Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

மகாராஷ்டிரா: மீண்டும் லாக்-டெளன் அச்சம்.. மும்பை, புனேயை காலி செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. மளிகைக் கடைகள், மருந்துக் கடை மற்றும் காய்கறிக் கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சிறு வியாபாரிகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தக்கூடும் என்ற அச்சம், வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது ஏற்பட்டது போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வடமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள்

சொந்த ஊருக்கு ரயிலில் செல்லும் வடமாநில தொழிலாளியிடம் இது குறித்து பேசுகையில், ``நாங்கள் கோரக்பூர் செல்கிறோம். கடந்த ஆண்டு ஏற்பட்டது போன்ற ஒரு நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் செல்கிறோம்” என்று தெரிவித்தார். புனேயில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களிலும் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. கடந்த ஆண்டு பொது முடக்கத்தின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆய்யிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் புனேயில் தான் அதிகப்படியான கொரோனா தொற்று இருக்கிறது. இதனால் பஸ் போக்குவரத்து கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

தடுப்பூசிக்கு பற்றாக்குறை?

`மும்பையில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், ஒரு நாள் மட்டுமே தடுப்பூசி போட தேவையான டோஸ் இருக்கிறது. தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மும்பையில் தடுப்பூசி மையங்கள் மூடப்படும்’ என்று மும்பை மேயர் கிஷோரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``மேற்கொண்டு தடுப்பூசி வந்தால் மட்டுமே தடுப்பூசி மையங்கள் செயல்படும். வெள்ளிக்கிழமையில் இருந்து மும்பையில் அனைத்து தடுப்பூசி மையங்களும் மூடப்படும். ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட தனியார் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேயும் தெரிவித்துள்ளார். முதல் முறையாக மகாராஷ்டிரா இதுபோன்ற ஒரு மோசமான நிலையை சந்தித்துள்ளது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு. பற்றாக்குறை நிலவுவதால் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்றார்.

கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசி

பல கொரோனா தடுப்பூசி மையங்களில் மருந்து கையிருப்பு இல்லை என்று நோட்டீஸ் போர்டு தொங்க விட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக வெளியான செய்திக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், ``தடுப்பூசி மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. கொரோனா தடுப்பூசி எந்த அளவுக்கு போடப்படுகிறது என்பதை பொறுத்தே தடுப்பூசி மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவிற்கு 1.06 கோடி தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல் 6-ம் தேதி வரை 90 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்னும் 15 லட்சம் டோஸ் இருக்கிறது. அப்படி இருக்கையில் தடுப்பூசி மையங்களை மூடவேண்டிய அவசியம் என்ன? புதிய ஒதுக்கீடுகள் தற்போது மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவை 9-12ம் தேதிக்குள் சென்றடையும். மகாராஷ்டிராவிற்கு 19 லட்சம் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி வழங்குவதிலும் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே குற்றம் சாட்டி இருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/lockdown-fear-migrant-workers-evacuate-mumbai-pune

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக