Ad

புதன், 7 ஏப்ரல், 2021

புதுக்கோட்டை: `வெளியே கிடந்த பேப்பர் சீல்; கிளம்பிய சர்ச்சை’ -சீல் வைக்கப்பட்ட அறை மீண்டும் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.6ம் தேதி 6 சட்டமன்றத் தொகுதிகளில் 1,902 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 7மணி வரையிலும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இந்த நிலையில், வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரிக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டன. இவை மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலரான உமா மகேஸ்வரி தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அறைகளுக்குள் வைக்கப்பட்டு அறைகள் ஒவ்வொன்றாகச் சீல் வைக்கப்பட்டன.

140 காவலர்களுடன் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் விராலிமலை தொகுதிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் உள்ள 27வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட முகவர்கள் கையெழுத்துடன் கூடிய பேப்பர் சீல் ஒன்று வாக்கு எண்ணும் மைத்திற்கு வெளியே கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விராலிமலை தொகுதி தி.மு.க மற்றும் அ.ம.மு.க, ம. நீ.ம வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதா என்று சந்தேகித்து அந்த பேப்பர் சீலை எடுத்து வந்து, இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான உமா மகேஸ்வரியிடம் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே புகார் தெரிவித்தவர்களிடம் இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர், "வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வாக்குச்சாவடியில் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும்.

அப்போது வி.வி.பேட் கருவியிலிருந்து சேகரிக்கப்படும் வாக்குச்சீட்டுகளை கவருக்குள் வைத்து, அதன் மீது முகவர்கள் கையெழுத்துடன் கூடிய பேப்பர் சுற்றப்பட்டு சீல் வைக்கப்படும். அந்த பேப்பர் சீல் தவறுதலாகக் கீழே விழுந்து இங்குக் கிடந்துள்ளது. இதற்கும் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் உடைக்காமல் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார். ஆனாலும், விராலிமலை தி.மு.க வேட்பாளர் பழனியப்பன் மற்றும் அ.ம.மு.க உள்ளிட்ட மற்றக் கட்சியினர் இதனை ஏற்க மறுத்து, பாதுகாப்பு அறையைத் திறந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி வாக்குப்பதிவு எண்ணும் மைய வளாகத்தில் அமர்ந்து விட்டனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்டத் தேர்தல் பொதுப் பார்வையாளர் ரகு, விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணி ஆகியோர் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில், அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட அறையின் சீலை உடைத்து சந்தேகத்துக்குப்படுத்தப்பட்ட 27வது வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த வாக்குப்பதிவு இயந்திரம் சீல் பிரிக்காமல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, புகார் தெரிவித்த தரப்பினர் சமாதானம் அடைந்தனர்.

ஆனாலும், விராலிமலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி என்பதால், ஏதேனும் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறிய தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், "வாக்கு எண்ணுவதற்கு முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விராலிமலை தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பேப்பர் சீல் ஒன்று, வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/election/in-pudukkottai-the-strong-room-was-open-after-the-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக