Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

பருவம் தவறிய மழை, பூச்சித் தாக்குதல், பாதித்த விளைச்சல்... இந்தாண்டு மாம்பழம் விலை உயருமா?

`பழங்களின் ராஜா’ என்றழைக்கப்படும் மாம்பழ உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவில் 40 சதவிகித உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது. மா விளைச்சல் இந்த ஆண்டு 4.21 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த (2019-20) பயிர் ஆண்டில் 20.26 மில்லியன் டன் என்ற அளவில் இருந்த விளைச்சல் இந்த ஆண்டு (2020-21) 21.12 மில்லியன் டன் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதிகப்படியான மழை, எதிர்பாராத மழை என்று இந்த முறை தமிழகத்தில் மழையும் நன்றாகப் பெய்திருக்கிறது. எனவே விளைச்சல் எப்படி இருக்கும் என்று மா விளைச்சலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் பேசினோம்.

மாங்காய்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மா விவசாயி உதய் சிங் பேசியபோது, ``இந்த முறை விளைச்சல் குறைவுதான். வழக்கமா தத்துப் பூச்சி, பூஞ்சணத் தாக்குதல்தான் இருக்கும். அதை எளிதா எதிர்கொள்வோம். உலக அளவில் மாறி வரும் பருவநிலை மாற்றம் மா விவசாயத்தையும் பாதித்து வருகிறது. இந்த முறை ஓரளவுக்கு நல்ல மழை கிடைத்தது. ஆனா, அது ஜனவரி, பிப்ரவரி மாசத்துல பெய்தது. அது மா விளைச்சலுக்கு உதவியா அமையவில்லை.

ஒரு ஏக்கருக்கு 4 டன் கிடைத்த இடத்தில் இந்த முறை 2 டன்தான் கிடைக்கும்னு நம்புறேன். இந்த முறை பூ பூத்தபோதே வால் பேன், ஜங்கு புழு தாக்குதல் பெரிய அளவில் இருந்துச்சு. அதோட தாக்குதலால பூக்களெல்லாம் நிறைய கருகி விழுந்துடுச்சு. இது இங்க மட்டுமல்ல. கர்நாடக மாநிலத்திலயும் நிகழ்ந்திருக்கு. எனவே, இந்த முறை விளைச்சல் குறைவாத்தான் இருக்கும்” என்றார்.

உதய் சிங்

அவரைத் தொடர்ந்து பேசிய சந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மா விவசாயி சாந்தகுமார், ``மா சாகுபடியில இடைப்பருவம் பெரிய அளவுல கை கொடுக்கல. இந்த முறை மார்ச் மாசத்துல இரவு நேரங்கள்ல பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அதேசமயம் பகல் நேரத்துல வெயிலும் அதிகமா இருந்தது. இதனால நோய்த்தாக்குதல் அதிகமாகி புழுக்களெல்லாம் பூக்களையே சாப்பிட்டுடுச்சு. அதனால, அதிகமா பூத்த பூக்கள் நிலைக்கல. இன்னொன்று பைரித்திரினாய்டு, நியோ நிக்கினாய்டு போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தெளிச்சிட்டு வர்றதுனால, நோய்களெல்லாம் பூச்சிக்கொல்லிக்கு இப்போ கட்டுப்படுறதில்ல.

இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகள்ல கார்பன், சல்பர் அதிகம். அதேபோன்று மாந்தோட்டத்த சுத்தமா வெச்சுக்கணுங்கிற பேர்ல மாந்தோட்டத்துக்குள்ள இருந்த வேப்ப மரம், புளிய மரம், வாகை மரமெல்லாம் காணாம போயிடுச்சு. அதனால நன்மை செய்ற பூச்சிகள் வர்றதில்ல. அதேபோல மாந்தோட்டத்துல ஊடுபயிரா பயறு வகைகள சாகுபடி செய்வாங்க. அது மண்வளத்த கூட்டும். அந்த கலாசாரமும் குறைஞ்சிட்டு வருது. அதனால மாமரங்கள் எளிதா பூச்சித்தாக்குதலுக்கு இலக்காகுது. மாமரங்கள்ல தேனீக்கள பார்க்கிறதே பெரிய விஷயமா இருக்கு. அதனால அயல் மகரந்த சேர்க்கை சரிவர நடக்கிறதில்ல. இதுவும் விளைச்சல் குறைஞ்சுட்டு வர்றதுக்கு ஒரு காரணமா இருக்கு.

சாந்தகுமார்

இன்னைக்குத் தேதியில பெரிய விளைச்சல் இல்லைனாலும், ஓரளவுக்கு போன வருஷத்தோட விளைச்சல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இதோடு அடுத்து பெய்ற கோடைமழை, அடிக்கிற காத்து ஏற்படுத்துற சேதாரம் வேற இருக்கு. பொதுவா விளைச்சல் குறைஞ்சா விலை அதிகரிக்கும். அதனால, மாம்பழ வியாபாரம் இந்த முறை நல்லபடியாகவே இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ்பாபு, ``இந்த வருஷம் மா விளைச்சல் குறைவாகத்தான் இருக்கு. டிசம்பர் மாசம் நல்லா பூ பூத்தது. பொங்கலுக்குப் பிறகு பெய்த மழையால பூவெல்லாம் நிறைய கொட்டிடுச்சு. கல்தார் வெச்சு மா விளைச்சல் பெருக்கினாலும் இந்த முறை விளைச்சல் குறைவாத்தான் இருக்குது. எப்போதும் செந்தூரா மா ரகம்தான் முதல்ல அறுவடைக்கு வரும். அடுத்து பெங்களூரா (தோத்தாபுரி), அல்போன்சா வரும். இந்த மா ரகங்களோட விளைச்சல் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. அதனால மாம்பழக்கூழ் தயாரிக்கிற கம்பெனிகளுக்கு இந்த வருஷம் டிமாண்டு அதிகரிக்கும்.

ரமேஷ் பாபு

கடைசியா அறுவடைக்கு வர்ற நீலம் ஓரளவுக்கு செட்டாயிருக்கு. அதனால, நீலம் விளைச்சல் நல்லா இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாமரங்கள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. இந்த முறை மழையும், மார்ச் மாத பனியும் அதைப் பாதிச்சிருக்கு. இயற்கையான காலநிலைதான் மாவினுடைய விளைச்சலை நிர்ணயிக்கிறது. மா சாகுபடி பெரும்பாலும் மானாவாரியாகத்தான் சாகுபடி செய்யப்படுகிறது. அதோட விளைச்சல் இயற்கையின் கையில்தான் இருக்கு” என்றார்.

செங்கல்பட்டு மாவட்டம், அரியனூரில் இயற்கை விவசாய முறையில் மா சாகுபடி செய்து வரும் அரியனூர் ஜெயச்சந்திரனிடம் பேசியபோது, ``மா சாகுபடியைப் பொறுத்தவரை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை விளைச்சல் நன்றாக இருக்கும். கடந்த முறை விளைச்சல் குறைவாக இருந்தது. இந்த முறை நன்றாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மார்கழி, தை மாசம் பெய்த மழையால எங்கப்பகுதில இப்போதான் பூக்க ஆரம்பிச்சிருக்கு. அந்தப் பூக்களும் அதிக அளவுல பூக்கல.

ஜெயச்சந்திரன்

மா விவசாயத்துக்கு வெப்பம் கொஞ்சம் அதிகம் தேவை. அந்த வெப்பத்தை அதிகரிக்கிறதுக்குத்தான் ரசாயன விவசாயிகள் சல்பர் அடிப்பாங்க. இந்த முறை சல்பர் அடித்தும் பயனில்லை. பருவ நிலை மாற்றம் பெரிய பிரச்னையா இருக்கு. இது மா விவசாயத்துக்கும் மட்டும் இல்லை. மற்ற விவசாயத்துக்கும் இதுதான் நிலைமை. இந்த முறை பருவம் முடிந்தும் மழை பெய்ததுதான் பிரச்னை” என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/mango-farmers-say-how-their-cultivation-affected-by-irregular-rains-and-pests

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக