சென்னை மணலியைச் சேர்ந்தவர் டி.வி நடிகை ஜெனிஃபர் (24). இவர் சென்னை டி.ஜி.பி, மாநில மகளிர் ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் எனது தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரருடன் வசித்துவருகிறேன். நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்துவருகிறேன். எனக்குக் கடந்த 25.8.2019-ம் தேதியில் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வசித்துவந்த சரவணன் என்பவருடன் காதல் திருமணம் நடந்தது. எனக்கும் எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் அவரிடமிருந்து பிரிந்து எனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது நான் நடித்துவரும் சீரியலில் துணை இயக்குநராகப் பணிபுரிந்துவரும் நவீன்குமார் என்பவர் என்னைக் காதலிப்பதாகக் கூறினார். அவருக்கு என்னுடைய முதல் திருமணம் பற்றித் தெரியும். இருந்தபோதிலும் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். இது சம்பந்தமாக நானும் நவீன்குமாரும் எங்களது குடும்பத்தினரிடம் கூறினோம். எனது வீட்டில் விவாகரத்து தீர்ப்பு வந்த பிறகு திருமணம் செய்துவைப்பதாகக் கூறினார்கள். நவீன்குமாரும், அவரின் தந்தை உதயகுமாரும், அம்மா பவானி உதயகுமாரும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்கள்.
இந்தச் சமயத்தில் சீரியலிலிருந்து நவீன்குமார் நீக்கப்பட்டதால் வேலை இல்லாமல் இருந்தார். அதனால் என்னிடம் செலவுக்குப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்தார். நான் எனது வீட்டுக்குத் தெரியாமல் 1,50,000 ரூபாய் வரை கொடுத்திருக்கிறேன். மேலும் அவருக்குப் பணம் தேவைப்பட்டதால், என் அம்மாவிடம் பேசி நகைகளை அடமானம்வைத்து 1,00,000 ரூபாய் என சுமார் 2,50,000 ரூபாய் கொடுத்திருக்கிறேன். நவீன்குமாரும் அவருக்கு விரைவில் வேலை கிடைக்கும் எனவும் அதன் பின்னர் நான் அனைத்துக் கடன்களையும் கொடுத்துவிடுவேன்’ என்று கூறினார்.
புதுச்சேரிக்கு மார்ச் மாதம் 22-ம் தேதி ஷூட்டிங்குக்குச் சென்றிருந்தேன். 25.3.2021-ம் தேதி இரவு நவீன்குமார் என்னைப் பார்ப்பதற்காக நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்து, மேலும் 20,000 ரூபாய் செலவுக்கு வேண்டும் எனக் கேட்டார். அதற்கு நான் என்னிடம் பணம் இல்லை என்று கூறினேன். அதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்னை அடித்துத் துன்புறுத்தினார். மேலும் நவீன்குமார் நான் நடிகை என்பதால் என்மீது சந்தேகப்பட்டுப் பேசினார். அதனால் நான் அவரிடமிருந்து விலக ஆரம்பித்தேன். இந்தநிலையில் அவரது தாயார் பவானி உதயகுமார், என் மகன் நல்லவன் என்றும் உன்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுத்தான் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்றும் என்னைச் சமாதானம் செய்தார். அதன் பின்னர் சில நாள்கள் கழித்து நவீன்குமார் என்னிடம் நான் செய்தது தவறு எனவும், நான் உன்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றும் கூறி மன்னிப்புக் கேட்டார்.
Also Read: ‘’நான் யாரையும் ஏமாத்தல... எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆனது ஊருக்கே தெரியும்!’’ - டிவி நடிகை ஜெனிஃபர்
அதன் பிறகு நானும் நவீன்குமாரும் பேசிப் பழக ஆரம்பித்தோம். இந்தநிலையில், 14.4.2021-ல் சென்னையில் ஷூட்டிங் நடந்தபோது என்னைப் பார்க்க போரூக்கு வந்தார். என்னிடம் உடனடியாக 5,00,000 ரூபாய் பணம் வேண்டும் என்று கூறினார். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினேன். ஆனால் ஷூட்டிங் முடியும் வரை அங்கேயே இருந்தவர், இரவு 11 மணியளவில் எனது காரில் வலுகட்டாயமாக என்னை ஏற்றிக்கொண்டு சென்னை முழுவதும் சுற்றினார். அப்போது எனது ஆடையைக் கிழித்து காரிலேயே ஆபாசமாக வீடியோ எடுத்தார். கிண்டி, சென்ட்ரல், மாதவரம், வியாசர்பாடி, புரசைவாக்கம், மதுரவாயல், வானகரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் சிங்கபெருமாள் கோயில், வண்டலூர் என்று பல இடங்களுக்கு என்னை ஆபாசமாக முன் சீட்டில் உட்காரவைத்து அழைத்துச் சென்றார்.
மாதவரத்தில் எனது செல்போனைப் பிடுங்கி உடைத்துவிட்டார். சிம்கார்டை எடுத்து அவர் வைத்துக்கொண்டார். மதுரவாயல் பெட்ரோல் பங்க்கில் காருக்கு பெட்ரோல் போடும்போது கார் கண்ணாடியை இறக்கிவிட்டு அங்கு பணிபுரியும் ஒருவரின் செல்போன் மூலம் என்னுடைய தாயாருக்குத் தகவல் தெரிவிக்க முயன்றேன். ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை.
பின்னர் நவீன்குமாரின் அம்மா பவானிக்கு போன் செய்து விவரத்தைக் கூறினேன். ஸ்ரீபெரும்புதூரில்வைத்து நவீன்குமார் தன்னுடைய சட்டையை எனக்கு தந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டில் பவானி உதயகுமார், தன்னுடைய உடைகளை எனக்குக் கொடுத்தார். இதையடுத்து என்னுடைய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதால் நான் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லாமல் தவித்தேன்.
நவீன்குமாரின் நடவடிக்கை தெரிந்ததும் எனது குடும்பத்தினர் அவருக்கு என்னைத் திருமணம் செய்துவைக்க விரும்பவில்லை. அதன் பிறகு நான், என் அம்மா, அப்பா, தம்பி, தங்கை ஆகியோர் காரில் சென்றபோது மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்ஜிபாளையம் அப்பாராஜ் தெருவில்வைத்து நவீன்குமார், அவரின் பெற்றோர் மற்றும் சிலர் காரை வழிமறித்தனர். காரின் கண்ணாடியை உடைத்து எங்கள் அனைவரையும் அடித்தார்கள். என் தந்தைக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. என் தங்கையிடம் அநாகரிகமாக நடந்துகொண்டனர். அதன் பிறகு காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தேன். அதனால் மணலி போலீஸார் காவல் நிலையத்துக்கு எங்களை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
நவீன்குமாரின் தந்தை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் கண்காணிப்பாளராக இருப்பதால், மணலி போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பிறகு மணலி போலீஸார் என்னுடைய குடும்பத்தை மிரட்ட ஆரம்பித்தனர். இதையடுத்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மணலி போலீஸார், நவீன்குமார் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 18.4.2021-ல் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு எனக்குப் புகாரை வாபஸ் வாங்கும்படி பல இடங்களிலிருந்து மிரட்டல்கள் வருகின்றன. எனவே, எனக்கு நியாயம் வழங்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மணலி காவல் நிலையத்தில் டிவி நடிகை ஜெனிஃபர் கொடுத்த புகாரின் பேரில் 18.4.2021-ல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நவீன்குமார், அவரின் பெற்றோர், கார்த்திக் மற்றும் முகம் தெரியாத மூன்று நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 147, 427, 323, 506(1), பெண்கள் வன்கொடுமைச் சட்டம் 2002-ல் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
டி.வி நடிகை ஜெனிஃபர் குற்றம் சாட்டியிருக்கும் நவீன்குமார், அவரின் தந்தை உதயகுமார் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப் பல தடவை முயன்றோம். ஆனால் அவர்கள் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
source https://www.vikatan.com/news/crime/serial-actress-complaint-against-her-lover-and-police-inspector-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக