Ad

செவ்வாய், 8 ஜூன், 2021

''ப்ளஸ் டூ தேர்வு ரத்து - தனியார் பள்ளிகளில் முறைகேடுகள் அதிகரிக்கும்!'' -எச்சரிக்கும் கல்வியாளர்கள்

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 'ப்ளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து' என்ற முடிவை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் உயர்கல்வி சேர்க்கை நடைமுறைகள் என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் இப்போது அலையடிக்க ஆரம்பித்துவிட்டன!

கொரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அண்மையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான ப்ளஸ் டூ தேர்வை ரத்து செய்து அறிவித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் என மாநில அரசுகளும் அடுத்தடுத்து ப்ளஸ் டூ தேர்வு ரத்து அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால், தமிழ்நாட்டு சூழலில், 'தேர்வு ரத்து முடிவை அரசு எடுக்கக்கூடாது' என்ற குரல் பலமாக ஒலித்தது.

மாணவிகள்

''ப்ளஸ் டூ தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிற மிக முக்கியமான தேர்வு. உயர் கல்வியில் தாங்கள் விரும்பும் துறைகளில் சேர்ந்து படித்து, முன்னேற்றத்தைக் காணும் கனவுகளோடு மாணவர்கள் இத்தனை ஆண்டுகாலமாக தயாராகி வந்துள்ளனர். இப்போது திடீரென தேர்வு ரத்து என அறிவித்தால், அவர்களது எதிர்காலக் கனவுகள் சிதைந்துபோகும்.

மேலும், கலைக் கல்லூரிகளில் ஆரம்பித்து பொறியியல், மருத்துவம் என உயர் கல்வி பயில்வதற்கும் அடிப்படைத் தகுதியாக ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் அத்தியாவசியமாக இருந்துவருகிறது. எனவே, காலந்தாழ்த்தியாவது நடத்தியே ஆகவேண்டும்!'' என்ற நிபந்தனையோடு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையே மத்திய அரசின் தேர்வு ரத்து முடிவை விமர்சித்தும் ஆதரித்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் பேசிவந்தன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், 'சி.பி.எஸ்.இ தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு, நீட் தேர்வை மட்டும் ஏன் ரத்து செய்ய மறுக்கிறது?

நுழைவுத் தேர்வை திறனறிவுத் தேர்வு என்று ஆக்கி, பள்ளிப் பாடத் திட்டங்களுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை தங்களது முழு அதிகாரத்தின்கீழே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்தவும் கல்லூரிகளில் சேருவதற்கு இதுபோன்ற நுழைவுத் தேர்வே மீண்டும் நடைமுறையாக்கப்படும் என்பதைத் திட்டமிட்டு புகுத்தவே இந்த ஏற்பாடு நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் நிபுணர்களிடையேயும் கல்வியாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

கி.வீரமணி

எனவே தமிழ்நாடு அரசு ப்ளஸ் டூ பொதுத்தேர்வை ரத்து செய்தால், அது தகுதி - திறமை பேசி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்ணைக் குத்தும் - காலங்காலமாய் நடந்துவரும் சூழ்ச்சி வலையில் சிக்கவைப்பதாகவே ஆகிவிடும்' என்று எச்சரித்திருந்தது.

தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் இதே கருத்தோட்டத்தில், தேர்வு ரத்து முடிவை எதிர்த்துவந்தன. ஆனால், அ.தி.மு.க அணியில் உள்ள கட்சிகள், கொரோனா தொற்றுப் பாதிப்பை முன்வைத்து தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தன. இதையடுத்து பெற்றோர், ஆசிரியர், மாணவர் மற்றும் கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பிலும் இதுகுறித்த நீண்ட ஆலோசனையைப் பெற்ற தமிழக அரசு இறுதியாக, 'ப்ளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து' என்ற முடிவை அறிவித்தது.

இந்த விவகாரம் குறித்து 'நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க'த்தின் மாநிலத் தலைவர் ராமுவிடம் பேசியபோது, ''ப்ளஸ் டூ பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துவிட்டது. இந்த நிலையில், மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதிப்பெண்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வழங்குவது குறித்து அரசு நியமித்துள்ள வல்லுநர் குழு என்ன முடிவை அறிவிக்கிறதோ அதையே நாங்களும் செயல்படுத்துவோம்.

மருத்துவத் துறையில் படிப்பதற்கு, நீட் தேர்வு அவசியம் என்ற சூழல் இப்போது இருந்துவருகிறது. அதேசமயம் தமிழ்நாடு அரசோ, 'நீட் தேர்வு நடத்தமாட்டோம்' என்பதில் உறுதியாக இருந்துவருகிறது. இந்தச் சூழலில், ப்ளஸ் டூ மதிப்பெண்களை வைத்துத்தான் மருத்துவப் படிப்புகளுக்கான தகுதியைத் தீர்மானிக்க முடியும்.

மாணவிகள்

எனவே, மதிப்பெண் வழங்குவது குறித்தான எங்களது ஆலோசனையையும் அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். அதாவது, கடந்த ஆண்டு 11-ம் வகுப்பில் மாணவர் பெற்ற மதிப்பெண்களில் 50%, அதே மாணவன் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களிலிருந்து 25%, மீதம் உள்ள 25% மதிப்பெண்களை ஏற்கெனவே கடந்த 4 மாதங்களாக நடத்தப்பட்ட ப்ளஸ் டூ பாடத்திட்ட வகுப்புகளில் நடத்தப்பட்ட டெஸ்ட்களில் மாணவர் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மாணவரது பள்ளி வருகைப் பதிவேடு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மதிப்பெண்ணை வகைப்படுத்தலாம்.

பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் சூழலில், தனியார் நிறுவனங்களால் நடத்தப்பட்டுவரும் பள்ளிகளில், மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. அரசுதான் இதைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

அடுத்து, தனியார் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை முறை என்பது அவரவர் தனிப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வாய்ப்புள்ளது. இப்படி தனித்தனியான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டால், அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே இதனைக் கண்காணித்து தடுத்து நிறுத்தும்பணியும் அரசுக்குத்தான் இருக்கிறது!'' என்கிறார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற கல்வியாளர் நெடுஞ்செழியன், ''சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வை ரத்து செய்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்து விட்டதாலேயே, நாமும் உடனடியாக ப்ளஸ் டூ தேர்வு நடத்துவதா, வேண்டாமா என்பதை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

ராமு - நெடுஞ்செழியன்

தேர்வு ரத்து என்பதால், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண்களை வழங்குவது உள்ளிட்ட விவரங்களையெல்லாம் வருகிற 14-ம் தேதிக்குப் பிறகுதான் அறிவிக்கப்போவதாக மத்திய அரசு சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே சி.பி.எஸ்.இ பள்ளிகளில் நிறைய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் எவ்வாறு மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் நிதானமாகப் பார்த்தறிந்து, அதில் உள்ள நிறை, குறைகளைத் தெரிந்துகொண்டு, நமது மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் நாம் என்ன செய்யலாம் என்பதை நிதானமாக ஆராய்ந்து ஒரு முடிவெடுத்து, அதன்பின்னர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் தமிழக அரசு.

ஏனெனில், தமிழ்நாட்டில் 85 % மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில்தான் பயின்று வருகிறார்கள். இதில் தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் என இருதரப்பினரும் இருக்கிறார்கள். இந்த நிலையில், சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளி, அரசுப்பள்ளி என 3 தரப்பிலும் மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் வித்தியாசம் காணப்படுமாயின் அதனால், அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிற வாய்ப்பு இருக்கிறதா என்பதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஏனெனில், தனியார் பள்ளி நிறுவனங்களில், மதிப்பெண் வழங்குவதில் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

மாணவிகள்

பொதுவாக கல்வித்துறையில், என்ன மாதிரியான முடிவுகளை நடைமுறைப்படுத்தினாலும் அதுகுறித்து முன்கூட்டியே அதிகாரபூர்வமாக அறிவிக்கவேண்டும். அப்படியிருந்தால்தான் மாணவர்களும் முன்கூட்டியே தங்களைத் தயார் செய்துகொள்ள முடியும். ஊரடங்கு காலகட்டத்தில், ஆன்லைன் வகுப்புகள்தான் நடந்திருக்கின்றன. பாடக் குறைப்பு செய்திருந்தாலும்கூட ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களுக்கு 100% புரிதல் ஏற்பட்டிருக்காது. இந்தநிலையில், இப்போது திடீரென பொதுத்தேர்வை ரத்து செய்வதும், அவசரம் அவசரமாக மாணவர்களை உயர்கல்விக்கு அனுப்பிவைப்பதும், இந்தப் பேரிடர் காலத்தில் அவசியம்தானா? ஏற்கெனவே ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறையாக கற்றிருக்கும் மாணவன் உயர்கல்வியை எப்படிப் புரிந்து படிக்கமுடியும்?

அடுத்து, தமிழ்நாட்டில், நீட் தேர்வு நடத்தப்படுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. நீட் தேர்வு முறையினால், தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது கடந்த சில ஆண்டுகளிலேயே தெளிவாகியிருக்கிறது. அதாவது, கடந்த காலத்தில் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு எடுத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அதேபோன்று தற்போதும் நீட் தேர்வு ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் குறித்தப் புள்ளிவிவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் தமிழக அரசு நல்லதொரு முடிவை எடுக்கவேண்டும்.

நீட் தேர்வு

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, 'நீட் தேர்வு நடைமுறையின் எந்தச் சூழ்நிலையிலும் கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது; நீட் தேர்வில், நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சீட் இல்லை என்றே சொல்லமாட்டோம்' என்றெல்லாம்தான் அறிவித்தார்கள். ஆனால், நடைமுறையில் அது உண்மையல்ல என்பது தெரிந்துவிட்டது. ப்ளஸ் டூ தேர்வில் 35 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும். ஆனால், அதுவே நீட் தேர்வில் 16-லிருந்து 17% மதிப்பெண்கள் பெற்றுவிட்டாலே தேர்ச்சியாகத்தான் கணக்கிடப்படுகிறது. இப்படி குறைந்தளவு மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்ற ஒரு மாணவன் பண வசதி படைத்தவனாக இருந்தால், நிச்சயம் மருத்துவப் படிப்பு படித்துவிட முடியும் என்கிறபோது, அங்கே கல்வித்தரம் சமரசம் செய்துகொள்ளப்பட்டுவிட்டது என்றுதானே அர்த்தம்!

Also Read: லடாக்: உறைய வைக்கும் பனி; சுழற்சி முறையில் சீன இராணுவ வீரர்கள்; புதிய ரக ஏவுகணைகள்!- நிலவரம் என்ன?!

உதாரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட் ஆஃப் மார்க் 500 என்றால், 499 மதிப்பெண்கள் எடுத்த ஒரு மாணவனுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காமல், அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுயநிதிக் கல்லூரிகளில் போய் படிக்கவேண்டிய சூழல்தான் ஏற்படும். அங்கே குறைந்தபட்சம் கல்விச்செலவாக அந்த மாணவனுக்கு 4 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஆனால், அந்த மாணவனிடம் இந்தளவு பண வசதி இல்லையெனில், அவன் படிப்பைத் தொடரமுடியாமல் விட்டுக்கொடுத்துவிட்டு வெளிவரத்தான் வேண்டும். இப்படி அவன் விட்டுச் சென்ற இடத்தில், குறைவான மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன் 4 லட்சம் ரூபாயைக் கட்டிப் படித்துவிட முடியும். ஆக, நன்றாகப் படித்து மதிப்பெண் பெற்ற மாணவனுக்கும்கூட பண வசதி இல்லையென்றால் படிக்கமுடியாது என்கிற நிலை ஏற்பட்டால், அங்கே கல்வி சமரசம் செய்துகொள்ளப்படுகிறது என்பதுதானே பொருள்.

நீட் தேர்வு கெடுபிடிகள்

ஆக, கிராமப்புறங்களில் உள்ள வசதியற்ற மாணவர்கள் நீட் தேர்வினால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல.... இந்த ஊரடங்கு காலகட்டத்தில், மாநில பாடத்திட்டத்தில் 40% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது; சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், நீட் தேர்வை நடத்துகிறவர்கள் பாடத்திட்டக் குறைப்பு பற்றி இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவே இல்லை. எனவே இந்த பாதக அம்சங்களை எல்லாம் கருத்திற்கொண்டு, தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!'' என்கிறார் அழுத்தமாக.

Also Read: `இது டிரெய்லர்தான்; இனிமேல்தான் மெயின் பிக்சர்' - வடபழனி கோயில் இடத்தை மீட்ட அமைச்சர் சேகர்பாபு!

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து மற்றும் நீட் தேர்வு முறை குறித்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கம் கேட்டு தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணனிடம் பேசியபோது, ''ப்ளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 'தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடக்கூடாது' என்பதும் தி.மு.க-வின் திடமான முடிவு! அதனால்தான், நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அரசு அமைத்துள்ளது.

சமூக நீதியின் அடிப்படையில் செயல்படக்கூடிய நீதியரசரை தலைமையாகக் கொண்ட இந்தக் குழு விரைவில் இதுகுறித்த அறிக்கையை அரசிடம் அளித்துவிடும். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். இதற்கிடையே, 'ப்ளஸ் டூ பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்ட சூழலில், நீட் தேர்வு நடத்தப்படக்கூடாது' என்று நம் முதல்வரும் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சரவணன்

'நாடு முழுக்க நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும்போது, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி நீட் தேர்வுக்கு விலக்களிக்க முடியும்?' என்று சிலர் கேட்கிறார்கள். கல்வியும் சுகாதாரமும் மாநிலப் பட்டியலில்தான் இருக்கின்றன. இந்த வரிசையில் மருத்துவப் படிப்பு என்றாலும் மருத்துவக் கல்லூரி என்றாலும் அது மாநிலப் பட்டியலின் வரையறைக்குள்தான் வரும். எனவே, தமிழ்நாட்டில் இனி நீட் தேர்வு கிடையாது என்று திடமாக நம்பலாம்.

அடுத்து, ப்ளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படும் என்றாலும் தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கான மதிப்பெண்களை எதன் அடிப்படையில் வழங்கவேண்டும் என்பதுகுறித்து ஆராய்வதற்காக வல்லுநர் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளது. எனவே, மிக விரைவிலேயே இதற்கும் நல்லதொரு தீர்வு எட்டப்படும்!'' என்கிறார் உறுதியாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/educationalists-warning-in-plus-two-examination-cancel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக