இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நோய்த் தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளபோதிலும், பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகளைத் தவிர்த்து வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு தடுப்பு மருந்துகளை மக்கள் தேவைக்காக இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகில் அதிக அளவிலான கொரோனா தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டுவரும் நாடாக இந்தியா திகழ்கிறது. அப்படியிருந்தும், அதீத தேவை காரணமாகவும், வெளிநாடுகளின் நிதி உதவியுடன் உற்பத்தி செய்வதால் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுவருவதாலும், உள்நாட்டில் தடுப்பூசிகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கத் தடுப்பு மருந்து தயாரிப்பின் மூலப்பொருள்கள் பிரதான தேவையாக இருக்கின்றன. ஆனால், அந்த மூலப்பொருள்கள் இந்தியா வசம் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. அதன் காரணமாக இந்தியா தடுப்பூசி உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களை அமெரிக்காவிடம் கேட்டுவருகிறது. முன்னதாக, அமெரிக்க அரசு மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தது. அதன் காரணமாக, இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகளின் வேகம் குறைந்து காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வீரியம் அடைந்துவரும் நிலையில், இந்திய அரசு கடந்த சில வாரங்களாக மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி உதவுமாறு அமெரிக்க அரசை வலியுறுத்திவருகிறது. ஆனால், அமெரிக்க அரசோ இதுவரையிலும் இந்தியாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
இது தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன், சீரம் நிறுவனத்தின் தலைவர் பூனவல்லா அமெரிக்க அரசுக்குக் கோரிக்கைவைத்திருந்தார். ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்தை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்துவரும் நிலையில், ஏற்றுமதிக்கான தடையைத் தளர்த்தினால் மட்டுமே இந்தியாவில் தங்களால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு உதவ முடியும் என்று ஜோ பைடன் நிர்வாகத்தை வலியுறுத்தியிருந்தார். அதேபோல், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அமெரிக்க அரசிடம் தடையை நீக்கி உதவுமாறு தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்துவருகிறார்.
ஆனால், பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு தற்போதைய நிலையில் மூலப்பொருள்களை அளித்து உதவ முடியாது என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவின் கோரிக்கைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ``அமெரிக்காதான் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு. அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் அமெரிக்காவுக்குத் தடுப்பூசியின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால், அதீத தடுப்பூசி தேவையைக் கருத்தில் கொண்டு போர்க்கால ராணுவத் தயாரிப்பு சட்டத்தை அமெரிக்காவில் அமல்படுத்தியிருக்கிறோம். இந்தச் சட்டத்தின் ஷரத்துகளின்படி, உள்நாட்டு மருந்து நிறுவனங்களுக்கு மட்டுமே மூலப்பொருள்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இந்த நேரத்தில் எங்களால் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. அமெரிக்க மக்கள் அனைவரையும் நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாப்பதுதான் அரசின் முக்கியக் கடமை.
அமெரிக்க மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டால், அதன் மூலம் எல்லை நாடுகளுக்கும் வெளிநாடுகளுக்கும் கொரோனா தொற்று பரவல் நிகழாது. அதிகப்படியான பாதிப்பைச் சந்தித்துவரும் அமெரிக்காவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் ஒரு வகையில் உலக மக்களைக் காக்கும் நடவடிக்கையாக இது மாறும்" என்றார்.
அமெரிக்க அரசின் இந்த நிர்வாக முடிவுக்கு எதிராகப் பரவலான அதிருப்தி குரல்கள் அமெரிக்காவின் நாடாளுமன்றத்திலேயே ஒலித்துவருகின்றன. அரசின் முடிவை மாற்றி, இந்தியா மீதான தடையைத் தளர்த்தி தடுப்பூசி மூலப்பொருள்களை உடனடியாக இந்தியாவுக்கு வழங்கி உதவ வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்வர்ட் மார்க்கே, கிரிகோரி, மீக்ஸ் உள்ளிட்ட பலரும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "அமெரிக்காவின் நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால், இங்கு மக்களின் தேவைக்கு மிகவும் அதிகமாகவே தடுப்பு மருந்து இருப்பு இருக்கிறது. அப்படி இருக்கும்போது இந்தியா மற்றும் பிரேசில் என அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு தாராளமாக அளித்து உதவலாம். ஆனால், அமெரிக்க அரசு உதவ மறுத்துவருகிறது. உலக மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்காவுக்கு உள்ளது என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்" என்று பைடன் அரசை வலியுறுத்திவருகின்றனர்.
பைடன் அரசின் இந்த நிர்வாக முடிவுக்கு அமெரிக்கவாழ் இந்தியர்கள் மற்றும் அமெரிக்கன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் கமிட்டி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அமெரிக்கன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ்-ன் துணைத் தலைவர் மைரான் பிரில்லியன்ட் கூறுகையில், ``கொரோனா நோய்த் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து நிற்கிறது. இந்த நேரத்தில் நாங்கள் கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்குத் தேவைக்கேற்ப கோடிக்கணக்கில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை அமெரிக்கா உடனடியாக அனுப்பிவைத்து அந்த தேசங்கள் மீண்டெழ உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் போதிய அளவில் தடுப்பூசி இருப்பு உள்ளதால் அதிபர் பைடன் உடனடியாக இந்தியா மீதான ஏற்றுமதி தடையைத் தளர்த்திவிட்டு, தடுப்பு மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருள்களை அனுப்பி உதவ வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். `உலகின் தடுப்பூசி தலைநகரம்’ என்று எல்லோராலும் அறியப்படும் இந்தியா தற்போது உற்பத்திக்கான மூலப்பொருள்கள் குறைவாக இருப்பதாக தவித்துக்கொண்டிருக்கிறது. பைடன் அரசு இந்தியா மீதான தடையை நீக்கி உதவுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/america-denied-indias-request-for-lifting-ban-on-vaccine-raw-materiel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக