நெல்லையை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உச்சிஸ்ட விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது. கோபுரத்துடன்கூடிய இந்தக் கோயில் பழைமை வாய்ந்தது. பல ஆண்டுகளாக புதர்மண்டிக்கிடந்த இந்தக் கோயில், சில ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்டது.
கோயிலின் அருகில் கிறிஸ்துவர்களின் இரு கல்லறைத் தோட்டங்கள் இருக்கின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக கல்லறைக்காகவே இந்த இடம் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அங்கு இறந்தவர்களின் உடல்களைப் புதைத்து கல்லறை கட்டியிருக்கிறார்கள்.
சில வருடங்களாக விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியதால், இந்தக் கல்லறைத் தோட்டத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாகப் பல முறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கல்லறைத் தோட்டத்துக்காகவே வாங்கப்பட்ட இடம் என்பது நிரூபிக்கப்பட்டதால், அங்கு புதைப்பதைத் தடுக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இருப்பினும் இந்து அமைப்பினர் அங்குள்ள கல்லறைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்திவந்தார்கள்.
இந்தநிலையில், அங்குள்ள உடையார்பட்டி திருஇருதய ஆலயத்துக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 40-க்கும் அதிகமான கல்லறைகளை உடைத்துச் சேதப்படுத்தினார்கள். சுற்றுச் சுவரையும் கடப்பாரையால் குத்தி சேதப்படுத்தியிருக்கிறார்கள்.
இது பற்றி தகவல் கிடைத்ததும், உடையார்பட்டி திருஇருந்தய ஆலயத்தின் முன்பாக கிறிஸ்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சேதப்படுத்தப்பட்ட கல்லறைகளைச் சீர்படுத்தித் தருவதாகவும், இந்தச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்வதாகவும் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் கலைந்து சென்றார்கள்.
கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியநிலையில், இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு அதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதனால் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் உடையார், ஐயப்பன், கந்தன் துரை உள்ளிட்ட எட்டுப் பேரை போலீஸார் கைதுசெய்தார்கள். போலீஸாரின் நடவடிக்கை காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட இருந்த மோதல் தவிர்க்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.
இந்தநிலையில், கல்லறைத் தோட்டத்தில் இருந்த மூதாதையர்களின் கல்லறைகளை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கத்தோலிக்க ஆயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல்வஹாப், அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்.பி-யான விஜிலா சத்யானந்த்,, எம்.எல்.ஏ-வான ஏ.எல்.எஸ்.லட்சுமணன், கம்யூனிஸ்ட் கட்சியினர், ம.தி.மு.க., இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கல்லறை உடைப்பைக் கண்டித்து ஆயருடன் மனு அளிக்க வந்திருந்தனர்.
source https://www.vikatan.com/news/controversy/eight-people-were-arrested-for-damaging-graves-near-river-thamirabharani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக