'அரசு குளத்தில் தனிநபர் ஒருவர், எந்தவித முன் அனுமதியும் வாங்காமல், கடந்த ஆறு மாதங்களாக முறைகேடாக ஆயில் மோட்டாரைவைத்து தண்ணீர் இறைத்திருக்கிறார். இதில், அந்த மோட்டாரிலிருந்து கசிந்த ஆயில் குளத்து நீரில் கலந்ததால், ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதற்குக் காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்திலுள்ள பொருந்தலூர் ஊராட்சியில் இருக்கிறது, சின்னரெட்டிப்பட்டி. இங்கே உள்ள ஆவுடையார் கோயில் பின்புறம், பொருந்தலூர் கிராமத்துக்குச் சொந்தமான ஆவி குளம் உள்ளது. இந்தப் பகுதியே மிகவும் வறட்சியான பகுதி. மழைநீரால் நிரம்பியிருக்கும் இந்த ஆவி குளத்து நீரைத்தான், இங்குள்ளவர்கள் கால்நடைகளை குளிப்பாட்டவும், கால்நடைகளுக்குத் தண்ணீர் காட்டவும் பயன்படுத்திவந்தனர். அதோடு, ஊராட்சி சார்பில் இந்தக் குளத்தில் மீன்களும் வளர்க்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், இந்த ஆவி குளத்தில், குமரேசன் என்பவர் ஆயில் மோட்டாரைக் கொண்டு, கடந்த ஆறு மாத காலமாக தனது 15 ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சிவந்ததாகச் சொல்லப்படுகிறது.
Also Read: முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் காலமானார்! - இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்
இதற்காக, யாரிடமும் முறையான அனுமதி பெறாமல், மக்களின் எதிர்ப்பை மீறி அவர் குளத்து நீரை மோட்டார் மூலம் எடுத்ததாகச் சொல்கிறார்கள். இந்தநிலையில்தான், அந்த மோட்டார் ஆயில் குளத்து நீரில் கலந்து, ஆயிரக்கணக்கான மீன்கள், தவளை, ஆமை உள்ளிட்ட உயிரினங்களை இறக்கவைத்திருப்பதாக, சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.
இது குறித்து, நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பழனிச்சாமி, "ஆயில் மோட்டாரை வைத்துக்கொண்டு அரசுக்கு சொந்தமான குளத்தில், குமரேசன் என்பவர் தன்னுடைய சொந்த விவசாய நிலத்துக்கு எந்த ஒரு அரசு அனுமதி பெறாமலும் தண்ணீரை உறிஞ்சிப் பயன்படுத்தியிருக்கிறார். தற்போது, அந்த ஆயில் மோட்டரிலிருந்து கசிவு ஏற்பட்டு குளத்திலிருந்த சுமார் 10,000 க்கும் அதிகமான மீன்கள், தவளை, நண்டு மற்றும் ஆமை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து, கடந்த மூன்று நாள்களாக நீர்மேல் மிதந்து கொண்டிருக்கின்றன. இதனால், இங்கு தண்ணீர் அருந்த வரும் வன விலங்குகளுக்கும், கால்நடைகளுக்கும், குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பாதகத்தைச் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பி.டி.ஓ மற்றும் குளித்தலை துணை ஆட்சியர் ஆகியோர்களிடம் புகார் அளித்தோம். 'உடனே விசாரித்து, சம்பந்தபட்டவரின் மோட்டாரை சீஸ் பண்ணுகிறோம். அவர்மீது நடவடிக்கை எடுக்கிறோம். அதேபோல், செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்துகிறோம்'னு சொன்னாங்க. ஆனால், கிளார்க் மட்டும் வந்து குளத்தைப் பார்வையிட்டதோடு, போய்விட்டார். குமரேசன் தனது மோட்டாரை எடுத்துக்கொண்டு போய்விட்டார். சொன்னபடி, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் குளத்து நீர் இப்படி ஆனதால், கால்நடைகளுக்கு அருந்துவதற்கு தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மீன்கள் செத்து மிதப்பதால், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டது. மறுபடியும், நடப்பதைப் பற்றி சப் கலெக்டர்கிட்ட சொன்னேன். அவர் மறுபடியும் பி.டி.ஓ குமரரேசனிடம் கடுமையாகப் பேச, அதன்பிறகே குளத்திலுள்ள இறந்த மீன்களை அப்புறப்படுத்தியிருக்காங்க. பிளீச்சிங் பவுடரையும் குளத்தில் தூவியிருக்காங்க. ஆனா, குமரேசன் பயன்படுத்திய மோட்டாரை சப் கலெக்டர் பறிமுதல் பண்ணச் சொல்லியும், 'மோட்டாரைத் தேடினோம். எங்கும் காணவில்லை சார்'னு பொய்யா சொல்லி, குமரேசனுக்கு சாதகமாக நடந்துக்குறாங்க. நாங்க தொடர்ந்து வலியுறுத்தியதால், குமரேசனுக்கு வெறும் ரூ.2,000 மட்டும் அபராதம் விதிச்சுருக்காங்க. ஆனால், அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும். அவர் பயன்படுத்திய ஆயில் மோட்டாரைப் பறிமுதல் பண்ணணும். அப்போதான், அடுத்து இதுபோல் செய்ய மாட்டார். இல்லையென்றால், மறுபடியும் தண்ணீய் பாய்ச்ச ஆரம்பிச்சிருவார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை" என்றார் ஆக்ரோஷமாக!.
குமரேசனிடம் பேச முயன்றோம். நம்மிடம் அவர் பேச மறுத்துவிட்டார். குமரேசன் தரப்பில் பேசியவர்கள், ``ஒண்ணுமில்லாத விஷயத்தைச் சிலர் தேவையில்லாமல் பூதாகரமாக்குகிறார்கள். இங்கே கடும் வெயில் அடிக்கிறது. அதில் மீன்கள் இறந்திருக்கின்றன. குமரேசன் தண்ணீர் பாய்ச்சியதால், இறக்கவில்லை. உரிய அனுமதியோடு சில நாள்கள்தான் அவர் தண்ணீர் பாய்ச்சினார்.
அவர்கள் சொல்வதுபோல், மாதக்கணக்கிலெல்லாம் தண்ணீர் பாய்ச்சவில்லை. இது தெரிந்ததும், அதிகாரிகள் குமரேசன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இருந்தாலும், அவர்கள் விதித்த ரூ.2,000 அபராதத்தை உடனே கட்டிவிட்டோம்" என்றார்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/social-activists-pettion-to-sub-collector-regarding-fish-death-and-illegal-motor
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக