?''கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க மோடி அரசு துணைபோகிறது'' என நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் அரங்கில் கடும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது.
''இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைக் கடுமையாகத் தாக்கிக்கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான தடுப்பூசி உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இங்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு முறையாகப் போட்டிருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மாறாக, தடுப்பூசிகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததோடு, இந்திய நாட்டு மக்களின் பாதுகாப்பைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருக்கிறார் மோடி'' என கடந்த சில நாள்களுக்கு முன்பாக மிகக் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் திருமாவளவன்.
அதுமட்டுமல்லாமல் ''போதுமான கால அவகாசம் இருந்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு, பல்லாயிரணக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் காரணமாகியிருக்கும் பிரதமர் மோடி இந்தநிலைக்குத் தார்மிகப் பொறுப்பேற்று தனது பதவியைவிட்டு விலக வேண்டும்'' என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து அது தொடர்பாக நடந்த தொலைக்காட்சி விவாதமொன்றில், ''கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க மோடி அரசு துணைபோகிறது'' என்ற கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறார்.
எதன் அடிப்படை யில் மத்திய அரசின் மீது இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார் திருமாவளவன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரிடம் பேசினோம்.
''எங்கள் தலைவர் மட்டும் குற்றச்சாட்டவில்லை. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தொடர்ந்து சொல்லிவரும் ஒரு விஷயம்தான். குறிப்பாக, தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (கோவிஷீல்ட்) மற்றும் பாரத் பயோடெக் (கோவாக்ஸின்) ஆகிய நிறுவனங்கள்தான் தயாரிக்கின்றன. சீரம் இஸ்டிட்யூட்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. ஆனால், பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் தடுப்பூசி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் டெவலப் செய்யப்பட்ட ஒன்று. அதைத் தயாரிக்கும் அனுமதி பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கண்ட இரண்டையுமே தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களிலும் தயாரிக்க ஒப்பந்தம் போடலாம் . ஆனால், இந்த அரசு அதைச் செய்ய மறுக்கிறது.
உலகத்திலேயே தடுப்பூசி தயாரிப்பின் மையமாக இந்தியாதான் இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில், சென்னையிலும், குன்னூரிலும் கூட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது அது மூடப்பட்டுவிட்டது. அவர் கட்சிக்காரர் ஒருவருக்கு தனியார் தடுப்பூசி நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்ததாக அவர்மீது குற்றச்சாட்டுகள் உண்டு. உச்ச நீதிமன்றத்தில் அது தொடர்பாக சுக்லா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் அவசர அவசரமாக இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் (ஹெச்.பி.எல்) தொடங்கப்பட்டது. 100 ஏக்கர் பரப்பளவில், 350 கோடி ரூபாய் செலவில் தடுப்பூசி தயாரிப்புக்காகவே அந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் தற்போது செயல்படாமல் இருக்கிறது. 200 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். அவர்களுக்குச் சம்பளம்கூட கொடுக்கப்படாமல் அந்த நிறுவனம் மூடும் நிலையில் இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் போதிய கட்டமைப்பு இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் ஏன் தனியார் துறையிடம் மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் அனுமதியைக் கொடுக்கிறார்கள்... உலகம் முழுவதும் இலவசமாகக் கொடுக்கப்பட்டும் தடுப்பூசி இங்கு மாநில, மத்திய அரசுகளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டாலும் தனியாருக்கு விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தனியார் நிறுவனங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதை வாங்கும் தனியார் மருத்துவமனைகள் அதை இன்னும் அதிக லாபத்துக்கு விற்பனை செய்கின்றன. இதன் காரணமாக, அரசின் மூலம் போடப்படும் தடுப்பூசிகள் சப்ளை மிகவும் குறைவாக இருக்கிறது. தேவைப்படுபவர்கள் தனியாரிடம் சென்று போட்டுக்கொள்ளலாம் என்றால் பணமில்லாத ஏழை மக்கள் என்ன செய்வார்கள்?
உலகில் பல நாடுகள் தங்களின் மக்கள்தொகையில் தடுப்பூசி போடும் விகிதத்தில் நாற்பது சதவிகிதத்தைத் தாண்டிவிட்டன. ஆனால், நம் நாட்டில் இதுவரை பத்து சதவிகித அளவுக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. உதாரணமாக, விழுப்புரம் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், அங்குள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் மூலமாக ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் தடுப்பூசிகள் செலுத்த முடியும். இந்த மாவட்டத்தில், நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,80,000 பேர் இருக்கிறார்கள். பதினைந்து முதல் இருபது நாள்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிடலாம். ஆனால், தடுப்பூசி சப்ளை மிகக் குறைவாக இருக்கிறது. ஒரு வாரத்துக்கே ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் தடுப்பூசிகள்தான் சப்ளை செய்யப்படுகின்றன. தடுப்பூசி போடுவதில் சுணக்கம் ஏற்படுவதற்கு மக்கள் போட்டுக்கொள்ளாமல் இருப்பதுதான் காரணம் என திசைதிருப்புகிறார்கள். ஆனால், போதிய அளவு சப்ளை இல்லை என்பதே உண்மையான காரணம்.
கொரோனாவைத் தடுப்பதில் தடுப்பூசிதான் பயனுள்ளதாக இருக்கிறது என்று உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களில் மட்டுமே கொடுத்திருப்பதால் இன்னும் பல அபாயங்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் விலையை இன்னும் அதிகப்படுத்துவேன் என சீரம் இன்ஸ்டிட்யூட்டின் சி.இ.ஓ அடேர் பூனாவாலா கூறியுள்ளார். அடுத்த வருடம் விலை இன்னமும் அதிகரித்துவிடும். உலக சுகாதார நிறுவனம் ஆஸ்ட்ரா ஜெனிக்காவுடன் (சீரம்), 50 கோடி தடுப்பூசிகள் வரைக்கும் லாபமே இல்லாமல் தயாரித்துக் கொடுக்கிறோம் என ஓப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்தியாவிலும் இந்த நிறுவனத்துக்கு எமெர்ஜென்சி லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அது கொடுக்கப்பட்டதன் அடிப்படையே லாப நோக்கில்லாமல் மக்கள் நலனை அடிப்படையாகவைத்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், தற்போது மாநில அரசுக்கு 400 ரூபாய்க்கும் தனியாருக்கு 600 ரூபாய்க்கும் என அதிக லாபத்தில் தடுப்பூசிகளை விற்பனை செய்துவருகிறார்கள். இது மேற்கண்ட இரண்டு ஒப்பந்தங்களையும் மீறுவதாகும். ஆனால், இதெல்லாம் தெரிந்தும் மத்திய அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? அனைவருக்கும் வெறும் 150 ரூபாய்க்குக் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு சொல்ல முடியும். ஆனால், சொல்வதில்லை.
மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதைவிட தனியார் முதலாளிகள் சம்பாதிக்கத் தரகு வேலை செய்வதிலேயே இந்த அரசு ஆர்வமாகச் செயல்படுகிறது. அதுமட்டுமல்ல, மக்களை முகக்கவசம் அணிய, சானிட்டைஸர் பயன்படுத்த வலியுறுத்துகிறோம். முன்களப் பணியாளர்களை பி.பி.இ கிட்களைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறோம். ஆனால், இந்த பொருள்களின் மீதெல்லாம் ஜி.எஸ்.டி போடப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகளின் மீதுகூட ஜி.எஸ்.டி போடப்படுகிறது. இந்த மருத்துவ உபகரணங்களை, மருந்துளைத் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள்தான். ஜி.எஸ்.டி போடாமல், அவர்களை விலையைக் குறைத்து விற்பனை செய்ய வலியுறுத்துவதை விட்டுவிட்டு, நீங்கள் எவ்வளவு விலைவைத்து வேண்டுமானால் விற்றுக்கொள்ளுங்கள், நாங்கள் அதில் ஜி.எஸ்,டி போட்டுக்கொள்கிறோம் என மக்களின் மீது இன்னும் சுமைகளைத் திணிப்பதால்தான், மரணத்திலும் மத்திய அரசு வியாபாரம் செய்கிறது எனச் சுட்டிக்காட்டுகிறோம். தடுப்பூசிகளை பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாகத் தயாரித்து மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும். முகக்கவசம், சானிட்டைஸர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களுக்கும் உயிர் காக்கும் மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி விலக்களித்து எவ்வளவு குறைந்த விலைக்கு விற்பனை செய்யமுடியுமோ அவ்வளவு குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்'' என்கிறார் அவர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமல்ல, ''செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை உடனடியாக செயல்படுத்த வேண்டும்'' என பிரதமருக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம்,
''இந்த நாட்டில் பொதுத்துறைகளே தேவையில்லை என்பதுதான் எங்களின் கொள்கை என்று நிதியமைச்சரே மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அது பா.ஜ.க-வின் கொள்கை மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்-ஸின் கொள்கையும் அதுதான். பொது சுகாதாரத்தில்கூட பொதுத்துறை வேண்டாம் என்கிறார்கள். தனியார்துறைகளிடம் விட்டபடியால் அவர்கள் கொள்ளை நோயைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கிறார்கள். 'நடக்கட்டும்' என ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அதற்காக, தனியார் துறைகளே வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களும் இருந்தால்தான், தனியார் துறையினரைக் கட்டுப்படுத்த முடியும். நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது தடுப்பூசிகள் தயாரிக்க தயாராக இருக்கின்றன. அதிலும், செங்கல்பட்டிலுள்ள ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்துக்கு 150 கோடி ஒதுக்கினால் போதும் தயாரிப்பு வேலைகளைத் தொடங்கிவிடலாம் என எங்கள் எம்.பி தொடர்ந்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். எங்கள் கட்சியும் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். தற்போது, தடுப்பூசி தயாரிப்பில், இரண்டு தனியார் நிறுவனங்களும் வைப்பதுதான் சட்டம். அவர்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம். அதனால்தான், சீரம் நிறுவனம் (கோவிஷீல்டு) 150 ரூபாயிலிருந்து 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கிறது. அவர்கள் கொள்ளையடிக்க மத்திய அரசு அனுமதிக்கிறது. அதற்குக் காரணம், தனியார் நிறுவனங்களைச் சம்பாதிக்கவிடுவதில் பா.ஜ.க-வுக்கு ஆதாயம் இருக்கிறது.
சீரம் நிறுவனம் பா.ஜ.க-வுக்கு எவ்வளவு நிதி நன்கொடையாகக் கொடுத்திருக்கிறது என்கிற விவரங்களையும் எங்கள் கட்சி எம்.பி சு.வெங்கடசன் வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, ஒருபுறம் ஆக்ஸிஜன் தட்டுப்பாடே இல்லை என்று பா.ஜ.க-வினர் விவாதங்களில் பேசிவருகிறார்கள். மறுபுறம், அதைத் தயாரிக்க மீண்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்கிறார்கள். 'தொழிற்சாலை நோக்கத்துக்கான பிராணவாயு ஆலைகளை மருத்துவ நோக்கத்துக்கான பிராணவாயு ஆலைகளாக சட்டென்று மாற்ற முடியும். உடனடியாக மாற்றுங்கள்' என நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. ஆனால், இவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழக பா.ஜ.க-வினர், அதற்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியென்றால் இவர்களின் நோக்கம் என்ன? ஸ்டெர்லைட் ஆலைக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு. ஓரிரு தனியார் நிறுவன முதலாளிகளுக்காக நாட்டு மக்களின் உயிரோடு விளையாடத் தயாராகிவிட்டார்கள் என்பதே எங்களின் கருத்து'' என்கிறார் காட்டமாக.
``மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் தமிழகத்தில் தடுப்பூசி நிறுவனங்கள் மூடப்பட்டன'' என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ம.க தரப்பில் பேசினோம்,
''இது குறித்து பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டோம். அந்த நிறுவனங்கள் 'சிக்' இண்டஸ்ட்ரியாக செயல்பட முடியாமல் இருந்தன. நவீனப்படுத்தப்படாமல் இருந்ததாலேயே மூடப்பட்டன. வேறென்ன காரணம் இருக்கப்போகிறது...108 போன்ற பல நல திட்டங்களைக் கொண்டு வந்து மக்களுக்காகச் செயல்பட்டவர், தனியாரின் நலனுக்காகச் செயல்பட்டார் என்கிற வகையில் குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது அபாண்டமான குற்றச்சாட்டு தவிர வேறொன்றும் இல்லை'' என்கிறார்கள்.
Also Read: கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; மிரளவைக்கும் விலை ஏற்றம் - உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைக்குமா?
அடுத்ததாக, மத்திய அரசின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,
''மக்களிடையே தொடர்ந்து ஒரு பதற்றத்தை உருவாக்கி, அவநம்பிக்கையை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனைந்துகொண்டிருக்கின்றன என்பதைத்தான் இது வெளிப்படையாகக் காட்டுகிறது. மரணங்களில் அரசியல் செய்வதும் எதையெடுத்தாலும் குறை கண்டுபிடித்தும் மக்களுக்கு அரசின் மீதிருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதற்கான நடவடிக்கைகளே இது போன்ற கருத்துகளும் அறிக்கைகளும். மக்கள் இந்த அறிக்கைகளைப் பொருட்படுத்தாமல், அரசுக்கு ஒத்துழைத்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது மிக அவசியம். தனியார் பங்களிப்பு இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். தடுப்பூசி தயாரிப்பு என்பது மிகப்பெரிய பிராசஸ். சீரம், பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள்தான் அதைக் கண்டுபிடித்தன. அதைத்தான் நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். தடுப்பூசிக்கான மூலப்பொருள்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்துதான் வருகின்றது. அதனால், வேண்டுமென்றே தனியார், பொதுத்துறை என்று பேசுவதே தவறு.
தடுப்பூசி தயாரிப்பு குறித்த அடிப்படைப் புரிதல் இருப்பவர்கள் செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கலாம் என்று பேச மாட்டார்கள். காரணம், தடுப்பூசி தயாரிக்க நீண்ட அனுபவம் தேவை. தவிர, அந்தந்த நிறுவனங்கள் கண்டுபிடித்திருப்பதால், அவை அவர்களுக்குத்தான் சொந்தமானவை. செங்கல்பட்டைப் பொறுத்தவரை, தற்போது அங்கு எந்தப் பணியும் நடைபெறவில்லை. 2012-ல் மற்ற தடுப்பூசிகளுக்காக ஒருங்கிணைந்த ஒரு வளாகமாக கொண்டுவருவதற்கான முயற்சிதான் எடுக்கப்பட்டது. இன்னும் அது முற்றுப்பெறவில்லை. அதனால்தான் இப்படிப் பேசுவதே மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை உருவாக்கத்தான் என உறுதியாகச் சொல்கிறோம். தனியார் நிறுவனங்களிடம் பா.ஜ.க நிதி பெறுகிறது போன்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் நாங்கள் புறந்தள்ளுகிறோம்'' என்கிறார் அவர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/corona-vaccine-modi-government-aide-to-rob-private-companies-is-thirumavalavans-accusation-correct
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக