Ad

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

கிருஷ்ணகிரி: நீதிமன்ற வளாகத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை! - என்ன காரணம்?

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியின் பாதுகாவலராக இருந்தவர் காவலர் அன்பரசன். இவர் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் மேல் மாடியில், தன்னுடைய கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே நெற்றியில் சுட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிருஷ்ணகிரி பொதுமக்களிடையேயும், காவல்துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

கிருஷ்ணகிரி நகரப் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். ஆயுதப்படை பிரிவில் காவலராக இருந்து வந்தார். பிறகு கடந்த ஆறு மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியிடம் தனிப் பாதுகாவலராகப் பணியாற்றிவருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை முதல் அன்பரசனைக் காணவில்லை என்றும், அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லி அவருடைய உறவினர்கள் தேடிவந்தனர்.

இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் மாவட்ட நீதிபதி அமர்வு மேல் மாடியில், அன்பரசன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சடலமாகக் கிடந்திருக்கிறார். இதை நீதிமன்ற தூய்மைப் பணியாளர்கள் நேற்று காலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே நீதிமன்ற அலுவலர்களுக்கும், மாவட்ட நீதிபதிக்கும், பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மனைவியோடு அன்பரசன்

அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதரும் காவல்துறை உயரதிகாரிகளும் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்கள். அவர்களின் முதற்கட்ட விசாரணையில் அன்பரசன் தனது கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே நெற்றியில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்றும், தற்கொலைக்குப் பணிச்சுமை காரணமா அல்லது குடும்பச் சூழ்நிலை காரணமா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

காவலர் அன்பரசன்

`அன்பரசனுக்குக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது. அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருடைய மனைவி கடந்த யுகாதி பண்டிக்கைக்குப் பெற்றோர் வீட்டுக்குச் சென்றவர் மீண்டும் வரவில்லை. நேற்று முன்தினம் அன்பரசன் அவருடைய மாமனார் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு சண்டை போட்டு கண்ணாடிகளைச் சேதப்படுத்திவிட்டு வந்ததாகத் தெரிகிறது’ என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

சம்பவ இடத்துக்கு வந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ``இந்தச் சம்பவம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. விசாரணை மேற்கொண்டுவருகிறோம். விசாரணை முடிவில் அனைத்து உண்மைகளும் தெரியவரும்'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/krishnagiri-policeman-commits-suicide-by-shooting-himself

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக