக்கிறது. அணில் கும்ப்ளே கேப்டனாக இருந்தபோது ஒருமுறையும் வெட்டோரி தலைமையில் ஒரு முறையும் கோலி தலைமையில் ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டியை எட்டிப் பார்த்துள்ளது. இது வெட்டோரி கேப்டனாக இருந்த போது நடந்த சீசன். அவரின் கேப்டன்சியால் என்பதை விட கெய்ல் எனும் அதிரடி புயலால் நடந்த அதிசயம் என்றே பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சம்பவத்தை குறிப்பிடலாம்.

IPL 2011 Final

இறுதிப்போட்டிக்கு ட்ரெய்லராக முதல் தகுதிச்சுற்றில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் மோதின. தோனியை பொறுத்தவரை பெங்களூரு அணியை சாய்க்க வேண்டுமெனில் முதலில் கெய்லை சாய்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதற்காகவே அஸ்வினை வைத்து பிரத்யேகமாக திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார். லீக் போட்டியில் பெங்களூருவும், சென்னையும் மோதிய ஒரு போட்டியில் கெய்ல் 70+ ரன்களை வெளுத்திருப்பார். அந்த போட்டியிலேயே அஷ்வினை முதல் ஓவரிலேயே அழைத்து கெய்லுக்கு வீச வைத்திருப்பார் தோனி. எல்லா மாதிரியும் பந்துவீசி பார்த்து கெய்லின் பலவீனத்தை கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது மட்டுமே இருவரின் நோக்கமாகவும் இருந்தது. அதில் இருவரும் வெற்றியும் அடைந்தார்கள். ப்ளே ஆஃபில் பெங்களூருவை சென்னை சந்திக்கும் போது கெய்லை வீழ்த்துவதற்கான ப்ளூ பிரின்ட் தோனி மற்றும் அஷ்வினிடம் தயாராக இருந்தது.

'கெய்லிடம் பெரிதாக ஃபுட் மூவ்மென்ட் இல்லை. அப்படியெனில், நாம் கொடுக்கும் வேகத்தை வைத்து மட்டுமே அவர் பந்தை பறக்க விடுகிறார். அதனால், முதலில் பந்தை எவ்வளவு மெதுவாக வீச முடியுமோ வீச வேண்டும். அது கெய்லை நிறைய யோசிக்க வைக்கும். அந்த யோசனை ஏற்படுத்தும் தடுமாற்றத்தை நமக்கு சாதகமாக்க வேண்டும்'. இதுதான் கெய்லின் விக்கெட்டுக்கான அடிப்படை திட்டம். இதை மிகச்சிறப்பாக பிட்ச்சில் அமல்படுத்தினார் அஷ்வின். ப்ளே ஆஃபில் அஷ்வினின் ஒரு பந்தை சிக்சருக்கு தூக்கிய கெய்ல் அந்த ஓவரிலேயே lbw ஆகி வீழ்ந்திருப்பார். சென்னையை பொறுத்தவரைக்கு ஆட்டம் அங்கேயே முடிந்துவிட்டது. ஆனாலும், கோலியின் அதிரடியால் 170+ ஸ்கோரை எடுத்தது பெங்களூரு.

சென்னை அணி சேஸிங். பவர்ப்ளேயிலேயே மைக் ஹஸ்ஸி-விஜய் இருவரும் வெளியேற, சென்னை அணி தடுமாறியது. ஆனாலும், ரெய்னா மற்றும் பத்ரிநாத்தின் பார்ட்னர்ஷிப்பால் சென்னை அணி மீண்டு எழத் தொடங்கியது. இறுதியில் தோனி மற்றும் மார்க்கல் அதிரடி காட்ட கடைசி ஓவர் வரை சென்று சென்னை அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

IPL 2011 Final

இன்னொரு தகுதிச்சுற்றில் மும்பை அணியை வீழ்த்தி, பெங்களூருவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இதில், குறிப்பிட வேண்டிய விஷயம் அந்த போட்டியில் கெய்ல் வெறித்தனமாக 89 ரன்கள் அடித்திருப்பார்.

ப்ளே ஆஃபில் பட்ட அடிக்கு திருப்பிக் கொடுக்க பெங்களூருவும், அஷ்வினிடம் சொதப்பி காயம்பட்ட சிங்கமாக கெய்லும் சென்னையை எதிர்கொள்ள சேப்பாக்கத்திற்கு வந்து சேர்ந்தனர். சென்னை அணி இப்போது முதல் பேட்டிங். மைக் ஹஸ்ஸியும் விஜய்யும் கடந்த போட்டியை போன்று ஏமாற்றிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இருவரும் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டனர். எல்லா பந்துகளிலும் ரன் சேர்க்க வேண்டும். ஆனால், ரிஸ்க் எடுக்க கூடாது. கிட்டத்தட்ட மைக்கேல் பெவனின் மாடலை இருவரும் பயன்படுத்தினார்கள் என்று கூட சொல்லலாம். ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி வந்தாலும் கூட போதும். வராவிட்டாலும் ஒன்றுமில்லை. ஓடி ஓடியே ரன்களை சேர்த்துவிடலாம். ரன்னுக்கு வாய்ப்பே இல்லாத இடங்களில் 'single stealing' செய்ய வேண்டும். சிங்கிள்களை டபுளாகவும், டபுள்களை ட்ரிபிளாகவும் மாற்ற வேண்டும். இதுதான் அவர்களின் ப்ளான். இதை மிகச்சரியாக இருவரும் செய்தனர்.

ஓடி ஓடியே ரன்ரேட்டை 8-9 ரேஞ்சில் வைத்திருந்தனர். 8 ஓவருக்குப் பிறகு, நன்கு செட்டில் ஆகிவிட்ட நிலையில் முரளி விஜய் முரட்டடி அடிக்கத் தொடங்கினார். இந்த பார்ட்னர்ஷிப் 16 ஓவர் வரை நிலைத்து நின்று 159 ரன்களை சேர்த்தது. ஓடி ஓடியே கலைத்து போயிருந்த விஜய் சோர்வாக ஒரு ஷாட் ஆடி 95 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக தோனி, ரெய்னா, பிராவோ போன்றோர் பவுண்டரி சிக்சர்களை பறக்கவிட சென்னை அணியின் ஸ்கோர் 200-ஐ தாண்டியது. பெங்களூருவுக்கு டார்கெட் 206.

முரளி விஜய் (File Photo)

தான் அடித்தால் மட்டுமே சேஸிங் எளிதாக இருக்கும் என்ற நிலையில் சென்னைக்கு பதிலடி கொடுக்க ஆவேசமாக க்ரீஸுக்குள் வந்தார் கெய்ல். இந்த முறையும் அஷ்வினை அழைத்து முதல் ஓவரை கொடுத்தார் தோனி. இந்த முறை கெய்லை வீழ்த்த அஷ்வினுக்கு மூன்று பந்துகள் மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆஃப் ஸ்பின் வரும் என கெய்ல் எதிர்பார்க்க ஒரு ஆர்ம் பாலை வீசி கெய்லை ஏமாற்றி எட்ஜ் ஆக்கினார் அஷ்வின். மீண்டும் ஒரு முறை அஷ்வினிடம் வீழ்ந்தார் கெய்ல். முதல் ஓவரின் மூன்றே பந்துகளில் பெங்களூருவின் மொத்த நம்பிக்கையும் சுக்கு நூறாக உடைந்து போனது. '’என்னுடைய கரியரில் நான் வீசிய மிகச்சிறந்த மூன்று பந்துகள் இதுதான்' என அஷ்வினே கூறியிருக்கிறார்.

கெய்ல் வெளியேறிய போதே தோல்வியை எதிர்கொள்ள தயாராகிவிட்டது பெங்களூரு பெவிலியன். இதன்பிறகு கோலி, டிவில்லியர்ஸ் ஒன்றும் செய்ய முடியாமல் வெளியேற எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் முடிந்து போனது இறுதிப்போட்டி. அது இறுதிப்போட்டி என தெரியாமல் சவுரப் திவாரி மட்டும் ரன்ரேட்டுக்காக கடைசி வரை நின்று ஆடிக்கொண்டிருந்தார்.

சென்னைக்கும் தோனிக்கும் தேவைப்பட்ட ஒரு சௌகரியமான வெற்றி இந்த போட்டி மூலம் சாத்தியப்பட்டது. 'அடித்து பிடித்து ப்ளே ஆஃப், இறுதிப்போட்டி என வந்தாலும் அங்கே வந்து மிகச்சரியாக சொதப்பி கோட்டை விட்டு விடுவோம்' என்கிற பெங்களூருவின் சோக வரலாறு இங்கிருந்தே தொடங்கியது.


source https://sports.vikatan.com/ipl/ipl-2011-csk-v-rcb-final-nostalgia-memories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக