Ad

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

திருவள்ளூர்: பம்ப் செட் அறையில் பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ குட்கா! - சிக்கியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். தமிழகத்தில் குட்கா மற்றும் போதை வஸ்துக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து மூட்டை மூட்டைகளாக லாரிகளில் கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமாக மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி வழியாக அதிகளவில் இந்த குட்கா பொருள்கள் கடத்தப்பட்டு வருகின்றன. கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனைச்சாவடியில் போலீஸ் கெடுபிடி அதிகளவில் இருப்பதால் குட்கா பொருள்கள் ஆந்திரத்திலிருந்து கும்மிடிப்பூண்டியின் குக்கிராமங்கள் வழியாகக் கொண்டுவரப்பட்டு சென்னையில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாத காலமாக, தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் கும்மிடிப்பூண்டியில் கண்காணிப்பைத் தீவிரப் படுத்தியிருந்தனர். அதன் காரணமாக, கும்மிடிப்பூண்டி வழியாகச் சென்னைக்கு வழக்கமாகக் கொண்டுவரப்படும் குட்கா பொருள்கள் ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளிலும், குடோன்களிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் எதிரொலியாகச் சென்னையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து போலீஸ் கெடுபிடிகள் சற்றே குறைந்துள்ளதால் கடத்தல்காரர்கள் குட்கா பொருள்களுடன் மீண்டும் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

குட்கா பொருள்கள்

இந்நிலையில், நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கிணற்று பம்ப் செட்டில் சிலர் மினி லாரியில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் 10-க்கும் மேற்பட்ட குட்கா மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டுச் செல்வதாகக் கவரப்பேட்டைக் காவல்நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுக் கவரப்பேட்டைக் காவல் உதவி ஆய்வாளர் அழகேசன் மற்றும் காவலர்கள் நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்த விளை நிலத்தில் சோதனை நடத்தினர்.

விளை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பம்ப் செட் அறையை உடைத்து உள்ளே சோதனை செய்ததில் மூட்டை மூட்டைகளாகத் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இருந்துள்ளன. காவல்துறையினர் 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளிலிருந்த 800 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸார் விளை நில உரிமையாளரை அழைத்து விசாரித்ததில், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் பிரதாப் என்பவர் பயன்படாமல் இருக்கும் தன்னுடைய பம்ப் செட்டில் மளிகை பொருள்கள் வைத்துக்கொள்வதாகக் கேட்டுக்கொண்டதால் பிரதாபிற்கு வாடகைக்கு விட்டதாகக் கூறினார்.

கைது செய்யப்பட்ட பிரதாப்

தொடர்ந்து, பஜாரில் வியாபாரம் செய்து வந்த பிரதாபை பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ குட்கா பொருள்களின் மதிப்பு 4 லட்சம் ரூபாய் என்றும், பிரதாப் வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக வாங்கி குடோன்களில் பதுக்கி வைத்துக்கொண்டு உள்ளூர் வியாபாரிகளுக்குச் சில்லறை விலையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட பிரதாப் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ள போலீஸார் குட்கா பொருள்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது. பிற பகுதிகளுக்கு எப்படி சப்ளை செய்யப்படுகிறது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/police-seized-4-lakh-rupees-worth-banned-gutka-products-near-gummidipoondi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக