Ad

புதன், 7 ஏப்ரல், 2021

`உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையாமல் இருக்கணுமா?' - இந்த 5 தவறுகளைச் செய்யாதீங்க!

கடன் கேட்டு வங்கியை யார் அணுகினாலும், வங்கிகள் முதலில் பார்ப்பது கடன் கேட்டு வந்திருப்பவருடைய கிரெடிட் ஸ்கோர் (CIBIL Score) எவ்வளவு என்பதைத்தான். அதன்பிறகுதான், அவர் சம்பளதாரரா, தொழில்முனைவோரா, மாத வருமானம் எவ்வளவு, என்பதை எல்லாம் பார்க்கும்.

ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் 300-900 என்கிற அளவில் இருக்கும். ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் 750-க்குமேல் இருந்தால், அவருக்கு சுலபமாகக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 750-க்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில், கடன் தருவதற்கு வங்கிகள் யோசிக்கும். அதனால், கிரிக்கெட் விளையாட்டில் ஸ்கோர் எவ்வளவு என்பதைக் கவனிப்பதுபோல, உங்களுடைய சிபில் ஸ்கோர் எவ்வளவு என்பதை அவ்வப்போது கவனிப்பது அவசியம்.

இன்றைய நிலையில், வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பலர் தவறான அணுகுமுறையைக் கையாள்கிறார்கள். இதனால் அவர்களின் கிரெடிட் ஸ்கோர் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

Also Read: `யார் வீட்டுக்கடன் வாங்கலாம் / வாங்கக்கூடாது?' ஒரு சுய பரிசோதனை #HomeLoan

சிபில் ஸ்கோர் அடிப்படையில் வீட்டுக்கடன் வட்டி!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வீட்டுக் கடனுக்கான வட்டியைப் பெருமளவு குறைத்திருக்கிறது. மேலும், சில சலுகைகளையும் அறிவித்திருக்கிறது. ஆனால், அந்தச் சலுகைகள் வங்கி வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரைப் பொருத்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அதாவது, வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் 700 - 750 வரை இருந்தால், வீட்டுக் கடனுக்கான வட்டி 6.9% எனவும், 750 - 800-வரை இருந்தால் 6.8% எனவும் சொல்லி இருக்கிறது. இவை அனைத்தும் 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கு மட்டுமே.

இப்படி பல வங்கிகள், வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்களை வழங்குகின்றன. அதனால், உங்களுடைய சிபில் ஸ்கோரைக் குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

சிபில் ஸ்கோர் குறையாமல் இருக்க, கீழே சொல்லப்பட்டிருக்கும் ஐந்து விஷயங்களை நீங்கள் கட்டாயம் செய்யக் கூடாது.

1. உரிய காலத்தில் இ.எம்.ஐ செலுத்தாமல் இருப்பது

வீட்டுக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு கடன் என எதுவாக இருந்தாலும், அதற்கான தவணைத் தொகையை மாதம்தோறும் திருப்பிச் செலுத்துவது மிக முக்கியம். பெரும்பாலானவர்கள், கடன் வாங்கிய புதிதில் சரியாகச் செலுத்திவிட்டு, நாளாக நாளாக மாதத் தவணைத்தொகை செலுத்துவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். சில மாதங்கள் கழித்து, கடனுக்கான தவணைத் தொகையைக் கட்டாமலேயே தவிர்த்துவிடுவார்கள். இதனால் ஒருவரது கிரெடிட் ஸ்கோர் பெரிதும் பாதிப்படையும்.

கடன்

வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான ஒரு தவணைத்தொகையைத் தள்ளிப்போட்டாலோ, கட்டாமல் விட்டாலோ, அது கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி இருக்கும்போது, கடனுக்கான இ.எம்.ஐ தொகையை மாதக்கணக்கில் கட்டாமல்விடுவது பிரச்னைக்குத்தான் வழிவகுக்கும்.

நீங்கள் ஒரே ஒரு மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றால்கூட உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர குறைந்தபட்சம் 6 முதல் 8 மாதம் வரை ஆகும்.

2. கிரெடிட் லிமிட்டை அதிகபட்சம் பயன்படுத்துவது

கிரெடிட் கார்டுமூலம் எடுக்கப்படும் கடன் வாங்குவதற்கான வரம்பை மீறி, கடன் வாங்கினாலும் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். ஒருவருடைய கிரெடிட் கார்டு கடன் வரம்பு ஒரு லட்சம் ரூபாய் எனக்கொண்டால், அதிலிருந்து 40,000 ரூபாயைத்தான் அதிகபட்சமாகக் கடனாக எடுத்து பயன்படுத்த வேண்டும். இதை கிரெடிட் கார்டு கொடுக்கும்போதே தெளிவாகச் சொல்வார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், கிரெடிட் லிமிட்டைத் தாண்டி பயன்படுத்தும் பழக்கம்தான் அதிகமாக இருக்கிறது. இதனால் கிரெடிட் ஸ்கோர் நிச்சயமாகப் பாதிக்கப்படும்.

கிரெடிட் கார்டு

கிரெடிட் லிமிட் உங்களுக்கு அதிகமாக இருக்க வேண்டுமென்றால், கிரெடிட் கார்டு பில் தொகையை மாதம்தோறும் சரியாகச் செலுத்தும்போது ஆட்டோமேட்டிக்காக கிரெடிட் லிமிட் உயரும். அதேசமயம், கிரெடிட் கார்டு லிமிட்டை அடிக்கடி உயர்த்துவதாலும் கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

3. கடன் கட்டாமலே இருந்துவிடுவது!

வாங்கிய கடனைத் திரும்பக் கட்டாமல் இருந்துவிடுவதால் (Default), நம்முடைய கிரெடிட் ஸ்கோர் நிச்சயம் பாதிப்படையும். ஒரு கடனுக்கான இ.எம்.ஐ தொகையைக் குறைந்தபட்சம் மூன்று மாதம் கட்டாமல்விடும்போது, அந்தக் கடன் தானாகவே டிஃபால்ட் என்கிற நிலைக்குச் சென்றுவிடும். அதை மீண்டும் மறுசீரமைப்பு செய்தால்தான், நடைமுறைக்கு வரும்.

கடன்

Also Read: நல்ல கடன் Vs மோசமான கடன் - அடையாளம் காணும் வழிகள்..!

ஒருவர் வாங்கிய கடனைத் திரும்பக் கட்டாமல் விட்டால், அவருடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் பதிவாகும். அப்படிப் பதிவானால், அடுத்தடுத்தக் கடன்களை வாங்குவதில் சிக்கல் உருவாகும். வங்கிக் கடனானது திரும்பக் கட்டப்படாமல் இருந்தால், உடனடியாக முழுப் பணத்தையும் கட்டி அடைத்து விடுவதுதான் நல்லது. கடனை அடைத்த பிறகு `நோ டியூ சான்றிதழை’ அவசியம் கேட்டு வாங்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பெயரில் வாங்கப்பட்ட கடன், திரும்பக் கட்டப்படாமல் இருப்பதுபோல காட்டிக்கொண்டே இருக்கும்.

4. கிரெடிட் ஹிஸ்டரி இல்லாமல் இருப்பது!

ஒருவர் கடன் வாங்கி, அதை முறையாகச் செலுத்தும்போதுதான் அவரது கிரெடிட் ஸ்கோர் உயரும். அந்த கிரெடிட் ஹிஸ்டரியைப் பார்த்துத்தான் அவருக்குக் கடன் தரலாமா, அப்படித் தந்தால் முறையாகத் திருப்பிச் செலுத்துவாரா என்று பரிசீலிக்க முடியும்.

ஒருவர் இதுவரை எந்தக் கடனையும் வாங்கவில்லை; அதனால் அவருக்கு கிரெடிட் ஸ்கோரே இல்லை என்றாலும், வங்கிகள் கடன் தர வாய்ப்பு குறைவு. எனவே, கிரெடிட் ஸ்கோர் பெறுவதற்காகவாவது, குறைந்த வட்டியில் கிடைக்கும் கடன்களை வாங்கி, அதைச் சரியாகத் திரும்பச் செலுத்துவதன் மூலம் கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

5. அளவுக்கதிகமான கடன்!

கடன்

ஒருவர் அதிக அளவில் கடன் வைத்திருப்பதும் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும். சம்பாதிக்கும் வருமானத்தைவிட, அதிகமாகக் கடன் இருந்தால், அவரால் கடனுக்கான இ.எம்.ஐ தொகையை முறையாகச் செலுத்த முடியாது. இதனால் தரப்பட்டிருக்கும் கடன் மீதான ரிஸ்க் அதிகமாகும். அப்போது கிரெடிட் ஸ்கோர் குறையும். அதனால், கடன் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது

ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர், கடனைத் திருப்பிச் செலுத்திய விவரங்கள் தொடர்பாக 35%, தற்போது இருக்கும் கடன்களுக்கு 30%, தற்போது இருக்கும் கடன் வகைகள் தொடர்பாக 10%, முந்தைய கடன் விவரங்கள் தொடர்பாக 15%, புதிதாக விண்ணப்பித்திருக்கும் கடன்களுக்கு 10% என்கிற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதில் ஏதேனும் தவறான அணுகுமுறையை வாடிக்கையாளர் கையாண்டிருந்தால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.



source https://www.vikatan.com/business/finance/5-mistakes-which-affects-your-credit-score-cibil-score

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக